• May 2, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.

மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது.

இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்தக விழாவில்…

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ஜெயராம், “ ஏழு, எட்டு வருடங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பிற்காக நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். நான் இப்போது சொல்லப்போவது உண்மையில் நடந்தக்கதை. 

காஷ்மீரில் இப்போது தாக்குதல் நடந்த ஏரியா மாதிரியான ஒரு இடத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிதான் அது. இரண்டு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

எனக்கு படப்பிடிப்பு தொடங்காமல் இருந்ததால் மற்றொரு இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன்.  கன்(Gun) ராஜேந்திரன் என்று  ஒருத்தர் இருப்பார்.  சினிமாவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் அவரைத் தெரியும். படத்திற்காக டூப்ளிகேட் கன்(Gun) சப்ளை செய்வார்.

எங்கள் படப்பிடிப்பிற்காக அவர் கன் எல்லாம் செட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவருடன் நானும் இருந்தேன்.  ராணுவ அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தார்கள். நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்களை யார் கன் எல்லாம் எடுத்துக்கொண்டு இந்த இடத்திற்கு வரச்சொன்னது என்று கேட்டார்கள்.

நான் நடிகர், படப்பிடிப்பிற்காக இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னேன். கன் எல்லாம் அந்த இடத்திற்கு எடுத்துக்கொண்டு செல்லவே கூடாது. ஆனால் கன்  ராஜேந்திரன் நிறைய கன்களை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு உட்காந்திருக்கிறார்.

ஜெயராம்
ஜெயராம்

அந்த ராணுவ அதிகாரிகளில் தமிழ் பேசக்கூடிய அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். உயர் அதிகாரிகளிடம் படப்பிடிப்பிற்காகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி தமிழில்  பேசக்கூடிய அந்த அதிகாரி என்னை அழைத்துச் சென்று ஒரு இடத்தில் உட்கார வைத்தார்.

அப்போது அவரிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். மலை உச்சியில்தான் அவருக்கு வேலை. 12 அல்லது 15, 20 மணி நேரம் கூட அவருக்கு வேலை இருக்கும். ஒரே இடத்தில் நிற்க வேண்டும். அவர் அணிந்திருக்கும் புல்லட் ப்ரூப் ஆடை கையில் வைத்திருக்கும் ஆயுதம் எல்லாம் சேர்ந்து  25 கிலோவுக்கு மேல் இருக்கும்.

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

15, 20 மணி நேரம் நான் வேலைப் பார்த்த பிறகு நான் தங்கும் இடத்திற்கு சென்று சிரித்துக்கொண்டு தூங்குவதற்கு காரணம் என்ன என்பதைக் காண்பிக்கிறேன் என்று அவர் ஃபோனில் எனக்கு காண்பித்தது ‘பஞ்சதந்திரம்’. இந்தப் படத்தைத் தினமும் பார்த்து சிரித்துவிட்டுதான்  தூங்குவேன் என்று சொன்னார். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்படிபட்ட வசனங்களையும், வாய்ப்பையும் கொடுத்த கிரேஸி மோகன் சாருக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாக ஜெயராம் பேசியிருக்கிறார்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *