கடந்த திங்கட்கிழமை நடிகர் அஜித் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.

விருது பெற்ற கையோடு இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.

நடிகர் அஜித் குமார்

இது நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் கொடுக்கும் பேட்டி என்பதால், அவர் பேசிய பல விஷயங்களும் இணையத்தில் வைரலாயின.

‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் குறித்தும், அவர் நடித்த படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

அஜித் பேசுகையில், “நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். என்னிடம் ஒரு பத்திரிகையாளர், ‘எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார்.

தொடக்கத்தில் என்னுடைய பிசினஸில் சில கடன்கள் ஏற்பட்டன. அப்போது சில படங்களில் நடித்து, வெற்றிகரமாக வந்து என்னுடைய கடன்களைத் திரும்ப அடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஐடியாவாக இருந்தது.

அப்போது அந்தப் பத்திரிகையாளர், ‘பணத்திற்காகத்தான் நீங்கள் வந்தீர்களா?’ எனக் கேட்டார்.

அஜித்
அஜித்

அப்போது நான் அவரிடம், ‘எத்தனை பேருக்கு வாங்கியதைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் இருக்கிறது? இந்தச் செயலுக்காக என்னை ஏன் பாராட்டாமல் இருக்கிறீர்கள்?’ எனக் கூறினேன்.

தொடக்கத்தில் நான் ஆடிஷன்களில் பங்கேற்றேன். கிடைக்கும் வாய்ப்புகளுக்கு நான் தகுதியானவன் என நிரூபிக்க வேண்டியிருந்தது. நான் திரைத்துறையில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் வரவில்லை.

என்னுடைய கடனை அடைப்பதற்கு எனக்கு வேலை வேண்டியிருந்தது. என்னுடைய தொடக்கக் காலத்தில் எனக்கு தமிழ்கூட பெரிதாகப் பேசத் தெரியாது.

என்னுடைய முதல் சில திரைப்படங்களுக்கு மற்ற நடிகர்கள்தான் டப்பிங் செய்தார்கள்.

என்னுடைய ஆறாவது திரைப்படத்தில்தான் நான் எனக்கே டப்பிங் செய்தேன்.

அப்போதும் என்னுடைய தமிழ் உச்சரிப்பிற்காக நான் கேலி செய்யப்பட்டேன். அதன் பிறகு என்னுடைய தமிழில் கவனம் செலுத்தி, வேலைகளைக் கவனித்தேன்.

முழு கவனத்துடன் என் வேலைகளை மேற்கொண்டேன். ‘நான்தான் சிறந்தவன்’ எனச் சொல்லவில்லை. நான் செய்த விஷயங்களுக்கு நான் நேர்மையாக இருந்திருக்கிறேன்.

நான் நடித்ததில் ‘வாலி’ திரைப்படம் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். அதற்கு முன்பும் மக்களுடைய அன்பு எனக்கு கிடைத்திருந்தது.

வாலி திரைப்படம்
வாலி திரைப்படம்

ஆனால், ‘வாலி’ திரைப்படம் எனக்குப் பல கதவுகளைத் திறந்து வைத்தது. நான் நடித்த சில கதாபாத்திரங்களில் எவராலும் நடிக்க முடியும் என நான் உணர்கிறேன்.

ஆனால், ‘வாலி’, ‘மங்காத்தா’, ‘பில்லா’, ‘வரலாறு’ போன்ற திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் எனக்கு சரியாகப் பொருந்தின.

என்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டுவதற்கு இத்திரைப்படங்கள் எல்லாம் எனக்கு உதவின. என்னாலும் இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என என்னையே இத்திரைப்படங்களெல்லாம் சப்ரைஸ் செய்தது.” எனப் பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *