
நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான படம் காசி (2001). அந்தப் படத்தில் வில்லக் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார் விஷ்ணு பிரசாத். இதுதான் அவரின் முதல் படம். ஆனால், பார்க்கும் எல்லோருக்கும் அவர் மீது வெறுப்பு வரும் அளவு நடிப்பில் பின்னியிருப்பார்.
அதைத் தொடர்ந்து, ‘கையெதும் தூரத்தில்’, ‘ரன்வே’, ‘மாம்பழக்காலம்’, ‘லையன்’, ‘பென் ஜான்சன்’, ‘லோகநாதன் IAS’, ‘பாதாகா’ போன்ற மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் ‘ஸ்த்ரீபதம்’, ‘ராக்குயில்’, ‘சுயம்வரம்’ போன்றவற்றில் வில்லன் வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த நிலையில், கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த விஷ்ணு பிரசாந்த், அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காகத் திட்டமிடப்பட்டது. அவரது மகளே கல்லீரல் தானம் செய்ய முன்வந்தாலும், சிகிச்சைக்காக ரூ.30 லட்சம் தேவைப்பட்டது. எனவே, விஷ்ணு பிரசாந்தின் குடும்பம் நிதி திரட்ட முயற்சி செய்தது.
இதற்கிடையில், அவரது உடல்நிலை மோசமானதால், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று (மே1) காலமானார். அவருக்கு இப்போது வயது 49. அவரது மரண செய்தி, மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.