
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி வாய்ப்பை இழந்து நிற்கும் போதும், இன்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம் என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை குறிப்பிடுவார்கள் பலரும். கட்சி வித்தியாசமின்றி பாராட்டு பெற்ற இந்த சட்டத்தின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன, முறைகேடுகள் அம்பலம் படுத்தப்பட்டுள்ளன. ஆர்.டி.ஐ.ஆர்வலர்கள் பலர் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தீர்வு காண்பதில் முனைப்பு காட்டி வ்ருகின்றனர்.
அதேநேரம் இச்சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களைத் தர மறுப்பதும் அங்கங்கே நடப்பதுண்டு.
ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் ஒன்று தகவல் கேட்டவரை மட்டுமின்றி நம் எல்லாரையுமே திடுக்கிட வைப்பதாக இருக்கிறது.
‘ஆம், உயிர், உடமைக்குப் பாதுகாப்பில்லாத காரணத்தால் விவரம் வழங்க இயலாது’ என பொட்டிலடித்தால் போன்ற ஒரு பதில் தரப்பட்டுள்ளது. பதிலைத தந்திருப்பது இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அலுவலகம்.
இப்படியொரு பதிலைக் கேட்டு விக்கித்துப் போய் இருக்கும் வழக்கறிஞர் ராமலிங்கத்திடம் பேசினோம்.
”எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. இப்ப சென்னையில் வசித்து வருகிறேன். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகம். தமிழக பா.ஜ.க.வின் ஆன்மிகப்பிரிவு செயலாளராகவும் இருக்கேன்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலிருக்கும் உறுமன்குளம் என்ற கிராமத்துல பழமையான சிவன் கோவில் ஒண்ணு இருக்கு. ‘சீத்தலை சிவலிங்கேஸ்வரர் திருக்கோவில்’ என்றழைக்கப்படுகிற இந்தக் கோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்னு சொல்றாங்க. இந்தக் கோவில் மற்றும் அதற்குச் சொந்தமான சொத்துகள் தொடர்பா சில தகவல்கள் தேவைப்படவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பிச்சேன்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கிற கோவில்தானா, செயல் அலுவலர் இருக்காங்களா, பூஜை முதலான விஷயங்கள் முறையா நடக்கிறா என்பன போன்ற கேள்விகள்தான்.
ஓரேயொரு கேள்வி கோவில் சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா, ஆமென்றால் பராமரிப்பவர் குறித்த விபரம் தரவும்னு கேட்டிருந்தேன், எல்லாக் கேள்விகளுக்கும் என்ன பதிலோ அதைத் தந்துட்டாங்க. கடைசியாக் கேட்டிருந்த அந்தக் குத்தகை தொடர்பான கேள்விக்கு மட்டும், ‘ஆமா, குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. உயிர், உடமைக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பொதுநலன் கருதி குத்தகைதாரர்கள் விவரம் வழங்க இயலாது’ங்கிற பதிலைத் தந்திருக்காங்க.

பதிலைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிடுச்சு. நான் கூட ஊர் மக்கள் மத்தியில் கோவில் தொடர்பா ஏதும் பகை இருக்கோனு நினைச்சு விசாரிச்சேன். மக்கள்கிட்ட அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை.

அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுல இருக்கிற கோவில் சொத்து குறித்து தெரிஞ்சுக்க அந்தக் கோவிலுக்குப் போற ஒவ்வொருத்தருக்கும் உரிமை இருக்கு. இப்படியிருக்கற சூழல ஒரு அரசு அதிகாரியே அந்தப் பதிலைத் தர மறுப்பதும், அதுக்குச் சொன்ன காரணமும் ரொம்பவே ஷாக்கா இருக்கு. என்னவொரு மனநிலையில் இருந்தா இப்படியொரு பதிலை சம்பந்தப்பட்ட அதிகாரி எனக்குத் தந்திருப்பார்னு நினைக்கத் தோணுது. ஆனா நான் இதை இப்படியே விடப்போறதில்லை. அடுத்து அப்பீலுக்குப் போகலாம்னு இருக்கேன். அங்க என்ன பதில் சொல்றாங்க பார்க்கலாம்’ என்கிறார் ராமலிங்கம்.