
இதுவரை மீனத்தில் பலம் இழந்து சஞ்சரித்த புதபகவான் தற்போது மேஷ ராசிக்குள் சஞ்சரித்துப் பலன் தரப்போகிறார். ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் போற்றப்படும் யோகங்களில் ஒன்று புதன் – சூரியன் இணையும் புதாதித்ய யோகம். ஒருவரின் ஜாதகத்தில் சூரியனும் புதனும் வலுவடைந்து இணைந்து நின்றால் அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்புக்கிடைக்கும். கணினித் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல காலமாக இந்தக் காலம் அமையும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்படிப் பல்வேறு நன்மைகளை வழங்கும் புதாதித்ய யோகம் மே மாதம் 14 ம் தேதிவரை நீடிக்கிறது. இந்த கிரகச் சேர்க்கை 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்கு 3 க்கும் 6 க்கும் உடைய கிரகம் புதன். சூரியன் 5 ம் இடத்து அதிபதி. சூரியன் மேஷ ராசியில் உச்சமடைவார். உச்சமடைந்த சூரியன் புதனோடு ராசியிலேயே இணைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு புதிய கம்பீரம் பிறக்கும். இதுவரை இருந்துவந்த பின்னடைவுகள் நீங்கும். முயற்சிகள் மேன்மையடையும். வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். மேஷ ராசிக்காரர்கள் தினமும் காலையில் சூரியனை வணங்கிப் பணிகளைத் தொடங்க தொட்ட காரியங்களில் வெற்றிகிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபத்துக்கு 2 க்கும் 5 க்கும் இடைய கிரகம் புதன். சூரியன் 4 ம் இடத்து அதிபதி. இருவரும் 12 ல் சென்று மறைவதால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தனாதிபதி புதன் சூரியனோடு சேர்ந்து சஞ்சரிப்பதால் மருத்துவ செலவுகள் வந்துபோகும். என்றாலும் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசாங்க அனுமதி கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்படும். தாய்வழியில் இருந்துவந்த பிரச்னைகளில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். தினமும் காலையில் கோளறு பதிகம் பாராயணம் செய்தோ அல்லது கேட்டோ வேலைகளைத் தொடங்க தீய பலன்கள் குறைந்து நற்பலன்கள அதிகரிக்கும்.
மிதுனம்
ராசி அதிபதி 11 ல் சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பது ஓர் அதிர்ஷ்டமான காலமாகக் கருத இடமுண்டு. இதுவரை களையிழந்து காணப்பட்ட உங்கள் தோற்றம் மாறும். முகத்தில் பொலிவு பிறக்கும். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் நல்ல முறையில் நிறைவேறும். சகோதரர்களிடம் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். அரசு வழியில் அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தினமும் பெருமாளை வணங்கித் தொடங்கும் சகல காரியங்களும் வெற்றிபெறும்.
கடகம்
10 ம் இடத்தில் சூரியனும் புதனும் இணைந்து சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டம் கடக ராசிக்குக் கலவையான பலன்களைக் கொடுக்கும். தனஸ்தானாதிபதியோடு விரையஸ்தானாதிபதி இணைந்திருப்பதால் பணவரவு அதிகரித்துக் காணப்பட்டாலும் செலவுகளும் அதற்கு ஏற்ப இருக்கும். நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் கூடுதல் கவனம் எடுத்துப் படிப்பது நல்லது. சிலருக்கு சின்னச் சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக விளங்கும். கணினி மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. இருக்கும் வேலையில் சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும். சிவாலயம் சென்று வில்வம் சமர்ப்பித்து வழிபட கடக ராசிக்காரர்களின் எண்ணங்கள் ஈடேறும்.
சிம்மம்
ராசி அதிபதி உச்சமடைந்து தனாதிபதியோடு இணைந்திருக்கும் இந்தக் காலகட்டம் அதிர்ஷ்டக் காற்று வீசும் காலம் என்றே சொல்லலாம். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை உங்களுக்குத் தீமை நினைத்தவர்கள்கூட மனம் மாறி நன்மைகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரிய நோய் இருந்ததுபோன்ற பிரமை விலகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. தொழிலில் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தொடங்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தினமும் நீர் மோர், பானகம் நிவேதனம் செய்து நரசிம்ம சுவாமியை வணங்கிவர சாதிக்கும் வல்லமையைப் பெறுவார்கள்.
கன்னி
ராசி அதிபதி எட்டில் சென்று சூரியனோடு மறைகிறார். `மறைந்த புதன் நிறைந்த வித்தை’ என்பது பழமொழி. எனவே 8 – ல் அமர்ந்து புதபகவான் பல மறைமுக நன்மைகளைத் தரவிருக்கிரார். அதேவேளையில் விரையஸ்தானாதிபதி சூரியன் உச்சமடைந்து காணப்படுவதால் வீண் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். தூக்கம் கெடும். அவ்வப்போது உடல் உபாதைகள் வாட்டும். என்றாலும் செல்வம் செல்வாக்கு அதிகரித்தே காணப்படும். தினமும் அம்பிகையை வழிபட்டுப் பணிகளைத் தொடங்க புகழ் கௌரவம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
துலாம்
மேஷத்தில் சூரியனோடு இணைந்து புதன் இணைந்து ராசியைப் பார்ப்பது மிகவும் நல்ல அம்சம் என்றே சொல்லலாம். பாக்கியஸ்தானாதிபதியான புதன் லாபஸ்தானாதிபதியான சூரியனோடு இணைவது அற்புதமான நற்பலன்களைக் கொடுக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு அக்கறை தேவை. உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் வந்து விலகும். தூக்கம் கெடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்துவந்த அவமானங்கள் விலகும். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. சித்திரை மாதத்தில் திருமணம் மேற்கொள்ள இருக்கும் தம்பதியர் சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமையில் கோதுமை தானம் செய்துபின் திருமணம் செய்துகொள்வது நல்லது. குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள மிகுந்த நற்பலன்கள் தேடிவரும். மனத்தால் மீனாட்சி சுந்தரேஷ்வரரை வழிபட்டு செயல்களைத் தொடங்குவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 10 க்குடைய சூரியன் 6 ல் சென்று மறைகிறார். கூடவே 8 க்கும் 11 க்கும் உடைய புதனும் இணைகிறார். வேலை பார்க்கும் இடத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. என்றாலும் பணவரவில் இருந்த தடைகள் விலகும். கொடுத்துத் திரும்பிவராமல் இருந்த பணம் கைக்குவரும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்குவரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமுகமாக இருக்கும். என்றாலும் ஆரோக்கியத்தில் சிறு அக்கறை செலுத்துவது நல்லது. புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர் வீண் வாக்குவாதங்களைத் தங்களுக்குள் தவிர்ப்பது அவசியம். ஞாயிற்றுக்கிழமை கோதுமைப்பொங்கல் செய்து சூரியனுக்கு சமர்ப்பணம் செய்வதன் மூலம் குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி அவருக்கு செந்நிற மலர்கள் சமர்ப்பித்து வழிபட சகல நன்மைகளும் உண்டாகும்.
தனுசு
பாக்கியஸ்தானாதிபதி சூரியன் 5 ல் சஞ்சரிப்பது சாதகமான ஒரு சஞ்சாரம் என்றே சொல்லலாம். மேலும் 7 க்கும் 11 க்கும் உடைய புதன் இணைவதால் சுபநிகழ்ச்சிகள் வரிசைகட்டும். சிலர் உறவினர்கள் நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். இளைஞர்களுக்குத் திருமண யோகமும் கூடிவரும். பணவரவில் இருந்த தொல்லைகள் விலகும். பூர்விக சொத்து தொடர்பான வழக்குகளில் நல்ல திருப்பம் காணப்படும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். வீடு மனை வாங்குவது குறித்துத் திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.
மகரம்
மகர ராசிக்கு 6 க்கும் 10க்கும் உடைய புதன் 4 ம் வீடான மேஷத்தில் பாக்கியஸ்தானாதிபதியோடு இணைந்து சஞ்சரிப்பது மிகவும் நல்ல பலன்களையே கொடுக்கும். கடன் தொகை அடைக்க வழி பிறக்கும். அலுவலகத்தில் இருந்த சாதகமற்ற சூழ்நிலை விலகும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் பிறக்கும். சிலர் புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் இதுவரை இருந்துவந்த பணிச்சுமை குறையும். தினமும் காலையில் எழுந்ததும் சூரியபகவானுக்கு அர்க்கியம் தந்து வணங்கிவர சகல விதங்களிலும் நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்
ஏழாம் வீட்டுக்கு அதிபதியான சூரியன் 3 ம் வீட்டில் உச்சமடைந்து 5 க்கும் 8 க்கும் உடைய புதனோடு இணைகிறார். எவ்வளவோ போராடியும் வெற்றிபெற முடியாமல் தவிர்த்தீர்களே இனி அவை வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்த நன்மைகள் தேடிவரும். சகோதர சகோதரிகளின் ஆதரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் தேடிவந்து உதவுவார்கள். பூர்விக சொத்து தொடர்பான பிரச்னைகள் சுமுகமாகும். ஆரோக்கியமும் மேம்படும். சிலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி ஆகியன வந்துபோகும். புதிய வீடு மனை வாங்கும் முன்பு நிதானம் தேவை. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை தரிசனம் செய்து செயல்களைத் தொடங்க அனைத்தும் வெற்றியாகும்.
மீனம்
ராசிக்கு 2 -ம் வீட்டில் 6 க்குடையவன் உச்சமடைவதால் நன்மைகள் அதிகரிக்கும். கடன் தீர வழிபிறக்கும். பணம் வரத் தொடங்கும். என்றாலும் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளிலும் சிக்கனம் தேவை. தாயார் வழி உறவினர்களால் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். மே இரண்டாம் வாரத்துக்கு மேல் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். துணிச்சலாகச் செயல்பட்டு வெற்றிகளை நோக்கிச் செல்லும் காலகட்டமாக இந்தக் காலம் அமையும். சனிக்கிழமைகளில் அனுமனை வழிபட்டுவர தைரியம் அதிகரித்துக் காணப்படும்.