• May 2, 2025
  • NewsEditor
  • 0

பட வெளியீட்டின் போது ரசிகர்கள் தங்கள் அபிமான ஹீரோக்களுக்கு கட் அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பது வழக்கம். ஆனால், சூர்யாவின் ரசிர்கர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்து, பட ரிலீஸை கொண்டாடியுள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ நேற்று வெளியாகியுள்ளது. அதன் ரிலீஸை முன்னிட்டு, சென்னை ரோகிணி திரையரங்கத்திற்கு வெளியே கூடியிருந்த பொதுமக்கள் 10 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணி வழங்கியிருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். பத்து வண்டிகளில் வந்திருந்த உணவு கொண்டுவரப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்துள்ளார்.

அன்னதானத்தின் போது..

சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதனை அடுத்து வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகச் சொல்கிறார்கள் . ஹீரோயினாக மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் எனப் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகளும் ஜரூராக நடந்து வருகின்றன. இந்நிலையில் ‘ரெட்ரோ’ வெளிவருவதற்கு முன்னர், தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், பொறுப்பு வகிப்பவர்களையும் சூர்யா சந்தித்தார். அந்த சந்திப்பில் , ‘இனி வரும் காலங்களில் நம் திரைப்படங்கள் வெளியாகும் போது, பேனர்கள், போஸ்டர்கள் என பணத்தை வீனாக்காமல், முடிந்த அளவு நம் மக்களுக்கு உதவும் வகையில் நற்பணிகளைச் செய்யுங்கள் . சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கினால் மகிழ்வேன்” என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார். சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலர் ஒன்றிணைந்து பொதுமக்களுக்க்கு நேற்று வெஜ் பிரியாணி வழங்கியிருந்தார்கள். உணவுகளைத் தயார் செய்து பத்து வண்டிகளில் கொண்டு வந்திருந்தார்கள்.

அன்னதானம்.

இதுகுறித்து முன்னரே கேள்விப்பட்ட லோகேஷ் கனகராஜ், அவரே விரும்பி வந்து உணவு வண்டிகளின் அணிவகுப்பைத் தொடங்கிவைத்திருக்கிறார். ரசிர்கர்களின் இந்தச் செயலால் சூர்யா மிகவும் மகிழ்ந்துள்ளார் என்றும், மற்ற மாவட்டங்களிலும் இதுபோல், தொடரவேண்டும் என்றும் விரும்பியதாகவும் சொல்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *