
ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு கடந்த மாதம்16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திருமண வரவேற்பும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஹனிமூன் திட்டத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார்.
ஆனால், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வினய் நர்வாலின் மரணமும், அவரின் சடலத்துக்கு அருகில் அவரின் மனைவி ஹிமான்ஷி நர்வால் அமர்ந்திருந்த புகைப்படமும் பெருமளவில் பகிரப்பட்டது.
இந்த நிலையில், வினய் நர்வாலின் 27-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கர்னாலின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஜக்மோகன் ஆனந்தும் கலந்துகொண்டார்.
`அவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும்’
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷி நர்வால், “என் கணவர் எப்போதும் நல்ல நினைவுகளுக்காக நினைவுகூறப்பட வேண்டும் எனவும், அவருக்காக முழு தேசமும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
என் கணவரின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவதையும், அவர்கள் மீதான வெறுப்பையும் நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும்.
அதே நேரம் நிச்சயமாக, எங்களுக்கு நீதியும் வேண்டும். யார் தவறு செய்தார்களோ அவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.