
இந்தியாவின் செல்வாக்கு மிக்க குழுமத்தில் ஒன்று டாடா குழுமம். இரும்பு முதல் சாப்ட்வேர் வரை வரை, ஹோட்டல்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை டாடா குழுமம் இல்லாத தொழில் இல்லை எனக் கூறுமளவுக்கு பரந்த நிறுவன வலையமைப்பை கொண்டது டாடா. இந்த நிலையில், ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடா குறித்த செய்தி வெளியாகி வைரலாகிவருகிறது.
ஜிம்மி டாடா
தற்போது 80 வயதாகும் ஜிம்மி டாடா, மும்பையின் கொலாபாவில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட்டின் ஆறாவது மாடியில் ஒரு சாதாரண இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். நேவல் டாட்டா மற்றும் அவரது முதல் மனைவி சூனி கமிஷரியட் ஆகியோருக்குப் பிறந்த ஜிம்மி மற்றும் ரத்தன், குழந்தைப் பருவத்தில் நெருங்க்கமானவர்களாகவே இருந்தனர்.
ஜிம்மி டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. டிஜிட்டல் கவனச்சிதறல்களைத் தவிர்த்து, அதிக நேரம் புத்தகங்கள், செய்தித்தாள்களை வாசிப்பாதை விரும்புகிறார். அரிதாகவே வெளியில் வருகிறார். மிகக் குறைவான மக்களைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்கள் உள்ளிட்ட பல டாடா குழும நிறுவனங்களில் கணிசமான பங்குகள் உள்ளன. 1989-ம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் ஏற்றுக்கொண்ட சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராகவும் பணியாற்றுகிறார்.