
சென்னை: சென்னையில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முறைகேடுகளை தடுக்க, இனி டிஜிட்டல் முறையில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்யும் வரை, மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு, ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார், அண்ணா நகர் 2-வது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் சாலை, பெசன்ட் நகர் 6-வது அவென்யூ, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலை, மயிலாப்பூர் தெப்பக்குளம், சேத்துப்பட்டு மெக்நிக்கோலஸ் சாலை ஆகிய இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணி முன்னாள் படைவீரர் கழகமான டெக்ஸ்கோ நிறுவனத்திடம் கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி வழங்கப்பட்டது.