
‘பார்முக்கு வந்த மும்பை!’
‘ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டால் எந்த எதிரணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது.’ ஒரு சில போட்டிகளாக அடிக்காமல் இருந்து ரோஹித் அரைசதத்தை எட்டிய போது அவரைப் பற்றி ஹர்திக் பாண்ட்யா இப்படி பேசியிருந்தார். ஆனால், இது ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே பொருத்தமான பாராட்டு அல்ல. ஒட்டுமொத்த மும்பை அணிக்குமே இது பொருந்தும் போல.
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கையில், சென்னை அணியை விட மோசமாக ஆடியிருந்தார்கள். ஆனால், டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் ஆட்டம் கையை விட்டுச் செல்ல, அதன்பிறகு ஒரு அணியாக எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வென்றிருப்பார்கள்.
அந்த வெற்றியோடு மும்பை ஃபார்முக்கு வந்துவிட்டது. அதன்பிறகு எல்லாமே வெற்றிதான். இதோ இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

சீசனின் முதல் பாதியில் மும்பை அணி சுமாராகத்தான் ஆடியிருந்தது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியை மட்டுமே மும்பை வென்றிருந்தது. அதற்கு நிறைய காரணங்களும் இருந்தது. சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் இல்லை, பும்ராவும் இல்லை. இரண்டாவது போட்டியிலேயே ஹர்திக் வந்துவிட்டார்.

‘தடுமாறிய மும்பை!’
ஆனால், பும்ரா காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் இல்லவே இல்லை. இடையில் ஒரு போட்டியில் ரோஹித் கூட காயம் காரணமாக ஆடாமல் இருந்தார். இப்படி காயங்களும் அந்த அணிக்கு எதிராக இருந்தது. மேலும், பேட்டிங் யூனிட்டும் முழுமையான பார்முக்கு வராமல் இருந்தது. ரோஹித், ரிக்கல்டன் ஓப்பனிங் கூட்டணி க்ளிக் ஆகாமல் இருந்தது.
ரோஹித் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியாமல் திணறி வந்தார். திலக் வர்மாவால் சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை என முடிவெடுத்து ஒரு போட்டியில் ரிட்டையர் அவுட் ஆக்கினார்கள். சூர்யகுமார் யாதவ் இப்போது வரைக்கும் தொடர்ந்து 11 போட்டிகளில் 25 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். இந்தளவுக்கு சீரான தன்மை வேறெந்த வீரரிடமும் இல்லை.

ஆனால், இந்த சீரான தன்மை அவரைச் சுற்றி மேலும் சில வீரர்களும் பெர்பார்ம் செய்யும்போதுதான் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். பௌலிங்கிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போல்டும் தீபக் சஹாரும் பெரிதாக சோபிக்காமல் இருந்தனர். இதெல்லாம்தான் மும்பை அணியின் ஆரம்பக்கட்ட சறுக்கல்களுக்கு காரணமாக இருந்தது.
மும்பை அணி டெல்லிக்கு எதிராக டெல்லியில் ஆடிய போட்டிதான் அவர்களுக்கான திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்றிலுமே மும்பை அணி மிரட்டலான பெர்பார்மென்ஸை கொடுத்திருக்கும். முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்களை எடுத்திருந்தனர். டார்கெட்டை டிபண்ட் செய்கையில், டெல்லி சார்பில் கருண் நாயர் அதிரடியான கம்பேக்கை கொடுத்திருந்தார்.

சர்ப்ரைஸாக சிறப்பாக ஆடி 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் 88 ரன்களை அடித்திருந்தார். போட்டி மும்பையின் கையை விட்டே சென்றிருக்கும். அந்த சமயத்தில் சாண்ட்னர் கருண் நாயரின் விக்கெட்டை சாண்ட்னர் எடுக்க, கரண் சர்மாவை இம்பாக்ட் ப்ளேயராக எடுத்து வந்து மேட்ச் வின்னிங் ஸ்பெல்லை வீச வைத்திருப்பார்கள். கடைசி ஓவரில் மட்டும் 3 ரன் அவுட்கள். கடைசியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றிருந்தது.
ஒட்டுமொத்த அணிக்குமே உத்வேகம் அளிக்கக்கூடிய வெற்றியாக அது அமைந்தது. அங்கிருந்துதான் நடப்பு சீசனில் மும்பையின் பயணம் மாற தொடங்கியது. ரோஹித் பார்முக்கு வந்தார். ரோஹித் – ரிக்கல்டன் கூட்டணி நல்ல தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. சூர்யாவின் சீரான ஆட்டம் பயனளிக்கத் தொடங்கியது.

ஹர்திக் வழக்கம்போல தன்னுடைய அதிரடியை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்தார். பும்ரா, தீபக் சஹார், போல்ட் ஆகியோர் விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்கினர். தொடர்ச்சியாக வென்றிருக்கும் இந்த 6 போட்டிகளில் 3 போட்டிகளில் எதிரணியை ஆல் அவுட் ஆக்கியிருக்கிறார்கள். சேஸிங்கிலும் டார்கெட்டை முடிந்தளவுக்கு வேகமாக எட்டி ரன்ரேட்டையும் தேற்றிக் கொண்டார்கள். இதற்கு ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பியதும் மிக முக்கிய காரணம்.
மும்பை வென்றிருக்கும் இந்த 6 போட்டிகளில் 3 போட்டிகளில் ரோஹித் அரைசதம் அடித்திருக்கிறார். ரிக்கக்டன் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்திருக்கிறார். ஓப்பனிங்கில் நல்ல மொமண்டம் கிடைப்பதால் அதை அப்படியே பிடித்து போட்டியை சீக்கிரம் வென்று விடுகிறார்கள்.

இவற்றால்தான் மும்பை அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரே ஒரு போட்டியை வென்றாலே சௌகரியமாக ப்ளே ஆப்ஸூக்குள் நுழைந்துவிடுவார்கள். மும்பை அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. கடந்த 4 சீசன்களில் மும்பை அணி கோப்பையை வெல்லவே இல்லை. இந்த முறை அதற்கான வாய்ப்பு கூடி வருவது போல தெரிகிறது.!