
“எங்களது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்திருக்கிறோம். ஏற்கனவே ரூ.1 கோடி வரை செலவு செய்திருக்கிறோம்.
அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில் எங்களை உடனடியாக பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். இரு நாட்டு அரசுகளும் தயவு செய்து என் குழந்தைகளின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கின்றனர் பாகிஸ்தானிய தம்பதியினர்.
“திடீரென்று நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்கிறார்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம்? தீவிரவாதிகள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?” என்று இந்தியா- மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இருந்து அனுப்பப்படும் மக்கள் மன வருத்தத்துடன் கேள்விகளை எழுப்புகின்றனர். இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்தான்.
காஷ்மீரின் மிகவும் அழகான பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டு இருந்த பகல் வேளையில் தீவிரவாதிகள் ஈவு இரக்கம் இல்லாமல் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றுவிட்டனர். இறந்தவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள். ஒருவர் சமீபத்தில் திருமணம் ஆன கடற்படை அதிகாரி. திருமணம் ஆகி ஆறே நாட்களில் மனைவியின் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் அவர். இன்னொருவர் விமானப்படை அதிகாரி மற்றும் ஒருவர் உளவுத்துறை அதிகாரி. தீவிரவாதிகளை தடுக்க முயன்ற ஒரு உள்ளூர்வாசியும் அதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கோர சம்பவம் காஷ்மீர் நிலையைப் பல வருடங்கள் பின் தள்ளி இருக்கிறது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பதிலடியாக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் அரசும் முறுக்கிக் கொண்டு நிற்கிறது.
பஹல்காம் தாக்குதலும் அதைத் தொடர்ந்த இரு நாடுகளின் எதிர்வினைகளும் இருநாடுகளுக்கிடையேயும் போர் மேகங்களை சூழ செய்திருக்கிறது. ஒரு போர் நிச்சயமாக கொடூரமானதுதான். மனிதாபிமானத்தின் எச்சம் ஒட்டியிருக்கும் எந்த மனதாலும் போரை நியாப்படுத்தவே முடியாது. போர்களால் பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். இந்தியா- பாகிஸ்தான் பிரச்னையில் மட்டும் அல்ல. உலகின் எந்த மூலையில் எங்கு போர் நடந்தாலும் ஒவ்வொரு போருக்கு பின்னாலும் பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். உதாரணத்திற்கு…
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு உலக நாடுகளும் முயன்றாலும் பலன் கிடைக்கவில்லை. இந்தப் போரால் லட்சகணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இன்றும் உருக்குலைந்த உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. போரால் சொந்த ஊரை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் குடியெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 18 மாதங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 52,243 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மனைவி குண்டுவீச்சில் புதைந்துவிட, இடிபாடுகளின் மீது நின்று கதறிக்கொண்டிருந்த கணவன்… குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்கும் அந்த நொடியில் ரத்தம் கசியும் குழந்தையின் உடலை ஏந்தியபடி கண்ணீர் சிந்திய தகப்பன்… இறந்து வெறும் புள்ளிவிவர எண்களாகப் பதிவாகியிருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு துயரக்கதை இருக்கிறது.
இதேபோல சிரியா, சூடான் போன்ற உள்நாட்டு போர்களும் லட்சகணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை நரகமாக்கி இருக்கிறது. குறிப்பாக சூடானில் 1 கோடியே 70 இலட்சம் குழந்தைகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல இயலாத சூழல் நிலவுகிறது. 37 இலட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். போரின் மிகக் கொடூரமான விளைவுகளில் ஒன்றான பசியினை ஒவ்வொரு நாளும் 2 கோடியே 40 இலட்சம் மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், அதற்கான தீர்வாக போரை முன்னிறுத்துவது அர்த்தமற்றது. போர்களுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது மானுட நேயத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைவரின் கடமையும் கூட. அதன்பொருட்டு போர்கள் ஏன் கூடாது என்பதற்கு வலுசேர்க்கும் விதமாக பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் பேசினோம்.
போர் : நாகரிக சமூகத்திற்கு உகந்தது அல்ல!
“போர் மட்டும் இல்லை. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய எல்லா வன்முறைகளுக்கு பின்னாலும் அதிகாரம் இருக்கிறது. சில சமயங்களில் இந்த அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தும்போது மிக மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதிகாரம் தவறாகப் பயன்படுத்தும்போது அது மானுடத்திற்கு எதிரான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஒரு போர் மானுடத்திற்கு எவ்வளவு பெரிய வலியையும், பேரழிவையையும் கொடுத்திருக்கிறது என்பதை முதலாம், இரண்டாம் போர்களில் பார்த்திருக்கிறோம்.
இன்னொரு உலகப்போர் வந்தால் நிச்சயம் அதைத் தாங்கக்கூடிய ஆற்றல் இந்த உலகத்திற்கு இல்லை. எப்போதுமே ஒரு போரில் எளிய மக்கள்தான் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக சில போர்களில் பெண்களை ஒடுக்குவதற்காக பாலியல் வன்புணர்வை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அதை வைத்து அவர்களை ஒடுக்கக்கூடிய விஷயங்களும் நடக்கிறது.

அதனால் போர் ஒரு நாகரிக சமூகத்திற்கு உகந்தது அல்ல. போரில் வல்லாதிக்க அதிகாரிகள் அவர்களைத் தற்காத்துகொள்ள முடியும். ஆனால் எளிய மக்களால் அவர்களைத் தற்காத்துக்கொள்ள முடியாது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் பிரச்னையில் தண்ணீரை தடுத்து நிறுத்துவது, நோயாளிகளைச் சிகிச்சைப் பெற விடாமல் தடுப்பது சரியான விஷயம் கிடையாது. முழுக்க முழுக்க வல்லாதிக்க நாடுகள் போர்களுக்கு காரணமாக இருக்கின்றன.
நிலம், இயற்கை வளம், என பல விஷயங்கள்தான் போருக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றின் மீது யாருக்கு ஆதிக்கம் இருக்கிறது யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை நிறுவத்தான் வல்லாதிக்க நாடுகள் போட்டிபோட்டுக்கொள்கின்றன. இந்த நிலம், இயற்கை வளங்கள் மூலம் அவர்களுக்கு அதிக இலாபங்கள் கிடைப்பதால் அதன் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டும். போருக்கு செல்ல வேண்டும் என்று தூண்டக்கூடிய ஒவ்வொரு சோஷியல் மீடியா பதிவுக்கு பின்னாலும் போர் வேண்டாம் என்று நினைக்கக்கூடிய எளிய மக்களின் முகங்கள்தான் அதிகமாக இருக்கும். எப்போதுமே போர் என்பது எந்த ஒரு நாகரிக சமூகத்திற்கும் ஒவ்வாத ஒரு விஷயம். போர் வேண்டாம் என்று சொல்பவர்களும், போரால் பாதிக்கப்படுபவர்களும் எளிய மக்களாகத்தான் இருப்பார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் அல்லது காஷ்மீரில் நடக்கக்கூடிய விஷயங்களைப் பார்ப்பதற்கும் களத்தில் இருந்து அதனை எதிர்கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. போர் இல்லாத உலகம் சாத்தியமா? என்பதை விட சாத்தியப்பட வேண்டும். நிச்சயம் இப்படி ஒரு உலகம் கட்டாயம் தேவை. போர்கள் இல்லாத, வன்முறை இல்லாத அதிகார துஷ்பிரயோகம் இல்லாத உலகம் இன்றைக்கு தேவை என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தனிடம் காலங்காலமாகப் போர்களின் அடிப்படை என்னவாக இருக்கிறது? என்ற கேள்வியோடு பேசத் தொடங்கினோம். போர்கள் குறித்து பேசிய தொடங்கிய அவர்,” மண்ணுக்கும் பொன்னுக்கும் நடந்த போர்களைப் பற்றிப் பழமொழிகள் கூறுகின்றன. முடிமன்னர்களின் காலத்தில், அதிகாரம் மிகுந்த ஒரு சிறிய கூட்டத்தின் நலனுக்காகக் கொத்துக்கொத்தாக மக்கள் செத்தனர். அப்போதெல்லாம் போர் வீரர் எனப்படுவோர், குடியானவர்களும், அன்றாடங்காய்ச்சிகளும் தான்.

இன்று, உலகம் முழுவதும் ஜனநாயக ஆட்சி முறைகள் தோன்றியுள்ளன. ஒரு நாட்டில் சில மோசமான ஆட்சியாளர்கள் வந்தாலும், இரு வேறு நாடுகளுக்கிடையிலான பிரச்னைகளைத் தீர்க்க சர்வதேச ஏற்பாடுகள், சர்வதேச சட்டங்கள் உள்ளன. அந்த ஏற்பாடுகளை மதிக்கத் தவறும்போதும், ஜனநாயக முறைகளில் தீர்க்க வேண்டிய அரசியல் பிரச்னைகளை அந்த வழிமுறைகளில் தீர்க்க முடியாத போதும்தான் போர்கள் மூளுகின்றன. எனவே, போர்கள் என்பவை ஜனநாயக வழிமுறையின் தோல்வியில் இருந்து எழும் வன்முறைத் தாண்டவங்கள் எனலாம்.
போரில் ஈடுபடும் எந்த நாடும் வெற்றியடைவதில்லை. அதனால் போர்கள் எப்போதுமே விவேகமான தேர்வாக இருப்பதில்லை. போர்களில் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மட்டுமே வெற்றி. தோல்வி கிடைப்பது சாமானிய மக்களுக்கு. ஆம், ஒரு நாடு போர்க்களத்தில் முன்னேறினாலும் கூட, அந்த நாட்டின் மக்கள் தம் வரிப்பணத்தில் பெரும்பகுதியை அந்த களத்தில் இழக்கிறார்கள். மேலும், நவீன ஆயுதங்கள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள பின்னணியில், அவற்றைச் சோதிக்க சாதாரண ராணுவ வீரர்களின் உயிர்களைப் பலிகளாக்கும் ஒரு ஆபத்தான களமாக போர்கள் மாறிவிட்டன.
எனவே, தன் ஆயுதத் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் போரைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், உலகில் நடக்கும் போர்களுக்கு எதிராக நின்று அமைதிக்காகப் பேச வேண்டும். அப்போதுதான் பொருளாதார நிலைப்புத்தன்மை ஏற்படும். அதுவே இன்றைய உலகில், நம்மைப் போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படைத்தேவையாகும்” என்றார்.

தொடர்ந்து போர்களால் எளிய மக்கள் மட்டுமே ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு, ” அரசியலில் பல தளங்களிலும் எளிய மக்களின் பங்கேற்புக்கு வழிகள் உள்ளன. ஆனால் போர்களில் உண்டா? போர் என்றாலே ஜனநாயக முறைகளை முழுமையாக முடக்கிவிட்டு, ஆயுத வலிமையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை மேற்கொள்வதாகும்.
பாலஸ்தீனில் நடப்பது போன்ற இனப்படுகொலைகளும், இலங்கையில் நடந்தது போன்ற கொத்துக்கொத்தான கொலைகளும் போர் என்ற பெயரிலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு சர்வதேச சட்டங்கள் துச்சமாக்கப்பட்டும் போர்க்களங்களில் எளிய மக்கள் நேரடியாக உயிரிழப்பதைக் காண்கிறோம்.
ஒருவேளை சட்டங்களை மதித்து, இரு நாடுகளின் ராணுவங்கள் மட்டுமே போரிடினும் கூட, அது எளிய மக்களுக்குத் தொல்லையே தரும். உக்ரைன்-ரஷ்யா போரில் இதைக் காணலாம்: சாதாரண மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறுகிறது; பல நாட்டு மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

கடல் வழிப் போக்குவரத்து மாற்றங்களால் வணிகச் சிக்கல்கள் உருவாகின்றன; டாலர் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாகப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படுகிறது; சுற்றுலாத் துறை பாதிக்கப்படுகிறது. போர் எப்போதுமே சாதாரண மக்களுக்கு எதிரான வன்முறையாகவே இருந்துள்ளது” என்றார்.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் குறித்து பேசிய சிந்தன், “காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அப்பாவி மக்களுக்கு எதிரான கோழைத்தனமான செயலாகும். இதை ஒட்டுமொத்த இந்தியாவும் உலகமும் கண்டிப்பது அவசியம். பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் சாதாரண மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த நிலையைச் சரியாகக் கையாளாவிட்டால், இரு நாட்டு மக்களுக்கும் அது துயரத்தை ஏற்படுத்தும். இப்போது காஷ்மீரில் நடந்த பயங்கரவாதம் அங்குள்ள மக்களின் சிறு வருமான வாய்ப்புகளையும் அழித்துவிட்டது. இந்தச் சூழலில் இந்தியா மிகவும் விவேகமாகத் தன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ சிகிச்சைக்காக வரும் பாகிஸ்தானிய நோயாளிகளைத் திருப்பி அனுப்புவதால் யாரை அச்சுறுத்துகிறோம், திருமணம் செய்து இங்கு வாழும் பாகிஸ்தானியர்களைக் குடும்பத்திடமிருந்து பிரித்து நாடு கடத்துவதால் ஏற்படும் விளைவு என்ன? சிந்து நதி நீரைத் தடுக்கும் முடிவு, ராஜதந்திர அடிப்படையில் நம்மை பலவீனமாக்கும். மேலும் அவ்வளவு பெரிய நதியின் போக்கை மாற்றுவதன் பொருளாதார சுமையும், சூழலியல் தாக்கத்தை எதிர்கொள்வதும் நமக்கு சிக்கலாக முடியும்.
அரசும் மக்களும் இணைந்து நின்று பயங்கரவாதச் சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். பாகிஸ்தானை ஆளும் பிற்போக்கு அரசியல் சக்திகளை, உலக அரங்கில் அம்பலப்படுத்துவதுடன், அவர்களின் சொந்த நாட்டிலேயே அம்பலப்படுத்த முடியும். இந்தியாவின் ஜனநாயகச் செயல்பாடுகள் அந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்படியான விவேகமான நகர்வுகள் இருப்பின், நாம் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

போர்களுக்கு வல்லரசு நாடுகள் எந்த அளவுக்குக் காரணமாக உள்ளன? அவற்றுக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” அமெரிக்காவும், அதன் தலைமையில் அமைந்த நேட்டோ கூட்டமைப்பும் உலகம் முழுவதும் தங்கள் ராணுவ தளங்களை நிலைநிறுத்தியுள்ளன. உண்மையில் அந்த நாடுகள் எதுவுமே போர் பதட்டத்திலோ அச்சத்திலோ இல்லை. அவை உலகில் போர்களற்ற அமைதி திரும்பாமல் இருக்க அவை உறுதி செய்கின்றன.
உக்ரைன் நாட்டோடு அமெரிக்கா நடத்தியது போன்ற, அரிதினும் அரிதான அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட, அரிய தனிமங்களை எடுக்க அனுமதி தரச் சொல்லி அழுத்தம் கொடுக்கப் படுகிறது.
உலக அரசியலில் யாருடைய கை ஓங்குகிறது என்பதை நோக்கமாகக் கொண்டும் போர் பதட்டங்கள் விதைக்கப்படுகின்றன. உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகள் உலகின் ஒரே தலைவராக இருக்க விரும்புகின்றன. இதற்கு மாறாக, பலதுருவ உலகை உருவாக்குவதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
கடந்த காலங்களில் அணிசேரா இயக்கத்தின் தலைமையை இந்தியா ஏற்றிருந்தது. இன்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்டு பல முனைப்புகளில் இந்தியா முக்கிய அங்கமாக உள்ளது. உள்நாட்டில் ஒற்றுமை, நிலைத்த பொருளாதார வளர்ச்சி, பிராந்தியத்தில் நிலவும் அமைதி ஆகியவை இந்தியாவின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். ஆனால், அண்டை நாடுகளோடு போர் சூழல் உருவானால் இவை அனைத்தும் சீர்குலையும். இதை ஏகாதிபத்திய வல்லரசுகள் விரும்பாமல் இருப்பார்களா?

ஆயுதங்கள் உற்பத்தியாகும்வரை, அவற்றைச் சோதிக்கவும், புதிய சந்தைகளை உருவாக்கவும் போர் பதட்டங்கள் தூண்டப்படும். ஆனால், உண்மையில், கொரோனா போன்ற பெருந்தொற்று ஆபத்திலிருந்து ஆயுதங்கள் நம்மைக் காப்பாற்றவில்லை; தடுப்பூசிகள்தான் காப்பாற்றின. எதிர்காலத்தில் இதுபோன்ற பல தொற்றுநோய்கள் வரலாம். கல்வி, மருத்துவம், மின்சாரத் தேவை போன்றவை வளர்ச்சியடையும் துறைகள். இவை அனைத்தும் ஒரு நாட்டின் வலிமையை உறுதிப்படுத்தும் ஆக்கப்பூர்வமான சந்தைகள் ஆகும்.
ஆயுதங்களுக்கான அழிவுச் சந்தைக்கு உணவளிப்பதன் மூலம், இந்த ஆக்கப்பூர்வமான எதிர்காலத்தின் கதவை நாம் மூடுகிறோம். இந்தக் கதவு திறக்கப்படக்கூடாது என்பதை விரும்புவோர் தான் போர்களைத் தூண்டுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் நாம் என்ன எழுதுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதைத் தீர்மானிக்க பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. தேர்தல் காலங்களில் இது வாக்குச் சீர்திருத்தத்தையே மாற்றிவிடும். எனவே, சமூக ஊடக உணர்ச்சிகள் பெரும்பாலும் தூண்டப்பட்டவையே. அதிகமானோர் ஆழ்ந்து சிந்தித்தால் ஜனநாயகம் வெல்கிறது; உணர்ச்சியால் தூண்டப்பட்டால் பெரும்பான்மை வன்முறையாக மாறுகிறது. நாம் சிந்திக்கும் மனிதர்களாக இருக்கிறோமா என்பதே ஜனநாயகப் பாதைக்கும், பெரும்பான்மைவாத சர்வாதிகார பாதைக்கும் இடையிலான வேறுபாட்டை விளைவிக்கிறது.

“கண்ணுக்குக் கண்” என்ற கொள்கையில் உலகம் செயல்பட்டால், எல்லோரும் விரைவில் இருளில் வீழ்வோம். இருளில் கூட விண்மீன்களை நேசிக்கும் மனிதர்களாகிய நாம், போர்களை எப்படி ஆராதிக்க முடியும்?
அரசியல் பிரச்சனைகளுக்கு ஜனநாயக முறைகளில் தீர்வு காண்பது போர் இல்லாத உலகத்தின் அடிப்படை ஆகும். சோசலிசப் புரட்சியின் போது சாதாரண மக்கள் “போர் இல்லாத அமைதி” என்று முழங்கினர். அந்த முழக்கமே, போர் வெறிகொண்ட பாசிசத்தை வீழ்த்தி உலகப்போர்களுக்கு முடிவு கட்டியது.
இன்றைய உலகில், சிறிய கோழைத்தனமான குழுக்களாக அமைந்த பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்துவது சாத்தியமே. எளிய மக்களின் நலனைப் பாதுகாப்பதோடு அரசியல் பிரச்னைகளைத் தீர்ப்பதும் சாத்தியம். நம்முடைய மூவண்ணக் கொடியின் மையத்தில் சுழலும் அசோகச் சக்கரம் உணர்த்துவது அந்த நம்பிக்கையைத்தானே?” என்று போர் பற்றி பல விஷயங்களை நம்மிடையே அவர் பகிர்ந்துகொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs