புதுச்சேரியில் திறந்தவெளி அழகு சீர்குலைப்பு தடுப்புச் சட்டம், கடந்த 2000-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆனால் அதையும் மீறி முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களின் அடிபொடிகளுக்காக சாலைக்கு நடுவில் வைக்கப்படும் பேனர்களால், பொதுமக்கள் நாள்தோறும் விபத்துகளை சந்தித்து வருகின்றனர். அப்படியான விபத்துகளில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. 

புதுச்சேரி அரசு

`சைலண்ட் மோடு’

ஆனால் அதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் முடியும் வரை மௌனமாக இருந்துவிட்டு, முடிந்தவுடன் ‘பொது இடங்களில் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற சம்பிரதாய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு அமைதியாகிவிடும். குறிப்பாக `பேனர்களின் பிதாமகன்’ என்று அழைக்கப்படும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் வரும் மாதமான ஆகஸ்ட் மாதம், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் பேனர் விஷயத்தில் `சைலண்ட் மோடு’க்கு சென்று விடும்.

காட்டமான நீதிமன்றம்

பேனர் கலாசாரத்தால் நொந்து போன புதுச்சேரி நீதிமன்றம், `புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டிருக்கும்  பேனர்கள்  உடனடியாக அகற்றப்படவில்லை என்றால், பேனர் தடை உத்தரவை மீறும் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்’ என்று கடந்த 2024 பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியருக்கும், துறை செயலர்களுக்கும் காட்டமாக கடிதம் அனுப்பியது.

அதையடுத்து உடனடியாக நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் வழக்கம் போல மீண்டும் பேனர் கலாசாரம் தலை தூக்கியது. இந்த நிலையில்தான் புதுச்சேரி சப்-கலெக்டராக இருந்த அர்ஜூன் ராமகிருஷ்ணன் பேனர் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

புதுச்சேரி பேனர்கள் (கோப்புப் படம்)

சட்டப்படி நடவடிக்கை

அதில், `விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றும் அரசு ஊழியர்களை தடுப்பது, தண்டனைச் சட்டம் 2023 பிரிவு 221-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். அதற்கு சிறை தண்டனை மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படும். அதனால் புதுச்சேரி மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். சட்டவிரோத பேனர்களை கட்டுப்படுத்த, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம்  உறுதி எடுத்திருக்கிறது. பிறந்த நாள், திருமணம், திருவிழா, திரைப்படம், தொழில் விளம்பரங்கள் என எந்த காரணமாக இருந்தாலும், பொது இடங்களில் பேனர் வைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களை பொதுமக்கள் போட்டோ எடுத்து, 9443383418 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பை வரவேற்ற பொதுமக்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்த புகார்களை மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். மாவட்ட நிர்வாகமும் அந்த பேனர்களை உடனடியாக அகற்ற ஆரம்பித்ததால், பேனர்கள் இன்றி  காட்சியளித்தன புதுச்சேரியின் வீதிகள். இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிர் பயமின்றி செல்ல ஆரம்பித்தனர்.

புதுச்சேரி பேனர் கலாசாரம் (கோப்புப் படம்)

`முதல்வருக்கு பேனர் தடை சட்டம் பொருந்தாதா?’

அதேசமயம், `மாவட்ட நிர்வாகத்தின் அந்த அறிவிப்பு, முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளுக்கு மட்டும் செல்லாது’ என்று ட்வீட்டிக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக 2024 ஜூலை 30-ம் தேதி முதல், புதிதாக போடப்பட்ட சாலைகளில் பள்ளம் தோண்டி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளுக்காக பேனர்கள் வைக்க ஆரம்பித்தனர் அவரது ஆதவரவாளர்கள். உடனே அதை புகைப்படம் எடுத்த பொதுமக்கள், `முதல்வருக்கு பேனர் தடை சட்டம் பொருந்தாதா ?’ என்ற கேள்வியுடன் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு புகார்களை குவிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் இந்த முறை இரவோடு இரவாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால், முகம் சுழிக்க ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்ட புதிய அறிவிப்பில், “பொது இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்க வெளியிடப்பட்டிருந்த வாட்ஸ்-அப் எண் நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுகிறது. பொதுமக்கள் இனி அந்த எண்ணுக்கு புகார்களை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டு சைலண்ட் மோடுக்குச் சென்றுவிட்டது

பேனர் கலாசாரம் (கோப்புப் படம்)

அதன்பிறகு நீதிமன்றம் புதுச்சேரி அரசின் தலையில் மீண்டும் கடுமையாக குட்டு வைத்ததால், பேனர்கள் வைப்பதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அத்துடன் அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜா திரையரங்கம் சந்திப்பில், பிரதமர் மோடியின் படம் போட்டு ராட்சத பேனர் ஒன்றை வைத்திருந்தார்.

ஆனால் அதன் மீது மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே அதற்கடுத்த நாள் எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான சிவா எம்.எல்.ஏ பிறந்தநாளுக்காக அதே இடத்தில் மெகா சைஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படியான பேனர்களைப் பார்க்கும் பொதுமக்கள், `சுய விளம்பர மோகத்தில் சிக்கிக் கிடக்கும் புதுச்சேரி அரசியல்வாதிகள் எப்போதுதான் மாறப் போகிறார்களோ…?’ என்று முகம் சுழித்துச் செல்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *