வருமான வரி கணக்குத் தாக்கல் செய்துள்ளவர்களில் ஆயிரக்கணக் கானவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரிக் கணக்குத் தாக்கல் விவரத்துக்கும், வருமான வரித் துறையின் ஆண்டுத் தகவல் அறிக்கைக்கும் (Annual Information Statement – AIS) இடையே வேறுபாடு உள்ளதால், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதனால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் அபராதம், வட்டி என்று கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வருமானத் துறை வழங்கும் ஆண்டுத் தகவல் அறிக்கையை சரியாகப் பயன்படுத்த வேண்டியது முக்கியம் ஆகும்.

ஆரம்பத்தில் வருமான வரித்துறை சார்பாக 26AS என்ற அறிக்கை வழங்கப்பட்டு வந்தது. பிறகு, 26AS அறிக்கையுடன் கூடுதலாக ஆண்டுத் தகவல் அறிக்கையும் வழங்கப்படுகிறது.

26AS அறிக்கையில் வரிதாரரின் விரிவான பணப் பரிவர்த்தனை விவரங்கள் இடம் பெற்று இருக்காது. நிதியாண்டில் வரி செலுத்துபவரின் டி.டி.எஸ், டி.சி.எஸ் பிடித்த விவரங்கள் மற்றும் அதிக மதிப்பில் வாங்கிய சொத்துகள் மற்றும் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பற்றிய விவரங்கள் மட்டுமே 26AS அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.

ஆண்டு தகவல் அறிக்கை…

ஆண்டு தகவல் அறிக்கையில் ஒருவர் மேற்கொண்ட 57 விதமான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் செலவுகள் பற்றிய விரிவான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

வரி செலுத்துபவர்கள் பெரும்பாலும் 26AS அறிக்கையுடன் தங்களின் பணப் பரிவர்த்தனைகளை சரிபார்த்து, அதன் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் தாங்கள் சில பணப் பரிவர்த்தனைகளை வரிக் கணக்கு படிவத்தில் குறிப்பிட மறந்துவிடுகிறார்கள். அதன் விளைவு, வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வருகிறது.

வருமானம், செலவுகள் பற்றிய கூடுதல் விவரங்களை ஆண்டு தகவல் அறிக்கையில் சரிபார்த்துவிட்டு, அதன் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்வது நல்லதாகும்.

இந்த இரண்டு அறிக்கைகள் வாயிலாக வரிதாரர் நமது பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஓரிடத்தில் அறிந்துகொள்ள முடியும். ஒருவர் நடப்பு நிதியாண்டில் பல்வேறு முறைகளில் ஈட்டிய வருமானம் மற்றும் செலவுகளை பான் நம்பரைக் கொண்டு வருமான வரித்துறையினர் ஒருங்கிணைத்து வழங்குவதே இந்த ஆண்டு தகவல் அறிக்கை ஆகும்.

ஒருவர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது இதன் மூலம் எளிதாக நம்முடைய அனைத்து வருமானங்கள், செலவுகள் பற்றிய விவரங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.

ஓர் உதாரணத்துக்கு, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக ஒருவருக்கு வட்டி வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், வருமான வரி தாக்கல் செய்யும்போது சில விவரங்கள் விடுபட்டுப் போகலாம். அந்தக் குறையை நீக்கும் வகையில் அனைத்து விவரங்களும் இந்த அறிக்கையில் இடம் பெற்று இருப்பதால், எளிமையாக அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் தனிநபரோ நிறுவனங்களோ வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.

ஆண்டு தகவல் அறிக்கையை எப்படிப் பெறுவது..?

வருமான வரித்துறையின் அங்கீகரிக்கப்பட்ட வலைதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ மூலம் தனது கடவுச்சொல் விவரங் களை உள்ளிட்டு உள் நுழைந்தால் Service tab/AIS Option மூலம் இந்த அறிக்கையைத் தரவிறக்கம் செய்யலாம். இந்த அறிக்கையானது ஆண்டு தகவல் அறிக்கை சுருக்கம் மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை என்று இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. இந்த இரண்டு அறிக்கைகளையும் PDF ஃபார்மெட்டில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த அறிக்கை கடவுச் சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளதால் வரிதாரர் தவிர, மற்றவர்களால் அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது. ஒருவர் தனது பான் கார்டு நம்பரை அவருடைய பிறந்த தேதியோடு இணைத்து கடவுச்சொல்லாகக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒருவரின் பான் நம்பர் ABBPN4678A ஆகவும், பிறந்த தேதி 12 நவம்பர் 1974 ஆகவும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த அறிக்கையை தரவிறக்கம் செய்ய abbpn4678a12111974 என்ற கடவுச்சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த பாஸ்வேர்ட் இதுபோல சிறிய எழுத்துகளில் (Small Letters) இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

வரி செலுத்துபவர் இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுடன் கூடுதல் விவரங்களையும் உள்ளீடு செய்யும் வசதி உள்ளது. வருமான வரி கணக்கீடு செய்துள்ள விவரங்களுடன் விடுபட்டுள்ள கூடுதல் வருமானம், செலவு பற்றிய விவரங்களையும் வரி செலுத்துபவர் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும்பட்சத்தில் இந்த அறிக்கையில் தானாகக் கணக்கீடு செய்த விவரங்களுடன், வரி செலுத்துபவர் கொடுத்த விவரங்களும் இணைத்து அளிக்கப்படும்.

இந்த அறிக்கை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில் பொதுவான விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும். குறிப்பாக, தனிநபர் என்றால் அவரின் பெயர் அல்லது நிறுவனம் என்றால் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். அத்துடன் முகவரி, பிறந்த தேதி அல்லது நிறுவனம் தொடங்கப்பட்ட நாள், பான் நம்பர், பகுதி மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் நம்பர் போன்ற விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.

இரண்டாவது பகுதியில், வரி செலுத்து பவரின் டிடிஎஸ், டி.சி.எஸ் பிடிக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு வகைகளில் ஈட்டிய வருமானம் பற்றிய விவரங்கள், அட்வான்ஸ் டாக்ஸ் மற்றும் சுய மதிப்பீட்டு வரி வாயிலாக முன்கூட்டியே செலுத்திய வரி பற்றிய விவரங்கள், வருமான வரி ஃரீபண்ட் பற்றிய கோரிக்கைகள், வெளிநாட்டு கரன்சி வாங்கிய விவரங்கள் போன்ற பல்வேறு விவரங்கள் இந்தப் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

ஓர் உதாரணத்துக்கு, வரி செலுத்துபவருக்கு பல்வேறு வங்கி சேமிப்புக் கணக்குகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த அறிக்கையில் அவர் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கு எண், எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறார், அந்தக் கணக்கு மூலம் அவருக்கு வழங்கப்பட்ட ஆண்டு வட்டி எவ்வளவு, அந்தக் கணக்கு தற்போது ஆக்டிவாக உள்ளதா என்பது போன்ற பல்வேறு விவரங்களும் விரிவாக இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.

இதன் மூலமாக பல்வேறு வகைகளில் செய்யப்பட்ட பணம் தொடர் பான விவரங்களும் இந்த அறிக்கை வாயிலாகத் தொகுக்கப் பட்டுவிடும்.

ஆண்டு தகவல் அறிக்கை: தவறுகளைச் சரி செய்வது எப்படி..?

ஆண்டு தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் விவரங்கள் கணினி மயமாக்கம் மூலம் வங்கிகள், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் வருமான வரித் துறையால் பெறப்படுகின்றன.

இதில் வரி செலுத்துபவர் தவறுகளைக் கண்டறிந்தால் வரித் துறையின் இணையதளம் வாயிலாகவே அதைச் சரி செய்வதற்கு வருமான வரித்துறைக்கு கோரிக்கை வைக்கலாம். அறிக்கையில் கொடுக்கப் பட்டிருக்கும் தகவல் முழுவதும் தவறு, கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் முழுவதும் சரியல்ல என்று வரி செலுத்துபவர் முறையீடு செய்யலாம்.

உதாரணத்துக்கு, அந்த ஆண்டு அறிக்கையில் விதிக்கப்பட்டிருக்கும் வருமானம் வரி விலக்குக்கு உட்பட்டது என்று கருதினாலோ, அந்த வருமானம் நடப்பு நிதியாண்டுக்கு தொடர்பு இல்லாதது என்று கருதினாலோ இதுபோன்ற மாற்றங்களுக்கு விண்ணப் பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாற்றங்கள் வருமானத்துறை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாற்றியமைக்கப் பட்ட அறிக்கை வழங்கப்படும். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் வரிதாரர் ஆண்டு தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களின்படி வருமான வரி கட்ட வேண்டும்.

கவனிக்க வேண்டியவை…

நமது பல்வேறு பணப் பரிவர்த்தனைகள் கணினிமயமாக்கப்பட்ட நடைமுறை மூலம் எளிமையாக வருமான வரித் துறையால் கண்காணிக்கப்படுகின்றன.

26ஏஎஸ், ஏ.ஐ.எஸ் அறிக்கைகளில் உள்ள விவரங்களை உள்வாங்கிக்கொண்டு அனைத்து வருமானங்களையும், செலவுகளையும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் ஆடிட்டர் மூலம் கணக்குத் தாக்கல் செய்வது நல்லது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *