
சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை முதலில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்களின் பெயர் ஆகாஷ் ஜெயின், ஆகாஷ்குமார் எனத் தெரியவந்தது. இதில் ஆகாஷ் ஜெயின் சவுகார்பேட்டையில் பிசினஸ் செய்து வருகிறார். அதைப் போல ஆகாஷ்குமார், மின்ட் பகுதியில் அழகு பொருள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிசினஸோடு நகை சீட்டு ஒன்றையும் ஆகாஷ்குமார் நடத்தி வருகிறார். அதில் வேப்பேரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் சேர்ந்திருக்கிறார். அதனால் ஆகாஷ் குமார், ஆகாஷ் ஜெயின், சுரேஷ் ஆகியோர் நண்பர்களாகியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட மூன்று பேரும் முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி ஆகாஷ் ஜெயின் 50,000 ரூபாயை சுரேஷிடம் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை சுரேஷ், ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட இணையதளத்தில் பதிவு செய்து 4,000 பாயின்ட்ஸ்களை வாங்கியிருக்கிறார்.
பின்னர் அந்த இணையதளம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.