
இதுவரை, ‘சாதிய பிளவு ஏற்பட்டுவிடும்’ என்று கூறிவந்த பாஜக அரசே, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், அனைத்தையும் விட பெரிய பிரச்னை இவை தான்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே சாதிக்கு வேறு வேறு பெயர்கள் உள்ளன.
உதாரணத்திற்கு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதி கணக்கெடுப்பும் நடந்தது. அதில் ‘யாதவர்’ என்ற சாதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சாதியை தமிழ்நாட்டில் ‘கோனார்’ என்றும், மகாராஷ்டிராவில் ‘கவால்’ என்றும், உத்திரபிரதேசத்தில் ‘அஹீர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இதை எப்படி கணக்கெடுப்பில் வகைப்படுத்தப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
அடுத்ததாக, ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல உட்பிரிவுகள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே சாதியாக கருதுவார்களா… அல்லது வெவ்வேறு சாதிகளாக பிரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சிலர் சாதி தேவையில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் எப்படி அடையாளப்படுத்தப்படுவார்கள்? என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
இப்போதே, ‘எங்கள் சாதியை இப்படியாக அழைக்க வேண்டும்… அப்படியாக வகைப்படுத்த வேண்டும்’ என்று ஏகப்பட்ட கோரிக்கைகள் இருந்து வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும்போது இவ்வாறு பல கோரிக்கைகள் எழும்.
அத்தனையையும் சரி செய்து சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடிப்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது.