
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நன்கலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). கார்த்திக்கும் அவரது நண்பர்கள் சிலரும் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவதுண்டு.
அப்படி அவர்கள் மது அருந்த அமர்ந்த போது, கார்த்திக்கிடம் அவரது நண்பர் வெங்கட ரெட்டி என்பவர் 5 முழு பாட்டில் மதுவை தண்ணீர் கலக்காமல் குடித்தால் ரூ.10,000 கொடுப்பதாக சவால் விட்டார். அவரது சவாலை ஏற்றுக்கொண்ட கார்த்திக் உடனே 5 பாட்டில் மதுவை தண்ணீர் ஊற்றாமல் சிறிது நேரத்தில் குடித்து முடித்தார்.
ஆனால் மது குடித்த சிறிது நேரத்தில் கார்த்திக் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர் அருகில் உள்ள முல்பகல் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர். 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
கார்த்திக்கிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகி இருந்தது. அவரது மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்திருந்தது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மது குடித்து 2.6 மில்லியன் பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார மையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.