
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் அமைந்துள்ள பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 26). 2020 ஆம் ஆண்டு ஈரோட்டில் தனது பிஎஸ்சி அக்ரி படிப்பினை முடித்த பிறகு யுபிஎஸ்சி தேர்வினை எழுதுவதற்கு பயிற்சி பெற்று, அதற்காக தன்னை மிக வலிமையாக தயார்படுத்திக் கொண்டார்.
ஆனால் தோல்வியை மட்டுமே சந்தித்த சரண்யா தனது மூன்றாவது முயற்சியில் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார். தனது வெற்றியின் வாசம் பொங்க புன் சிரிப்புடன் மகிழ்ச்சியோடு நம்மிடம் உரையாட தொடங்கினார்.
“கலெக்டராக வேண்டும் என்பது என்னுடைய சிறு வயது கனவல்ல. நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எக்ஸ்போசர் செஷன் ஒன்று வைத்தனர் . அதன் பின் நாம் எப்படியாவது கலெக்டர் ஆகிவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் உருவானது. எனவே நான் படிப்பினை முடித்தப் பிறகு ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். நான் அகாடமியில் பார்த்த மற்ற நண்பர்களை பார்த்து மேலும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் தோன்றியது. ஏனெனில் அவர்கள் எண்ணிக்கையில் அடங்காத பல புதிய தகவல்களை தங்களின் கனவை நினைவாக்குவதற்காக கடினப்பட்டு அன்றாடம் படிக்கின்றனர்.

பின்பு குரூப் ஒன் மற்றும் குரூப் 2 தேர்வினை எழுதினேன். ஆனால் நான் தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மூன்றாவது முறையாக கடைசி முயற்சியாக மனதில் நினைத்து தேர்வு எழுதினேன். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து மெயின்’ஸ் மற்றும் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி 125 வது இடத்தை அகில இந்திய அளவில் பிடித்துள்ளேன். ” என்றார்.
`யுபிஎஸ்சி தேர்வு குறித்தும் நீங்கள் இத்தேர்வினை கையாண்ட விதம் குறித்தும் சொல்லுங்கள்’ என்று கேட்டபோது, “யுபிஎஸ்சி தேர்வில் பிரிலிம்ஸ் , மெயின்ஸ், இன்டர்வியூ என மூன்று தேர்வுகள் உள்ளன. பிரிலிம்ஸில் வெற்றி பெறுவதற்கு உங்களது நிதானமான மனநிலையே போதுமானது. ஏனெனில் அவர்கள் கேட்கும் லாஜிக்கான கேள்விக்கு விடையளிக்க நீங்கள் நிதானமான மனநிலையை கையாள வேண்டும்.
காலையில் இரண்டு மணி நேரம் மதியம் 2 மணி நேரம் என ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறும். அனைத்து வினாக்களும் எம் சி கியு முறையில் தான் இடம்பெற்றிருக்கும். இதில் நெகட்டிவ் மார்க்கிங் உள்ளது . எனவே மனதை தெளிவாக வைத்து விடையளித்தால் இவற்றில் வெற்றி பெறலாம். மெயின்ஸ்சில் மொத்தமாக ஒன்பது தேர்வுகள் இருக்கும். ஒவ்வொரு தேர்வும் மூன்று மணி நேரம் நடைபெறும். தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இவற்றில் வெற்றி பெற உங்களது நோட்ஸ் தான் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் பலமுறை எழுதி பார்த்து வேகமாக எழுத பழகினால் இவற்றில் எளிமையாக வெற்றி பெறலாம்.

பின்பு இன்டர்வியூ. இவைதான் கடைசி செலக்சன். அனைத்தையும் பற்றிய விரிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அனைத்தையும் பற்றி சிறிய அளவிலாவது தகவல்கள் தெரிய வேண்டியது முக்கியம். இதற்காக அன்றாடம் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். பர்சனாலிட்டி தேர்வில் உங்களுள் இருக்கும் உண்மையான நேர்மையான கடமை உணர்ச்சிமிக்க தன்மையை வெளிப்படுத்தினாலே போதுமானது.
நான் முதலில் என்சிஈஆர்டி புத்தகத்திலிருந்து துவங்கினேன். தற்பொழுது தமிழ்நாடு புத்தகமும் அதற்கு ஈடான தரத்துடன் இருக்கிறது. வரலாறு, ஜியோகிராபி, எக்னாமி, பாலிட்டிக்ஸ் உள்ளிட்ட நான்கு பாடங்கள் உள்ளன .முதலிலேயே நன்றாக ஆராய்ந்து நல்ல தரமான புத்தகத்தை தேர்வு செய்யுங்கள் .இவற்றையே கடைசி வரை மாற்றாமல் படியுங்கள் .
ரிவிஷன் முக்கியம்
நான் ஹிஸ்டரிக்கு ஸ்பெக்ட்ரம் புத்தகத்தை படித்தேன். ஜாக்ராபிக்கு என்சிஇஆர்டி மற்றும் பாலிட்டிக்கு லட்சுமி காந்த் புத்தகத்தை படித்தேன். முதலில் புத்தகத்தை படித்து பாருங்கள் பின்பு அடிக்கோடிட்டு படியுங்கள். அதற்கு பிறகு சிறுக்குறிப்பு எடுத்து படியுங்கள் .படிப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ரிவிஷன் முக்கியம் . கடந்த ஆண்டு தேர்வு வினாக்களையும் நன்றாக கற்று அதனை நன்றாக அனலைஸ் செய்து நீங்களே வினாத்தாள் உருவாக்குபவராக நினைத்து படியுங்கள். தவறு செய்தால் அதனை ஒரு நோட்டில் எழுதி படியுங்கள். எவ்வளவு தவறு செய்கிறோமோ அதே அளவிற்கு கற்றுக் கொள்வோம்.” என்றார்.

தொடர்ந்து, சரண்யா தனது வெற்றியின் ரகசியத்தை பற்றி பேசுகையில், “நான் மிகவும் தைரியத்துடன் பதட்டமின்றி கடைசி தேர்வினை எதிர்கொண்டேன் அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கமோ அல்லது விடிய விடிய படிக்கும் பழக்கமோ எனக்கு இல்லை. சிறிது நேரம் படித்தாலும் கவனம் சிதறாமல் படிப்பேன் . உங்களுக்கு ஏற்ற நேரத்தில் படியுங்கள் .நான் சில நாட்கள் 9 மணி நேரம் படிப்பேன் சில நாட்கள் இரண்டு மணி நேரம் தான் படிக்க முடியும். ஆனால் அன்றாடம் ஆறு மணி நேரம் ஆவது படிக்க முயற்சி செய்வேன்.
ஒரு நாளிற்கு குறைந்தது 50 வினாக்களையாவது தேர்வு எழுதி பார்ப்பேன். இதனையே தேர்வு முடியும் வரை அன்றாடம் வழக்கமாக மாற்றிக் கொண்டேன். தேர்வினை வென்ற பிறகு என்னால் நிகழ் காலத்திற்கு வர இயலவில்லை. என் மேல் நிதிச்சுமையோ அல்லது திருமணச்சுமையோ எனது பெற்றோர் கூறாமல் இருந்தது தான், எனது வெற்றிக்கு முக்கியமான காரணமாக எண்ணுகிறேன். என்னிடம் வரும் ஒவ்வொரு ஃபைலும், ஃபைல் அல்ல ஒருவரது வாழ்க்கை என மிகவும் சமூகப் பொறுப்புடனும் கடமையுடனும் பணியாற்றுவேன் .தேர்வை முடித்து வெற்றி பெற்ற பின் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்.

நான் எனது வீட்டில் முதல் பட்டதாரி. நம்பிக்கை வைத்து உங்களது குழந்தையை படிக்க வையுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள். யுபிஎஸ்சி தேர்வு உங்களது கவுரவமோ அல்லது உங்களது சக்தியையோ சான்றது அல்ல. அவை சமூகப் பொறுப்பு சார்ந்தது. அந்த தேர்வுக்கு நீங்கள் தயாராகும் போதே, தேர்வு பயிற்சி உங்களை நேர்மையாகவும் பொறுப்பாகவும் மாற்றிவிடும். கிராமத்தில் இருந்து நிறைய பெண்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனது வெற்றிக்கு காரணமாக அமைந்த என்னுடைய குடும்பத்தாருக்கும் ,என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய ஆசிரியர் ஆதில் பெர்க் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முடித்தார். அவருக்கு நமது வாழ்த்துகளை சொல்லி விடைபெற்றோம்