
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மேற்கு மண்டலத்தின் 7 மாவட்டங்களுக்கான பூத் கமிட்டி ஏஜென்ட்கள் கருத்தரங்கம் கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக சென்னை மண்டலத்தை கடந்து வெளியில் செல்கிறார். அதுவும் அண்மை காலமாக தி.மு.க அதிகளவு கவனம் செலுத்தும் கொங்கு மண்டலத்துக்கு செல்கிறார் என்ற போதே பரபரப்பு பற்றி கொண்டது.
முக்கியமாக ஆளும் தி.மு.கவில் பதற்றம் அதிகமாகவே காணப்பட்டது. காரணம் ஏப்ரல் 27-ம் தேதி துணை முதலமைச்சரும், தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கோவை வந்தார். ஏற்கெனவே விஜய் Vs உதய் என்ற விவாதம் பெரியளவுக்கு உள்ள நிலையில், ஒரே நாளில் இருவரும் குறிப்பிட்ட ஊரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தேவையில்லாத ஒப்பீட்டை ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே தி.மு.க அப்செட்டானது.
விஜய் ரோடு ஷோ..
இளைஞர்களை குறி வைத்து கல்லூரிகள், ஐ.டி நிறுவனங்கள் அதிகளவு உள்ள சரவணம்பட்டி பகுதியில் பூத் கமிட்டி கருத்தரங்கத்துக்கான இடத்தை த.வெ.க டிக் அடித்தது. 26-ம் தேதி காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் விஜய் கோவை வந்தார். காலை 8 மணியில் இருந்தே த.வெ.கவினர் விமான நிலையம் நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். நேரம் ஆக.. ஆக.. கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. பெண்கள், இளைஞர்கள் அதிகளவு வந்திருந்தனர். விஜய் வெளியில் வரும்போது சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். காவல்துறை தடியடி நடத்தி தான் கூட்டத்தை கட்டுப்படுத்தியது. யாரும் எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் இருந்து, அவிநாசி சாலை வரை சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு விஜய் தன் கேரவானில் ரோடு ஷோவாக வந்தார். மரத்தில் ஏறி கேரவானில் குதித்து விஜய்க்கே இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். ஈசல் கூட்டம் போல, மக்கள் கூட்டம் விஜய்யை சுற்றி வளைத்து கேரவான் கதவுகள் சேதமடைந்து ஒரு வழியாக லீ மெரிடியன் ஹோட்டல் சென்றார்.

மறுபக்கம் மாலை நடக்கும் பூத் கமிட்டி கருத்தரங்கத்துக்கு காலை முதலே என்ட்ரி கொடுக்க கல்லூரி வளாகம் ஹவுஸ்புல்லானது. சுமார் 7,600 பேருக்கு பாஸ் வழங்கப்பட்ட நிலையில், விஜய்யை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களும் வந்திருந்தனர். பாஸ் இல்லை என்பதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பிறகு கேட் ஏறி குதித்தும், உடைத்துத்தள்ளியும் கருத்தரங்கு நடைபெற்ற அரங்கை நெருங்கினார்கள். விஜய் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரிக்கு 13 கி.மீ தான் தொலைவு. அதிகபட்சம் 20 நிமிடங்களில் வந்துவிடலாம். முதல் நாள் அவர் ஒரு மணி நேரம் ரோட்ஷோவாக வந்தார். வழிநெடுக த.வெ.கவினர் மற்றும் பொது மக்கள் விஜய்யை காண்பதற்கு கொளுத்தும் வெயிலிலில் காத்துக் கிடந்தனர். கல்லூரி நுழைவு முன்பு சில த.வெ.கவில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர், “ஆசிரியர்கள் ஓட்டு அண்ணனுக்கே..”, “Teachers Vote TVK” போன்ற வாசகங்களை கையில் ஏந்தி தி.மு.கவை கடுப்பாக்கினர்.
பெண்கள், இளைஞர்கள்..
முதல் நாள் 3 மாவட்ட நிர்வாகிகளுக்கும், இரண்டாவது நாள் 4 மாவட்ட நிர்வாகிகளுக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாளை விட இரண்டாவது நாள் கல்லூரியில் கூட்டம் அதிகளவு வந்தது. அன்றைய தினம் விஜய் ஹோட்டலில் இருந்து ரோட்ஷோவாக கல்லூரி வந்து சேர்வதற்கு 3 மணி நேரமானது. திரும்பிய பக்கமெல்லாம் த.வெ.கவினரும், பொது மக்களும் திரண்டிருந்தனர். பூத் கமிட்டி கருத்தரங்கில் 18 வயது நிரம்பாதோர் கணிசமாக இருந்தாலும், ஆச்சர்யபடுமளவுக்கு பெண்கள், இளைஞர்கள் எண்ணிக்கை அதிகளவு கூடினார்கள்.
2026 சட்டசபை தேர்தலுக்காக ஒருபக்கம் தி.மு.க மெகா கூட்டணியை தொடர்கிறது, மறுபக்கம் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமைத்துவிட்டது. அவர்களுக்கு இணையாக தங்களிடம் கட்டமைப்பு உள்ளது. நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. விஜய் தீவிர கள அரசியலில் இறங்கினால் என்னவாகும் என்பதற்கான முன்னோட்டமாக த.வெ.க இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

பூத் கமிட்டி தான் ஒரு கட்சியின் வேர். அதனால் த.வெ.க சார்பில் ஒரு பூத்துக்கு 10-15 நிர்வாகிகளை இணைப்பது, அதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். சராசரியாக பூத்தை பொறுத்து ஒருவருக்கு 60-80 வாக்காளர்கள் டார்கெட் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2.5 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸப் பயன்படுத்துகிறார்கள். பூத் வாரியாக வாட்ஸப் குழுக்கள் அமைத்து மக்களுடன் நெருங்க வேண்டும். தினசரி ஒரு மணி நேரம், குறைந்தது 10 வீடுகளுக்கு சென்று மக்களிடம் உரையாடுவது, மாதம் ஒரு முறை பூத் ஆலோசனை கூட்டம் நடத்துவது, மாதம் இரண்டு முறை (வீக் எண்ட்களில்) தெரு முனை கூட்டம் நடத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்துவது என்று பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சிறந்த முறையில் செயல்படும் பூத் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். பூத் கமிட்டி தொடர்பாக 36 பக்கம் கொண்ட ஆவணத்தை, பென் டிரைவை மாவட்டச் செயலாளர்களிடம் வழங்கினர்.
சர்வே..
பூத் வாரியாக மக்கள் மனநிலையை அறிந்து கொள்வதற்காக, அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற ரகசிய சர்வேவும் எடுக்க சொல்லியுள்ளனர். திராவிட கட்சிகளை போல, தேர்தலின்போது வயதானவர்களை ஆட்டோவில் அழைத்து சென்று வாக்களிக்க வைப்பது, கழகங்களில் கள்ள ஓட்டு திட்டத்தை எப்படி அணுக வேண்டும், சமூகவலைதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதிரடி வியூகங்கள் இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் சொதப்பல்களும் இருக்கவே செய்தன. கருத்தரங்கில் கணிசமாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு ஓட்டு உரிமையே கிடையாது. கட்சி ஆரம்பித்தாலும் த.வெ.கவினர் பலரும் விஜய்யின் சினிமா ரசிகர் மனநிலையில் தான் உள்ளனர். குறிப்பு எடுக்க கொடுத்த நோட்டில் இருந்து பக்கங்களை கிழித்து ராக்கெட் விடுவது, அதில், ‘ஐ லவ் விஜய்’, ‘TVK For TN’, ‘CM Vijay’ என்று எழுதியிருந்தனர். வெகு சிலர் மட்டுமே குறிப்புகளை எடுத்தனர்.

விஜய் பேசி முடிந்த பிறகு தான் கருத்தரங்கமே தொடங்குகிறது. ஆனால், விஜய் பேசி முடித்தவுடனே நிகழ்ச்சி முடிந்ததாக கருதி பாதி பேர் சென்றுவிட்டனர். அவர்களை பொறுத்தவரை இது விஜய்யை சந்திப்பதற்கான ஒரு மேடையாக மட்டுமே பார்த்தனர். தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், இன்னும் பல பூத்களில் முகவர்கள் நியமிக்கவில்லை. பூத் உறுப்பினர்களும் இனிதான் நியமிக்க வேண்டும். மேலும் பெரும்பாலான வார்டுகளில் வட்டச் செயலாளர்களே இல்லாத நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டி பணிகளை செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இருந்தபோதும் பணமே கொடுக்காமல் விஜய்க்கு தன்னெழுச்சிய இளைஞர்கள், பெண்கள் கூட்டம் அதிகளவு கூடுவதுதான் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளின் பயத்துக்கு காரணமாக உள்ளது.
உதயநிதி ரோடு ஷோ
மொத்த கவனத்தையும் விஜய் ஈர்த்ததால் உதயநிதியின் விசிட்டில் ஏராளமான மாற்றங்களை செய்திருந்தனர். பொதுவாக உதயநிதி கோவை வரும்போது லீ மெரிடியன் ஹோட்டலில் தான் தங்குவார். இந்தமுறை அவர் ரெசிடன்ஸி ஹோட்டலில் ஓய்வு எடுத்தார். விஜய் தெலுங்கு படங்களை அவ்வப்போது ரீ-மேக் செய்வார். ஆனால் தி.மு.கவினர் விஜய்யின் அசைவுகளை பார்த்து அதை அப்படியே ரீ-மேக் செய்தனர். விஜய்யை போலவே உதயநிதியும் தனி விமானத்தில் வந்திறங்கினார். விஜய்க்கு அதிகளவு கூட்டம் இருந்ததால், உதயநிதிக்கு அதைவிட அதிகளவு கூட்டம் கூட்ட வேண்டிய அழுத்தம் தி.மு.கவுக்கு உருவானது. கோவை விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 தொகுதிகளில் இருந்து, தொகுதிக்கு 2,500 மக்கள் வீதம் சுமார் 10,000 மக்களை அழைத்து வந்தனர். விஜய்க்கு பெண்கள், இளைஞர்கள் அதிகளவு வந்த நிலையில், உதயநிதி வரவேற்புக்கு வயதானவர்கள் தான் அதிகம் இருந்தனர்.

இதற்கு முன்பு உதயநிதி பலமுறை கோவை வந்துள்ளார். ஒருமுறை கூட காரில் இருந்து வெளியில் தலை காட்டியது இல்லை. இந்த முறை விஜய்யை போலவே விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வரை 1.5 கி.மீ தொலைவுக்கு ரோட்ஷோ வந்தார். விஜய் தனக்கு எதிரே வந்த அரசு வாகனங்களில் இருந்த ஊழியர்களுக்கு கூட அவராக வணக்கம் வைத்து ஸ்கோர் செய்தார். உதயநிதியை பொறுத்தவரை இதற்கு முன்பு கட்சியினர் கொடுக்கும் புத்தகம், பூங்கொத்தை வாங்குவாரே தவிர மிக மிக அரிதாக சிலருக்கு மட்டும் கைக்கொடுப்பார். இந்த விசிட்டில் கிட்டத்தட்ட அனைத்து தொண்டர்கள், மக்களுக்கும் கைக்கொடுத்தார்.
விஜய் ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ வைரலானது. எங்கக் கிட்டயும் சீப் இருக்கு என்பது போல உடன்பிறப்புகள் உதயநிதி கையில் ஒரு குழந்தையை கொடுத்து பெயர் சூட்டினர். அன்றைய தினம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்துக்கும் தி.மு.கவினர் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து வந்தனர்.
கட்டம் கட்டிய காவல்துறை
வழக்கம் போல இந்த விவகாரத்திலும் தி.மு.கவுக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் திட்டமிட்டபோதே உளவுத்துறையில் இருந்து லோக்கல் காவல்துறைக்கு செம டோஸ் கொடுத்தனர். “துணை முதலமைச்சர் நிகழ்ச்சி இருக்கும்போது எப்படி அவர்களுக்கு அனுமதி கொடுத்தீர்கள்.” என்று திட்டி, “பெரியளவுக்கு பந்தோ பஸ்து எல்லாம் தேவையில்லை.” என்று கூறிவிட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தை சுற்றி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு தான் காவலர்கள் இருந்தனர். கருத்தரங்கம் நடைபெற்ற அரங்கை சுற்றி மட்டுமே காவல்துறையை ஓரளவுக்கு பார்க்க முடிந்தது. அங்கும் கூட விஜய்யை காண்பதற்கு நாலா பக்கமும் சுவர், கேட் ஏறி குதித்தபோது அவர்கள் பெரியளவுக்கு கண்டுகொள்ளவில்லை.

மேலும் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, விமான நிலையத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக கூறி த.வெ.க மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்தனர். முக்கியமாக தங்களது தி.மு.க கொடியை சேதப்படுத்தி, அருகிலேயே த.வெ.க கொடி நட்டதாக தி.மு.க பிரமுகர் விக்னேஷ் என்பவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸ் த.வெ.க பிரமுகர்கள் செல்லமுத்து மற்றும் மனோஜ் ஆகிய 2 பேரை கைது செய்து பிறகு அவர்களை ஸ்டேசன் ஜாமீனில் விடுவித்த சம்பவங்களும் அரங்கேறின.