Doctor Vikatan: என் வயது 55. சில நேரங்களில் நிற்கும்போது ஒருவித மயக்கம் வருகிறது. பிறகு உட்கார்ந்தாலோ, நடந்தாலோ தானாக சரியாகிவிடுகிறது. இது என்ன பிரச்னை, இதற்கு என்ன காரணம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    

ஸ்பூர்த்தி அருண்

மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கலாம்.  அவற்றில் மிக முக்கியமான காரணம், வெயிலின் தாக்கம்.

சென்னை மாதிரியான பகுதிகளில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பலருக்கும் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்வறட்சி ஏற்படும். 

உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருகிறது என்றால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். நீங்கள் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா, வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா, பலவீனமாக உணர்கிறீர்களா, பேலன்ஸ் செய்வதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். 

உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கும் நிலையில் உங்களுக்குத் தலைச்சுற்றல் வருகிறது என்றால், அந்த நேரத்தில் உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைகிறதா என்று பார்க்க வேண்டும்.

அதற்கு ‘ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்பர்டென்ஷன்’ (Orthostatic hypotension) என்று பெயர்.  இந்தப் பிரச்னை வருவதற்கு டீஹைட்ரேஷன் காரணமாக இருக்கலாம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் வரலாம். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும் இப்படி வரலாம். எனவே, முதலில் உங்கள் ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். 

ரத்த அழுத்த அளவு பரிசோதனை

சிலவகையான தலைச்சுற்றல், நடந்தால் சற்று சரியாகும். இதற்கு உடலில் சமநிலையைப் பேணுவதிலும், தலை மற்றும் உடல் அசைவுகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றுவதிலும் ஏற்படும் குறைபாடு காரணமாக இருக்கலாம். காதில் உள்ள பேலன்ஸ் மெக்கானிசத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். நீண்டநேரம் நிற்பவர்களுக்கு ரத்தமானது கால் பகுதியில் சேர்ந்து, அதன் விளைவாகவும் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம்.

தலைச்சுற்றலோடு சேர்த்து பேச்சில் தெளிவின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகளும் இருந்தால் அதை உயர் ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை மற்றும் பக்கவாத பாதிப்புகளுக்கான சோதனைகளையும் செய்து பார்க்க வேண்டியிருக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *