
மும்பை போரிவலியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஒருவர், சுனில் பரஸ்மால் லோதா என்பவரின் பிளேவுட் வியாபாரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்தார்.
அடுத்த சில மாதத்தில் 38 லட்சம் லாபம் கிடைத்து இருப்பதாக கூறி லோதா பணம் முதலீடு செய்த டாக்டரிடம் கொடுத்தார். இதையடுத்து லோதா மீது அதிக நம்பிக்கை கொண்ட டாக்டர் கடந்த சில ஆண்டுகளில் ரூ.7 கோடி முதலீடு செய்தார். அதில் 3 கோடியை லோதா திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால் 4 கோடியை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்.
மேலும் டாக்டர் நம்பரை லோதா பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லோதா மீது டாக்டர் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் லோதா தனது போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தது தெரிய வந்தது.
மேலும் சில மோசடிகள்
இதே போன்று மலாடு பகுதியில் மரக்கடை வைத்திருக்கும் 52 வயது தொழிலதிபரும் லோதா தன்னிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்துவிட்டதாக போலீஸில் புகார் செய்துள்ளார். ஏற்கனவே லோதா மும்பை மலாடு பகுதியில் பிளேவுட் தொழில் செய்து வந்ததால் 52 வயது தொழிலதிபருக்கு லோதா அறிமுகமாகி இருந்தார். லோதா தனக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள தேக்கு மரங்களை கடனாக சப்ளை செய்யும்படி கேட்டுக்கொண்டார். தொழிலதிபர் ரூ.80 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்களை லோதாவிற்கு சப்ளை செய்தார். இதற்காக லோதா இரண்டு காசோலைகளை கொடுத்திருந்தார். ஆனால் இரண்டும் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
இது குறித்து தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்தபோதுதான் லோதா இதே போன்று மேலும் பல தொழிலதிபர்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
இரண்டு பேர் முறைப்படி புகார் செய்திருந்தனர். பல தொழிலதிபர்கள் புகார் செய்யவில்லை. மும்பை போலீஸார் லோதாவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தேடி வந்தனர். இது குறித்து மும்பை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மலோஜி ஷிண்டே கூறுகையில், ”லோதா அடிக்கடி தன் இடத்தையும், போனையும் மாற்றிக்கொண்டே இருந்தான். லோதா பயன்படுத்தி வந்த போன் நம்பர் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்த நம்பருக்கு யாரெல்லாம் போன் செய்து இருந்தனர் என்றும், யாரெல்லாம் போன் செய்ய முயற்சிக்கின்றனர் என்ற விபரத்தை போலீஸார் சேகரித்தனர். இதில் டெல்லியில் இருந்து அதிகமானோர் அந்த நம்பருக்கு அடிக்கடி போனில் அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதனால் குற்றவாளி டெல்லியில்தான் பதுங்கி இருக்கவேண்டும் என்று கருதி மும்பை போலீஸார் டெல்லியில் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
நடிகை ஒருவரின் நம்பர்!
லோதாவிற்கு போன் செய்த நம்பர்களில் ஒரு தென்னிந்திய நடிகை ஒருவரின் நம்பரும் இருந்தது. அந்த நம்பரை டிரேஸ் செய்தபோது அந்த நம்பரும் டெல்லியில்தான் இருந்தது. இதையடுத்து அந்த நம்பரை தொடர்ந்து கண்காணித்தோம். அந்த நம்பர் டெல்லி ஜங்க்புரா பகுதியில் இருந்தது. இதையடுத்து தனிப்படை அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் திடீரென ரெய்டு நடத்தி லோதாவை கைது செய்தோம். லோதாவுடன் தென்னிந்திய நடிகை ஒருவரும் இருந்தார். அந்த நடிகையை வைத்து மோசடி செய்த பணத்தில் திரைப்படம் எடுக்க திட்டமிட்டு இருந்தது லோதாவிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது”என்று தெரிவித்தார்.
லோதா மும்பை கொண்டுவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை தங்களது காவலில் எடுத்து மோசடி செய்த பணத்தை என்ன செய்தான் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். நடிகைக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.