
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள சிம்மாசலம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று நிஜரூப தரிசனம் நடந்தது. இதற்கான டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது, சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே சிம்மாசலம் மலை மீது பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மூலவரின் சந்தன காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனம் நடக்கிறது. இதனால் நிஜரூப தரிசனத்தை காண சிம்மாசலம் கோயிலில் நேற்று முன் தினம் இரவு முதலே பக்தர்கள் பல ஊர்களில் இருந்து திரண்டு வந்தனர்.