
உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 7-ம் இடத்திலும் கேது பகவான் ஜன்ம ராசியிலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, சிரமங்களைக் கொடுத்தாலும் இலக்கை அடையவைப்பதாக அமையும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. ராகு ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்வதால், வெளியுலகத்துக்குத் தெரியவருவீர்கள். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும்தானே மிஞ்சியது. அவையெல்லாம் இனி விலகும்.
2. எந்த விஷயத்திலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுங்கள். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் தருவார்கள். எனினும், களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால், வாழ்க்கைத் துணைவருடன் மனத்தாங்கல் ஏற்படலாம்.
3. சிறிய பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். எவ்விதப் பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. சிலர், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பார்கள்; கவனம் தேவை.
4. இப்போதைக்குக் கூட்டுத்தொழிலில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களுடன் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். நல்ல வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். ஜாமீன், காரெண்டர் என்று கையெழுத்திட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
5. வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்ளுங்கள். பதவி உயர்வு உண்டு. ஓரளவு சலுகைகள் கிடைக்கும்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது பகவான் உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் இனி சமயோஜித புத்தியுடன் பேச வைப்பார். இனி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும்.
7. எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன் வந்து நீங்கும். வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். உடன்பிறந்தவர்களால் வீண் விவாதமும், மன உளைச்சலும் வந்துபோகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும்.

8. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நிம்மதி உண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும் மேலதிகாரிகளின் ஒத்துழைப் பும் ஆதரவும் நிம்மதி தரும்.
9. மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கோயிலுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சென்று சௌந்தரநாயகி சமேத நாகநாதசுவாமியையும் கேது பகவானையும் வணங்கி வாருங்கள்; சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும்.