
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அருமையாக ஒரு வெளிநாட்டுச் சுற்றுலா சென்றால் என்ன என்று எங்களுக்கு தோன்றியது 2020_ல். நான் கணவர் மகள் மூவரும் கலந்தாலோசித்து பிள்ளையார் சுழி போட்டது மலேசியா_ சிங்கப்பூருக்கு.
ஆனால் கொரோனா வந்து கதவடைத்து விட்டது. மீண்டும் முயற்சி செய்தோம் 2024_ல். தை பிறந்தது வழியும் பிறந்தது. எங்கள் பயணம். டேக் ஆஃப் ஆனது பொங்கல் திருநாளன்று. நாங்கள் கிளம்பிய நொடியிலிருந்து தொடங்குகிறேன். என்னோடு நீங்களும் பயணிக்க அன்புடன் அழைக்கிறேன்.
6 இரவுகள்_ 7 பகல்கள் கொண்ட குரூப் டூர் பேக்கேஜ் கோவையில் இருந்து டிராவல்ஸ் மூலம் பதிவு செய்திருந்தோம். 25 பேர் கொண்ட குழுவுடன் ஒரு டூர் மேனேஜர் எங்கள் கூடவே பயணித்து சிறப்பாக வழி நடத்தினார்.
நாள் 1 :
பொங்கல் வைத்த கையோடு கோவை நேரு ஸ்டேடியம் கிளம்பினோம் இல்லத்தரசியாகிய நானும், தொழிலதிபராகிய என் கணவரும், எங்கள் மென் பொறியாளர் மகளும் .
அங்கே காத்திருந்த டீலக்ஸ் பஸ்ஸில் ஏறினோம்(என்னது? டீலக்ஸ் பஸ்லயே மலேசியா சிங்கப்பூர் பயணமா என்னும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது ) கோவையில் இருந்து திருச்சி வரை டீலக்ஸ் பஸ். திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம்.
திருச்சி விமான நிலையத்தில் செக் இன் இமிக்ரேஷன் இத்யாதிகள் முடிந்ததும் எங்கள் டூர் மேனேஜர் சொன்னார்.
திருச்சியிலிருந்து கோலாலம்பூர் பயணம் மூன்றரை மணி நேரம். அந்த நேரத்தில் நன்றாக உறங்கி விடுங்கள். நாளை கோலாலம்பூரை அடைந்ததும் நிறைய பயணிக்க போகிறோம். ஓய்வுக்கு நேரமிருக்காது என்றார்.

இரவு 12 மணிக்கு விமானம் ஏறினோம். இது எனக்கு முதல் வெளிநாட்டு விமானப் பயணம். இன்டர்நேஷனல் ஃப்ளைட்லாம் சினிமாவில் வருவது போல சூப்பராக இருக்கும் என்று கற்பனை செய்திருந்த எனக்கு அதிர்ச்சி.
விமானத்தின் உள்ளே கூட்டம் நிறைந்த மெகா சைஸ் அரசு பேருந்து போலவே இருந்தது.
(ஏர் பஸ்ஸுன்னு இதைத்தான் சொல்றாங்களோ) இதுலயா மூன்றரை மணி நேரம் பயணிக்க போகிறோம் என்று யோசித்தபடி இருக்கைகளில் அமர்ந்தோம்.
விமானத்தின் கடைசி வரிசையில் எங்கள் இருக்கைகள். அதனால் புஷ் பேக் கிடையாது.
ஃபுட் ரூமும் மிகச் சிறியது. கால்களை நீட்டவும் முடியாது மடக்கவும் முடியாது. அப்படியே துாங்க வேண்டியது தான். விமானம் மேலெழும்பி, சலசலப்புகள் அடங்கியதும் கணவரும் மகளும் உறங்கி விட்டார்கள். நானும் முயற்சித்து கொண்டே இருந்தேன்.
விமானம் தரையிறங்க ஒரு மணிநேரம் இருக்கும் போது சில நிமிடங்கள் கண்ணயர்ந்திருப்பேன்.
சுற்றிலும் ஏதோ பரபரப்பு தோன்ற கண் விழித்துப் பார்க்கிறேன். ஒலிபெருக்கி அறிவிப்புகளைத் தொடர்ந்து ஏர் ஹோஸ்டஸ்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

‘ஐயோ விமானத்தில் என்ன பிரச்சனையோ’ என்று வயிற்றில் புளியைக் கரைத்தது. மகளை எழுப்பினேன். அவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “விமானம் மேகத்துக்குள் போகும் போது டர்புலன்ஸ் ஏற்பட்டிருக்கு.. அவ்வளவு தான்.. நீ பயப்படாம தூங்கு” என்று விட்டு அவள் தூக்கத்தை தொடர்ந்தாள். என் தூக்கம் முடிந்தது. ஜன்னல் வழியே இருட்டை வெறித்த படியே வந்தேன். மெலிதாக கிழக்கு வெளுக்கும் நேரம் கோலாலம்பூரில் தரையிறங்கியது விமானம்.
நாள் 2 :
புதிய விடியலில், இதமான மழைச் சாரலுடன் எங்களை வரவேற்றது கோலாலம்பூர். இமிக்கிரேஷன் இத்யாதிகள் முடிந்ததும் விமான நிலையத்திலேயே ‘ஃப்ரெஷ் அப்’ செய்து கொள்ள அரை மணி நேரம் வழங்கப்பட்டது.
உண்மையில் அந்த விமான நிலையத்தின் ‘ரெஸ்ட் ரூம்’ இலை போட்டு சாப்பிட லாம் போல அவ்வளவு சுத்தமாக இருந்தது.
அனைவரும் தயாராகி வந்ததும் அழகாகத் தமிழ் பேசும் மலேசியத் தமிழ் பெண் உள்ளூர் பயண வழிகாட்டியாக எங்களுடன் இணைந்து கொண்டார்.
அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்ட பின் பேருந்தில் ஏறினோம். வழியில் காலைச் சிற்றுண்டியுடன் எங்கள் முதல் நாள் பயணம் தொடங்கியது ‘புத்ர ஜெயா’ வை நோக்கி.

மலேசியாவிற்கு 2 தலைநகரங்கள்.
தேசியத் தலைநகர் _ கோலாலம்பூர்
நிர்வாகத் தலைநகர் _ புத்ர ஜெயா
புத்ர ஜெயா என்றால் இளவரசரின் வெற்றி என்று பொருளாம்.
இந்த நகரமானது கோலாலம்பூரிலிருந்து 25 கிமீ தொலைவில், 2001ம் ஆண்டு திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட தாகும்.
செயற்கையா௧ உருவாக்கப்பட்ட ஏரியின் கரையில் ‘பிங்க் மாஸ்க்’ எனப்படும் இளஞ்சிவப்பு நிற கிரானைட் கற்களால் மிகுந்த வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மசூதி அமைந்துள்ளது.
அதற்கு அருகே பிரதமரின் அலுவலகம் , இன்ன பிற அரசு அலுவலகங்களும், அரசு அலுவலர் குடியிருப்புகளும் அமைந்துள்ளன.
பூங்காக்களும் மால்களும் கூட உள்ளன. ஏரியில் படகு சவாரி செய்தும் இந்த நகரின் அழகை ரசிக்கலாம்.
நாங்கள் முக்கியமான இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பினோம்.
கோலாலம்பூர் வரும் வழியில் ‘இஸ்தானா நெகாரா’ என்ற மலேசிய தேசிய அரண்மனை முன்பாக இறங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். இந்த அரண்மனையில் மலேசிய மன்னர் வசித்து வருகிறார். உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றார்கள்.
கோலாலம்பூரில் அடுத்து பார்வையிட்டது ‘பெட்ரோனாஸ் ட்வின் டவர்’ எனப்படும் மலேசியாவின் புகழ்பெற்ற இரட்டை கோபுரங்கள். பிரம்மாண்டமான அந்த கோபுரங்களை வெளியே இருந்து புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

அடுத்து மதிய உணவு, ஹோட்டல் செக் இன், சிறிய ஓய்விற்குப் பின் மாலையில் பயணம் தொடர்ந்தது. அடுத்த இடம் ‘கே. எல். டவர்’ என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கோபுரம். தென் கிழக்கு ஆசியாவின் மிக உயரமான தொலைத்தொடர்பு கோபுரமாகும் இது.
பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டு லிஃப்ட் மூலம் மேலே சென்று கோலாலம்பூர் நகரின் அழகை 360 டிகிரியில் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்தோம்.
மாலை மங்கி, விளக்குகளால் ஒளிர்ந்த அந்தப் பெருநகரின் அழகு கண்களுக்கு விருந்து. நிறைய பயணக் களைப்பு இருந்தாலும் அந்த நாள் இனிய நாளாக மனதில் நின்றது. இரவு உணவிற்கு பின் ஹோட்டலை அடைந்தோம். நாளைய எதிர்பார்ப்புடன் உறங்கச் சென்றோம்.
நாள் 3 :
பக்தி மயமாகத் தொடங்கியது அன்றைய நாள். காலை சிற்றுண்டிக்குப் பிறகு பத்து மலை முருகனின் தரிசனம். பத்து மலைகளின் நடுவே முருகன் கோயில் அமைந்துள்ளது என்று இது வரை நினைத்திருந்தேன்.
ஆனால் அந்த இடத்திற்கு பெயர் ‘ Batu Caves ‘. Batu என்றால் மலாய் மொழியில் பாறை என்று பொருளாம்.
எனவே பாறைகளுக்கு நடுவே அமைந்த குகைக் கோயில் என்று பொருள். அது மருவி பத்து மலை முருகன் என்றானது என்பதை அன்று தான் அறிந்தேன்.

கோலாலம்பூரில் இருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில் 141 அடி உயர தங்க நிற முருகன் சிலை நம்மை வரவேற்கிறது. 272 படிகள் ஏறினால் முருகன் தரிசனம். முருகன் பெயரை உச்சரித்த படி, சுற்றிலும் திரியும் குரங்குகளை ௧வனித்த படி ஏறினோம். மேலே சுண்ணாம்பு கற்களால் ஆன குகை. நடுவில் அழகிய முருகன் சந்நிதி.
குகை நடுவில் இயற்கையாய் அமைந்த துளை வழியே சிறிதளவு வெளிச்சம். பகலில் ஒரு இரவு போல இருந்தது அந்த காட்சி. மனமுருகி முருகனை வணங்கி விட்டு குகையின் அழகையும் ரசித்து விட்டு கீழே இறங்கினோம்.
எதிர்வரும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மிகப்பெரிய கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். கடல் கடந்த தேசத்தில் நம் முருகன் கொண்டாடப்படுவதைப் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த இடம் ‘Genting Highlands ‘. நம் குளுகுளு ஊட்டி போல மலேசியாவின் அழகான மலை வாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலம் மேலே பயணம்.
வழியெல்லாம் பசுமையும், பனியும், சாரல் மழையும் மிக அழகு, குளிர்ச்சி. அங்கே தங்கிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தாலும் நேர மேலாண்மை கருதி நாங்கள் சென்றது ஒரு ‘மால்’ க்கு மட்டுமே. அங்கே உணவகங்கள், காஃபி ஷாப் கள், கடைகள் மட்டுமின்றி ‘Casino ‘ எனப்படும் சூதாட்ட கூடங்களும் இருந்தன.

தவிர உள் அரங்கு, வெளி அரங்கு கேளிக்கை பூங்காக்களும். வருடக்கணக்கில் உழைத்து சேர்த்த பணத்தை நிமிடக் கணக்கில் செலவழிக்க மனிதன் எத்தனை வழிகளை கண்டு பிடித்து வைத்திருக்கிறான் என்று மைண்ட் வாய்ஸ் ஒலித்தது.
நம் பர்ஸ் நலம் கருதி வேடிக்கை மட்டும் பார்த்து வந்தோம். மாலை மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கும் பேருந்து மூலம் ஹோட்டலுக்கும் பயணம். பின்னர் இரவு உணவு. மறுநாள் அழகிய சிங்கப்பூரைக் காணும் எதிர்பார்ப்புடன் உறங்கச் சென்றோம்.
மலேசியாவில் ஷாப்பிங் :
மலேசியாவில் எதெல்லாம் வாங்கலாம் என்றால் சாக்லேட்களும் கை கடிகாரங்களும் இங்கு பிரபலம். தவிர காந்தத்தால் ஒட்டிக் கொள்ளும் பொம்மைகள், விதவிதமான சாவிக்கொத்துகள், முருகன் சிலைகள் போன்றவைகளையும் சுமாரான விலையில் வாங்கலாம்.

சிறப்புகள் :
மலேசியாவின் மக்கள் தொகையில் 9% தமிழர்கள். மலேயர்களும் சீனர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். அங்கு நாசி லெமக் என்ற உணவு தேசிய உணவாக கருதப் படுகிறது. இது அரிசி சாதமும் தேங்காயும் கலந்து முட்டை மற்றும் பயறு வகைகளுடன் பரிமாறப்படுகிறது.
கொஞ்சமாக சுவை பார்த்ததோடு சரி.. இன்னும் காயா டோஸ்ட், லக்சா போன்ற உணவுகளும் பிரபலம் என்றார்கள். நமக்கு சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் உணவு தான். உணவுப் பிரியர்கள் அனைத்து நாட்டு உணவுகளையும் சுவைக்கலாம். தட்பவெப்பம் நம்ம ஊர் போலத்தான். சுட்டெரிக்கும் வெயிலும் உண்டு திடீர் மழையும் உண்டு.
மதிய நேரம் என்பதால் அதிக கூட்டம் இருக்கவில்லை. குடியேற்றம் எளிதாக முடிந்து பயணம் தொடர்ந்தது. மாலை மணி 4.30 போல சிங்கப்பூர் ஹோட்டலை அடைந்தோம்.
சிறிய இளைப்பாறலுக்குப் பின் 5.30 மணியளவில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ‘விரிகுடாவின் தோட்டங்களை'(Gardens by the bay) பார்வையிடச் சென்றோம்.
சிங்கப்பூர் பயண வழிகாட்டியாக அழகாக தமிழ் பேசும் இந்தோ சீன பெண்மணி எங்களுடன இணைந்து கொண்டார்.
சிங்கப்பூர் குறித்து அவர் கூறிய பல தகவல்கள் வியப்படைய வைத்தன.

அவற்றில் சில:
* தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சிங்கப்பூர்காரர்கள் சாலையோரங்களில் பழ மரங்களை நட மாட்டார்களாம். காரணம் பழங்களை உண்ண பறவைகள் வரும். அவை எச்சமிட்டால் சாலைகளின் தூய்மை கெட்டுவிடும்.
* சிங்கப்பூர் நகருக்குள் காகங்களைக் காண்பது அரிது. அவை எச்சமிட்டு அசுத்தப்படுத்திவிடும் என்ற காரணத்திற்காக அவற்றை கண்டவுடன் சுட்டுவிடுவார்களாம்.
சரி.. இப்போது விரிகுடாவின் தோட்டங்களுக்குள் செல்வோம்.
260 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த மிகப்பெரிய பூங்கா, கடலின் மேல் மண்ணைக் கொட்டி, செயற்கையான நிலமாக்கி அதன் மேல் உருவாக்கப்பட்டுள்ளதாம். காரணம் சிங்கப்பூரின் இடப் பற்றாக்குறை.
இந்த பூங்காவில் முதலில் நாங்கள் சென்ற பகுதி ‘Flower Dome ‘ எனப்படும் மலர்கள் குவிமாடம். இங்கு உலகின் அனைத்து வகையான மலர்ச்செடிகளையும் மலர்களையும் கண்கள் விரிய விரிய காணலாம்.
புகைப்படங்கள் எடுக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள செடிகள் வருடம் 365 நாட்களும் பூத்துக் குலுங்கும். அது எப்படி என்று கேட்டீர்களானால் 3 மாதத்திற்கு ஒரு முறை மொத்த செடிகளையும் அகற்றி விட்டு பூத்து குலுங்கும் புதிய செடிகளை நட்டுவிடுவார்களாம்.
அடுத்து சென்ற பகுதி ‘Cloud Forest ‘ எனப்படும் மேகக்காடுகள். இது மிகப்பெரிய கண்ணாடி கூண்டுக்குள் செயற்கையாக உருவாக்கி குளிரூட்டப்பட்ட காடுகளாகும். இதனை பல அடுக்குகளாக அமைத்துள்ளார்கள். ஒவ்வொரு அடுக்காக ஏறிச் சென்று மரங்களையும் மலைகளையும் செயற்கை நீருற்றுகளையும் காணலாம்.
இவற்றையெல்லாம் ரசித்து, கைப்பேசியில் காணொளியாய் கவர்ந்து, கீழே வந்தால், இரவு 7 மணியளவில் அங்கு ஒளி ஒலி காட்சியைக் காணலாம்.
இசைக்கு ஏற்ப பல வண்ண விளக்குகளால் மரங்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் அழகாக இருந்தது.

கண்களுக்கு வேண்டிய அளவு விருந்தளித்தாயிற்று.. வயிற்றுக்கும் விருந்தளிக்க உணவகம் சென்றோம். நிறைவாக ஹோட்டலுக்கு. சிங்கப்பூரில் முதல் நாள் மிக இனிய நாளாகக் கழிந்தது.
நாள் 5 :
அன்றைய நாளின் காலைப்பகுதியில் ‘Singapore City Tour’ நகரச் சுற்றுலா. முதல் இடமாக அமைந்தது ‘Merlion Park’. அங்கே தான் சிங்கப்பூரின் அடையாளமாகவும், தேசிய சின்னமாகவும் கருதப்படும் Merlion எனப்படும் சிங்க சிலை உள்ளது. அது சிங்கத்தின் தலையும், மீனின் உடலும் கொண்ட 8.6மீ உயரம் கொண்ட சிலையாகும். சிங்கத்தின் வாயில் ஒரு நீரூற்று. சிங்கப்பூர் சென்றவர்கள் யாரும் இந்த சிங்கத்துடன் புகைப்படம் எடுக்காமல் வந்திருக்கமாட்டார்கள். நாங்களும் தான்.
அடுத்து சென்றது புத்தர் கோயிலுக்கு. புத்தரும் கன்ஃபியூஷியஸும் இன்னும் பிற சான்றோர்களும் சிலைகளாக வசிக்கும் அமைதியான இடம். ஊதுபத்திகள் ஏற்றி பிரார்த்தனை செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகமாம். பிரார்த்தனை செய்து முடித்து பேருந்தில் சென்றவாறே ‘China Town’, ‘Little India ‘ இன்ன பிற முக்கியமான இடங்களை பார்த்த படி மதிய உணவிற்கு சென்றோம்.
மதியத்துக்கு பின் சென்றது ‘Sentosa Islands ‘ இங்கு முதலாவதாக சென்ற இடம் S. E. A. Aquarium. இங்கு பல வித மீன்கள் உட்பட 800 வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.

அடுத்து ரோப் காரில் பயணித்து செந்தோசா தீவின் அழகையும் அருகே அமைந்துள்ள துறைமுகத்தையும் பார்வையிடலாம்.
அடுத்து ‘Wax Museum ‘ எனப்படும் மெழுகு அருங்காட்சியகம். இங்கு உலகின் பெரிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகளெல்லாம் நம் முன்னே அச்சு அசல் மனிதர்களாக புன்னகையுடன் நிற்கிறார்கள். சிலை என்றால் கண்கள் நம்ப மறுக்கின்றன. மஹாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ஜோ பைடன், சச்சின், கோலி, மெஸ்ஸி, ஜாக்கி சான், கரீனா கபூர் போன்றவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.
நிறைவாக கடற்கரை பகுதிக்கு வந்தோம். கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்ததும் ‘Wings of Time ‘ என்ற லேசர் காட்சி நடைபெறுகிறது. இது சற்று வித்தியாசமாக, லேசர் கதிர்களுடன், தண்ணீர், நெருப்பு, இசை எல்லாம் கலந்த ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக இருந்தது.
அங்கிருந்து கிளம்பி சென்றது ‘Singapore Flyer’ என்ற ராட்சத ராட்டிணத்தில் ஏறி வானிலிருந்து விளக்குகளால் ஜொலிக்கும் இரவு நேர சிங்கப்பூரை ரசிக்க. ராட்சத ராட்டிணம் என்றாலும் மிக மெதுவாகவே சுழலும். ஒரு சுழற்சிக்கு ஒரு மணி நேரமாகிறது. அந்த அற்புதமான அனுபவத்தை முடித்து கொண்டு அருகிலுள்ள உணவகத்திற்கு சென்றோம். அந்த சம்பவம் மறக்க முடியாதது. சிங்கப்பூரில் நேரத்தை மிக முக்கியமாக கருதுகிறார்கள்.
சரியாக இரவு 10 மணிக்கு அனைத்து கடைகள் மற்றும் உணவகங்களையும் மூடிவிடுகிறார்கள். நாங்கள் சென்ற நேரம் 10 மணியை நெருங்கும் நேரம். ஊழியர்கள் உணவகத்தை மூட ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். உணவருந்தும் முன்பாக, நானும் என் மகளும் கழிவரைக்கு சென்றோம்.

அதே சமயம் எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் உள்ளே இருந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் வெளியே வந்ததைக் கண்டதும், ஊழியர் கதவைப் பூட்டிவிட்டார். உணவருந்தும் போது ஒரே பரபரப்பு. எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் கழிவறை சென்ற அவரது மனைவியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார்.
உணவகத்தின் ஊழியரை அழைத்து கதவைத் திறந்து பார்த்த போது அவர் உள்ளே இருந்தது தெரிந்தது. அந்த ஊழியரோ ‘நேரங்கெட்ட நேரத்தில் வந்து உயிரை எடுக்கறாங்கப்பா’ என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு போனார். இவர்களுக்கு நேரம் பொன் போன்றது என்று புரிய வைத்த சம்பவம் அது. மறக்க முடியாத அனுபவங்களுடன் இரவு உறங்கச் சென்றோம்.
நாள் 6 :
————
அன்று காலை முதல் எங்கள் குழுவிலுள்ள குட்டிஸ் படு உற்சாகமாக இருந்தார்கள். காரணம், சிற்றுண்டி முடிந்து நாங்கள் போன இடம் ‘The Universal Studios ‘ மிகப் பிரபலமான கேளிக்கை பூங்கா. காலை முதல் மாலை வரை மொத்தம் உள்ள 24 ride களில் எத்தனையில் வேண்டுமானாலும் போகலாம். சுகமான ரைடுகளும் உண்டு, அதி பயங்கரமான ரைடுகளும் உண்டு. அப்படிப்பட்ட இடங்களில் உள்ளே நுழையும் போதே அறிவிப்பு வைத்துள்ளார்கள். இதயம் பலவீனமானவர்கள், கழுத்து, முதுகுத் தண்டுவட வலி உள்ளவர்கள் உள்ளே வர வேண்டாம் என்று.

அப்படி பின் வாங்கிய அனுபவங்களே எனக்கு அதிகம்.’Transformers ‘ போன்ற மிதமான த்ரில் உள்ள ride களுக்கு மட்டும் நாங்கள் மூவருமாக சென்றோம். மற்ற படி அனைத்து த்ரில் ride களையும் கடைசி ஓவரில் இறங்கி அடிக்கும் அந்த காலத்து தோனி போல ஆர்வத்துடன் இறங்கி ஆடினாள் என் மகள். Roller Coaster உட்பட. பார்த்த நானோ ஆடிப் போனேன். நாங்கள் மிகவும் ரசித்தது ‘Shrek – 4D show ‘. அந்த 4 பரிமாணக் காட்சி மிக வித்தியாசமாக இருந்தது. வேகமாக பயணப்பதைப் போல இருக்கைகள் ஆடுவதும், நெருப்புக்கு அருகே வரும் போது சூடான காற்று வீசுவதும், நீரில் குதிக்கும் போது நீர் மேலே தெளிப்பது என அருமையான அனுபவம்.
ஆடி முடித்து, புகைப்படங்கள் எடுத்து, மற்றுமொரு புதுமையான அனுபவத்திற்கு தயாராக அங்கிருந்து கிளம்பினோம். வன விலங்குகளின் இருப்பிடத்தில் மாலை விருந்துக்குச் சென்றோம். மண்டாய் என்னும் இடத்தில் உள்ள வன விலங்கு சரணாலயத்திற்கு.
அங்கே ஒரு Tram வண்டியில் விலங்குகளுடன் கை குலுக்கும் நெருக்கத்தில், மெல்லிய விளக்கொளியில் புலி, சிங்கம், யானை, கரடி போன்ற வன விலங்குகளைக் கண்டது சிலிர்ப்பாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அது முடிந்ததும் அங்கேயே இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த thrill நாளின் முடிவில் அனைவரும் சற்று பாரமான மனதுடன் ஹோட்டல் வந்தடைந்தோம். சுற்றுப்பயணம் முடிந்து நாளை இந்த நேரம் ஊர் திரும்பியிருப்போம் என்ற சிந்தனை தான்.

நாள் 7 :
———–
சிங்கப்பூர் சுற்றுலாவின் நிறைவு நாள் சற்று மெதுவாகவே விடிந்தது. அன்று பிரத்யேக பயணங்கள் ஏதுமில்லை. சுற்றிலும் புல்வெளிகளும், golf மைதானங்களும் சூழ்ந்த அந்த resort-ல் இயற்கையை ரசித்த படி குழுவினர் அனைவரும் பேசி மகிழ்ந்தோம். புகைப்படங்கள் எடுத்து கொண்டோம்.
குழந்தைகளும் பெரியவர்களும் நீச்சல் குளத்தில் பொழுதைக் கழித்தார்கள். பகல் 12 மணிக்கு கிளம்பினோம். லிட்டில் இண்டியாவில் மதிய உணவிற்கு பிறகு ஷாப்பிங் செய்தோம். சிங்கப்பூரில் வாங்கக் கூடியவை எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சாக்லேட்கள். அங்கே விலைவாசி மிகவும் அதிகம். உங்கள் பர்ஸ் கனமாக இருந்தால் தங்கம் வாங்கலாம்.

ஷாப்பிங் முடித்த கையோடு அனைவரும் பேருந்தில் ஏறினோம். பேருந்து கடைசி இலக்காக எங்களை ‘சாங்கி’ விமான நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்றது. சுமார் 6 மணி நேரத்தில் நம்ம ஊரு கோவையில் கால் பதித்தோம், மனம் நிறைய நண்பர்களோடும், செலவழித்த பணத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவு நினைவுகளோடும், அனுபவங்களோடும் மகிழ்ச்சியோடும்.
என் எழுத்து வழி பயணத்தில் இறுதி வரை பயணித்த உங்களுக்கு நன்றிகள் பல. வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் சென்று மகிழுங்கள். வாழ்த்துகள்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.