• April 30, 2025
  • NewsEditor
  • 0

நெல்லை மாவட்டம்,  திசையன்விளை அருகே வசிக்கும் சரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருது வேறுபாட்டால் தனித்து வாழ்கிறார்.

திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியைச் சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் லிங்கசெல்வத்துடன் சரோஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி இரவில் லிங்க செல்வம், தன் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த முத்துசுடர், பெஞ்சமின் ஆகியோருடன் மதுபோதையில் சரோஜா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சரோஜா தன் குழந்தையை அழைத்துக் கொண்டு அவர்களுடன் பைக்கில் ஒரு வாழைத்தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மூவரும் சரோஜாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

லிங்கசெல்வம் சரோஜாடன் தனிமையில் இருந்தபோது குழந்தையை மற்ற இருவர்கள் தனியே அழைத்துச் சென்றுள்ளனர்.

”தன்  அம்மாவைக் காணவில்லை” என குழந்தை அழுததால் அவர்கள் இருவரும் குழந்தையை அடித்துள்ளனர். இதில், குழந்தை மயங்கியுள்ளது.

இருப்பினும் ஒருவர் பின் ஒருவராக குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு சரோஜாவுடன் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சரோஜாவையும், குழந்தையையும் வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். குழந்தை தூங்குகிறாள் என நினைத்து வீட்டில் கட்டிலில் கிடத்தி சரோஜாவும் தூங்கியுள்ளார்.

மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் குழந்தை கண் விழிக்கவில்லை. குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் குழந்தை இறந்தது தெரிய வந்துள்ளது.

மருத்துவர்கள் திசையன்விளை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்த பிறகே உல்லாசத்திற்கு இடையூறாறாக இருந்ததாலேயே குழந்தை கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறுமிக்கு சித்ரவதை

இதனையடுத்து சரோஜா, லிங்க செல்வம் உள்ளிட்ட நால்வரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து திசையன்விளை காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம், “சரோஜா கணவர், மதுவுக்கு அடிமையானவர். காதல் திருமணம் செய்து கொண்டாலும் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அருகிலுள்ள உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வந்துள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் தகராறு முற்றவே சரோஜாவை கொலை செய்ய முயன்றுள்ளார் அவரது கணவர்.

இதன் பிறகே அவரை கோவைக்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர் அவரின் உறவினர்கள். ஆனால், சரோஜாவிற்கு செலவுக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார் கணவர். இதனால், கிடைக்கும் வேலைகளைச் செய்து குழந்தையை காப்பாற்றி வந்துள்ளார் சரோஜா. பெண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு செல்ல முடியாது என்பதால் எங்கு சென்றாலும்  குழந்தையையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், பல இளைஞர்களுடன் சரோஜாவிற்கு பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் துவரம்பாடு பகுதியைச் சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் லிங்கசெல்வத்துடன் பழக்கம் ஏற்பட அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

திசையன்விளை காவல் நிலையம்

இந்த நிலையில்தான் லிங்க செல்வம் தனது இரு நண்பர்களையும் உல்லாசத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். முதலில் சரோஜா மறுத்துள்ளாராம். பின்னர் அதிக பணம் தருவதாகச் சொல்லி சம்மதிக்க வைத்துள்ளனர். இருட்டு நிறைந்த வாழைத்தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மூவரும் சரோஜாவுடன்  உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது குழந்தை அழுததால் அதில் 2 பேர் சற்று தொலைவிற்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது அருந்தியுள்ளனர்.

அப்போது சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மது போதையில் இருந்த வாலிபர்கள் குழந்தை என்று பாராமல் அவளுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிக்க கொடுத்துள்ளனர். குடிக்க மறுக்கவே வாயில் ஊற்றியுள்ளனர். குழந்தை அழவே ஆத்திரம் அடைந்த அவர்கள்  குழந்தையின் மூக்கை பொத்தி, உதட்டில் சிகிரெட்டால் சுட்டு சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் குழந்தை மயங்கவே ஐஸ் கிரீம் கடையில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு மீண்டும் சரோஜாவுடன் உல்லாசத்தில் இருந்துள்ளனர். பின்னர், உயிரிழந்த குழந்தையைசரோஜாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக தன் பெற்றோரிடம் சரோஜா தெரிவித்துள்ளார். 

மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகவும், இறந்து 8 மணி நேரத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறினர்.

அத்துடன் குழந்தையின் கை, கால், மார்பு, காது உள்ளிட்ட இடங்களில் உள்ள ரத்தக்காயங்களைப் பார்த்து சந்தேகித்த மருத்துவர்கள் எங்களுக்கு தகவல் தரவே சரோஜாவிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *