• April 30, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையேயான உறவு, அரசுகளுக்கிடையேயான உறவிலிருந்து மாறுபட்டது. அட்டாரி – வாகா எல்லை நீண்டநாள்களாக மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கச் செல்லும் பாதையாக இருந்தது. இன்று மீண்டும் நாட்டு மக்களை பிரிக்கும் தடுப்பாக மாறியிருக்கிறது.

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.

இதனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கும் அவர்களது உறவுகளை விட்டு, குடும்பங்களை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

முதாசிர் அகமது ஷேக்

வீரமரணமடைந்த இராணுவ வீரரின் தாயார்…

ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்துவரும் பாகிஸ்தானியர்கள் அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய நாட்டுக்காக உயிர் துறந்து, சௌர்ய சக்ரா விருது பெற்ற காவலர் முதாசிர் அகமது ஷேக்கின் தாயார் பிறந்த நாடான பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறார்.

முதாசிர் அகமது ஷேக், 2022-ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரிழந்தார். இவரது தாயார் சமீனா அக்தர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதனால் நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் சூழல் எழுந்தது.

இந்தியாவிலேயே இருக்க அனுமதி

ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை நாடுகடத்த அதிகாரிகள் அவர்களை பஞ்சாப்புக்கு பஸ்ஸில் கூட்டிச் சென்று, அங்கு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

amit shah visit sameena akthar (2022)
amit shah visit sameena akthar (2022)

இப்படியாக கூட்டிச்செல்லப்பட்டுள்ளார் சமீனா அக்தர். ஆனால் அவரது மருமகன் முகமது யூனுஸ், அதிகாரிகளுக்கு சமீனாவின் மகன் குறித்து தெளிவாக விளக்கியதனால் அவர் நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சமீனா அக்தரின் மற்றொரு உறவினர், சமீனா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்றும், அதனால் அவர் நாடுகடத்தப்படக் கூடாது என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதாசிர் அகமது ஷேக் மரணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீனாவின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

1990-களில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் வெடிப்பதற்கு முன்பு, ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை திருமணம் செய்துள்ளார் சமீனா அக்தர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *