விஜய்யின் 50-வது படமான ‘சுறா’ ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.
விஜய்யின் 50-வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை எகிறவைத்த ‘சுறா’ எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்று சொல்லப்பட்டுகிறது.
இந்தநிலையில், ‘சுறா’ படத்தின் இயக்குநர் எஸ்.பி ராஜ்குமாரிடம் பேசினேன்.
“சுறா படத்தை இத்தனை வருடங்களாகியும் ரசிகர்கள் நினைவுப்படுத்துவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வாழ்க்கைல மறக்க முடியாத முக்கியமான படம் ‘சுறா’.
விஜய் சார் மாதிரியான ஒரு முன்னணி நடிகர், அதுவும் தன்னோட 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அது பெரிய விஷயம். ஆனா, ‘சுறா’ படத்தை எந்தளவுக்கு எதிர்பார்த்தேனோ, அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்காததுல வருத்தம்தான்.
வெற்றிப் படமாக்கியிருந்தால் இன்னும் பெரிய படங்கள் பண்ணிருப்பேன். இன்னும் முன்னேற்றம் கண்டிருப்பேன். ஆனால், தனிப்பட்ட ஈகோ பிரச்னையால திட்டமிட்டு வரவேற்புக் கிடைக்கவிடாம சதி பண்ணிட்டாங்க.
ஒரு நபரின் ஈகோவால எல்லோரோட கனவையும் சிதைச்சுட்டாங்க. அது யார்? எதுக்காக அப்படி பண்ணினாங்கனெல்லாம் சொல்ல விரும்பல.
‘சுறா’ படத்தை வழங்கிய தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய, அந்த ஒரு நபர்தான் எல்லாத்துக்கும் காரணம். அவர்தான், ‘சுறா’வைத் தோல்வி படம்போல் சித்தரித்தார். மீம்ஸ் போட வைத்தார். இதெல்லாம், விஜய் சாருக்கும் தெரியும்.
எங்களைப் பொறுத்தவரையில் ‘சுறா’ வெற்றிப் படம்தான். விஜய் சாருக்கும் அப்படித்தான். படம் ரிலீஸானப்போக்கூட ‘சூப்பரா இருக்கு’ன்னு சொல்லிப் பாராட்டினார்.
விஜய் சார் ரொம்ப டீசண்ட் பர்சன். இதுவரைக்கும் ‘சுறா’ ஏன் எதிர்பார்த்த வெற்றியைக் குவிக்கலைன்னு என்கிட்டே, ஒரு வார்த்தைக்கூட கேட்டது கிடையாது. படம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
அதுவும், படத்துக்காக கடினமா உழைச்சார். முக்கியமா, வில்லன்கள் வலையில் கட்டி விஜய் சாரை கடலில் தூக்கிப்போடும் காட்சிகள் எல்லாம் ஒரிஜினலாகவே எடுத்தோம்.
டூப் போடாம, பயமில்லாம நடிச்சுக்கொடுத்தார். இப்படி, தமன்னா, வடிவேலு சார்ன்னு மொத்த டீமுமே பெரும் உழைப்பைப் போட்டோம். ஆனா, தோல்வி படம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திட்டாங்க.
‘சுறா’ தோல்விப்படமா இருந்தா ஏன் சன்டியில் வாரம்தோறும் போடணும்? ஒவ்வொரு முறையும் போடும்போது ரசிகர்கள் புதுப்படம் மாதிரிதானே பார்க்கிறாங்க. அப்போ, எப்படி அது தோல்வி படமாகும்?” என்று ஆவேசத்துடன் கேள்வியெழுப்புபவரிடம், “விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் ரீ-ரிலீஸில் கலக்கிக்கொண்டிருக்கும்போது ‘சுறா’வை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டம் இருக்கிறதா?” என்றோம்.
“சுறா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணணும்ங்கிற மாதிரியான எந்த எண்ணமும் கிடையாது. அது தயாரிப்பாளர் முடிவு. ஆனா, ரீ-ரிலீஸ் பண்ணினா நிச்சயம் நல்லா போகும்ங்கிற நம்பிக்கை இருக்கு.
ஏன்னா, 15 வருடத்துக்கு முன்னாடி இருந்த ஆடியன்ஸ் வேற. இப்போ இருக்க சூழல் வேற. ரசிகர்களின் ரசனையும் மாறியிருக்கு” என்கிறார் நம்பிக்கையோடு.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…