
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ஒவ்வொரு தை திருநாள் விடுமுறையும் பொங்கல் வைப்பது, குல தெய்வத்தைக் கும்பிடுவது, மதுரை ஜல்லிக்கட்டை நேரலையில் பார்ப்பது என்று தான் கழியும்.
இந்த வருடம் தொடர் விடுமுறை இருந்ததால், அதைப் பயன்படுத்தி எங்காவது சென்று வரலாம் என்று நானும் என் கணவர் நவீனும் முடிவெடுத்தோம். இந்தியாவின் நீள அகலங்களை, பயணம் செய்து அறிந்து கொள்ளவேண்டும் என்பது எங்கள் இருவரது நீண்ட நாள் விருப்பம்.
கிடைக்கும் பணி விடுப்பு நேரங்களில் நாங்களே எங்களுக்கான பயணத் திட்டத்தைத் தயார் செய்துகொண்டு கிளம்பிவிடுவோம். அப்படித்தான் இமயத்தின் பனி மலைகளையும் குமரியின் முக்கடல் சங்கமத்தையும் எங்களால் காண முடிந்தது.
இம்முறை நாங்கள் இதுவரை கண்டிராத நிலப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாலைவனப் பகுதிகளை, அதன் முழு அழகியலோடு, கண்டு ரசிப்பதற்குக் குளிர் காலங்கள் சிறந்தது. அங்கே கோடைக் காலங்களில் வெப்பம் தகிக்கும், அதே போலத் தான் பனிக் காலங்களில் கடுங்குளிர் இருக்கும். தட்ப நிலை ஒற்றை இலக்கங்களில் செல்லும்.
சென்னை வெயிலுக்குப் பழகியவர்கள் தான் என்றாலும் ராஜஸ்தானில் கோடைக்காலம் வருவதற்கு முன் அங்குச் சென்று வருவதென்று தீர்மானித்தோம்.
தார் பாலைவனத்தின் அறுபது சதவிகித பரப்பு, ராஜஸ்தானின் எல்லைகளுக்குள் உள்ளது. கிடைத்த நான்கு நாள்களில் ராஜஸ்தானின் நான்கு முக்கிய பகுதிகளை, நாளுக்கு ஒன்றாகப் பார்க்கலாம்.
இல்லையா, ஒரே ஊரில் நான்கு தினங்கள் தங்கி, அங்கிருப்பவர்களின் வாழ்வியலை உணரலாம். நாங்கள் தேர்ந்தெடுத்தது இரண்டாம் வாய்ப்பை.

மொத்த ஊறும் மஞ்சள் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், அதன் ஒளி நகரத்தின் கட்டிடங்களில் பட்டுத் தெறிக்கும் மஞ்சள் நிற பிரதிபலிப்பைக் கண்களால் பார்ப்பவர் அனைவரும் அது உண்மையில் தங்க நகரம் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
அந்நகரத்தின் உச்சம், ஊரின் மையத்தில் இருக்கும் ஜெய்சல்மேர் கோட்டை. பொதுவாக மன்னர்கள் அவர்தாம் குடும்பத்துடன் கோட்டையில் வாழ, மக்கள் கோட்டையைச் சுற்றி தங்கள் இருபிட்டத்தை அமைத்திருப்பர்.
இங்கே அப்படியே தலைகீழ். மன்னர் குடும்பம் கோட்டைக்கு வெளியே எங்கோ வசிக்க, கோட்டைக்குள் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கியிருக்கின்றனர். இந்தியாவின் ஒரே மக்கள் வாழும் கோட்டை ஜெய்சல்மேர் கோட்டை தான். மன்னர் ஜெய்சல் சிங்கால் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் முகலாய மன்னர்களின் வசம் இருந்தது.

ஆயிரத்து ஐந்நூறு அடி நீளமும், 750 அடி அகலமுமாகத் தோராயமாக 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோட்டையில், இன்றைக்குச் சுமார் நான்காயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மன்னர் ஆட்சிக் காலத்தில் அங்கு அரசுப் பணிகளில், கோட்டை பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகள், அவரவர் சந்ததிகளின் வசம் இன்று உள்ளது. அவர்கள் அதை இன்றைய காலத்திற்கேற்ப உணவகங்களாகவும், தங்கும் விடுதிகளாகவும், வணிகக் கடைகளாகவும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கினர்.
பொதுவாகக் கோட்டை என்றால், மன்னர் குடும்பத்தினரின் படங்கள், அவர்கள் புழங்கிய பொருள்கள், உபயோகப்படுத்திய ஆயுதங்கள், கலை வேலைப்பாடுடைய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கோட்டையைக் காணச் செல்பவர்கள், அங்கேயே தங்கலாம், உணவருந்தலாம், கோட்டையின் அனைத்துப் பகுதிகளையும் தடையின்றிச் சுற்றிப்பார்க்கலாம் என்பது நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும். பண்டைய பட்டு நூல் வணிக வழித்தடக் காலங்களில் ஜெய்சல்மேர் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற பகுதியாக இருந்தது.

சென்னையிலிருந்து தொடங்கிய எங்களது பயணம், டெல்லி சென்று அங்கிருந்து ஜெய்சால்மரை அடையும் விமானத்தைப் பிடிக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டிருந்தது.
ஒற்றை ஓடுபாதையைக் கொண்ட, சுற்றிலும் பாலைவன நிலத்தின் நடுவே அமைந்திருந்தது ஜெய்சல்மேர் விமான நிலையம். தற்காப்பு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொது மக்களின் பயன்பட்டிருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை போன்று பல நுழைவாயில்கள் எல்லாம் இல்லை. இரண்டே இரண்டு வாசல்கள் தான். விமானம் இறங்கி சில அடி தூரம் நடந்து வந்தாலே, வாகன நிறுத்துமிடம் தெரியத் தொடங்கிவிடும்.
ஒடுத்தளத்தில் விமானம் தரையிறங்கி, நிலையிடத்திற்கு செல்லும் போது, ராணுவ விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
ராணுவ விமான நிலையங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. மற்ற நிலையங்களை விட, இங்கு அதிக அளவில் ராணுவ வீரர்கள் எப்போதும் காவலுக்கு இருப்பார்கள்.

சிறிய ஊர் தான் என்பதனால், வரும் சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிக்கொண்டு போவதற்கும், அவர்களுக்குத் தங்கும் இட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் அங்கேயே ஏற்பாடுகளைச் செய்துதர ஆள்கள் இருப்பார்கள். அங்கே சென்னையில் இருப்பது போன்று ஓலா, உபர், ரெட் டாக்சி வசதிகள் எல்லாம் இல்லை. விமான நிலையத்திலேயே டாக்சி வேண்டும் என்று பதிவு செய்து காத்திருந்தால், ஓட்டுநர் அனுப்பிவைக்கப்படுவார்.
நாங்கள் முதலில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாடைக்கு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவதாகத் தான் எண்ணியிருந்தோம். அது தான் மக்களிடம் நேரடியாகப் பேசி பழகுவதற்கும், அவர்களை அறிந்து கொள்வதற்கும் சரியாக இருக்கும் என நினைத்தோம்.
ஊருக்கு வெளியே இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் எல்லை போன்று சற்றே நீண்ட தூர பயணங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வந்தவரின் வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தோம்.

முதல் நாளன்று கோட்டைக்கு உள்ளேயே நாங்கள் தங்குவதற்கான அறையைப் பார்த்து, பதிவு செய்திருந்தோம். கோட்டைக்குள் நாலா புறமும் பீரங்கிகளை வைத்திருப்பர் அல்லவா. அப்படி ஒரு பீரங்கி இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் வீடென்பதால், அதன் பெயரே கேனான் ஹவுஸ் என்பது தான்.
கோட்டை வாசலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். குறுகலான பாதை, ஆரம்பத்தில் சம தளமாகத் தெரிந்தாலும், மேடாகிக் கொண்டே போனது. விடுதி உதவியாளர் எங்களைக் கோட்டைக்கு வெளியே வந்து வரவேற்றுக் கூட்டிக் கொண்டு போனார்.
எங்களின் பைகளை வாங்கிக் கொண்டு அவர் விறு விறுவென நடக்கத் தொடங்க, கூட்டத்திற்கு மத்தியில் நாங்களும் துள்ளிக் குதித்து, அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேகமாக நடக்கத் தொடங்கினோம்.

அறைக்குச் சென்றதும், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கிளம்பினோம். அங்கிருந்து சில அடி தூரத்தில் ஒரு நல்ல உணவகம் இருப்பதாய் சொன்னார்கள். அங்குச் செல்லும் பாதை இன்னும் குறுகலாக இருந்தது. இதற்கு முன்பு கோட்டைக்குள் இப்படிக் குறுகலான சந்துகளும் அதில் வீடுகள், கடைகள் இருப்பதையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கவில்லை.
தேடிப் பிடித்து அந்த உணவகத்தை அடைந்ததும் அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த உணவகம் ‘ரூப் டாப்’ அமைப்பில் இருந்தது. அங்கிருந்து தெரிந்த மொத்த ஊரின் காட்சி, எங்களது பயணக் களிப்பை அது பெரிதும் தீர்த்திருந்தது.
அந்தக் கடைக் காரரும் அரை குறை ஆங்கிலத்தில் பேச, எங்களுக்குச் சற்றே வசதியாக இருந்தது. அவர்கள் கடையில் முழு ராஜஸ்தானி தாலி தான் பிரபலம் என்றும், சரி என்றால் இருபது நிமிடங்களில் தயார் செய்து கொடுத்து விடுவதாகச் சொன்னார்.

அங்கு அதுவரை நாங்கள் சந்தித்த நபர்கள் அனைவரும் வெளியூர் மக்களை வரவேற்று, நல்லவிதமாகப் பழகும் சுபாவம் உடையவர்களாகவே இருந்தனர். மொழி தெரியாதென்றாலும், அவர்களது உபசரிப்பில் எந்தப் பாகுபாடும் இருக்கவில்லை.
எங்களுக்கும் ராஜஸ்தானியை உணவுகளை உண்ண வேண்டும் என ஆர்வம் இருந்தது, ஆனால் அப்போதைக்கு நாங்கள் சற்றே களைத்துப் போயிருந்தோம், மேலும், மூன்று மணி போல் ஆகியிருந்ததால், பசியும் இல்லை.
எனவே இரவு அல்லது மறு நாள் நிச்சயம் வருவதாகச் சொல்லி, ரொட்டியை மட்டும் சொல்லிவிட்டு அமர்ந்தோம். அது ஜனவரி மாதம் என்பதால், மதிய வேளையிலும், இதமான குளிர் இருந்தது.
இரவு வரும் போது, இன்னும் தடிமனான சட்டையை அணிந்து கொண்டு வாருங்கள் என்றார் அந்தக் கடைக்காரர். அவர் பங்குக்கு அவரும் அங்குப் பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் எங்களுக்கான உணவும் வந்தது. சுவையும் பிடித்திருந்தது. கோட்டைக்குள் தங்கவேண்டும் என்ற முடிவை எடுத்தது மிகச் சரியாகப் போய்விட்டது என்று நினைத்து மனத்திற்குள் மகிழ்ந்து கொண்டோம்.
சற்று நேரத்தில் மேலும் சிலர் அங்கே வந்தனர். அவர்களைப் பார்த்ததும், அவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்துகொண்ட கடைக்காரர், அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். புகைப்படக் கலைஞர்கள். வேலை விஷயமாக வந்தவர்கள், அன்று ஊர் திரும்ப இருந்தனர். நாங்கள் அப்போது தான் வந்து சேர்ந்திருந்தோம்.
எங்களைப் பார்த்ததும் ஆவலாகத் தங்கள் பயன அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினர். பாலைவனக் குடில் அனுபவம், வாடகை வண்டிகளை எங்கே எடுத்தால் நல்ல விலைக்குத் தருவார்கள், அதற்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி விட்டு, அவர்கள் செய்த சிறு திட்டப் பிள்ளைகளை எல்லாம் சொல்லி நீங்கள் அப்படிச் செய்து விடாதீர்கள் என்றெல்லாம் எச்சரித்து விட்டு, எங்கள் உதவிக்குச் சிலரது தொலைப்பேசி எண்களையும் கொடுத்து விட்டுச் சென்றனர்.
அவர்களுடனான அந்த அரை மணி நேரப் பேச்சு நல்ல பயண அனுபவமாக இருந்தது. வந்த இடத்தில் பேசி கூட்டுச் சேர்ந்து கொண்ட எங்களை, அந்தக் கடை உரிமையாளர் நாங்கள் என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
உணவு உண்டு விட்டு, கோட்டையைச் சுற்றிப் பார்ப்பது தான் எங்களின் அன்றைய திட்டம். அங்கங்கே சிறியதும் பெரிதுமாக ஏகப்பட்ட ‘ரூப் டாப்’ உணவகங்கள். அது போக அலங்காரப் பொருள் கடைகள், ஜெயின் கோயில்கள் எனப் பார்ப்பதற்கு நிறையவே இருந்தன. ஆங்காங்கே ராஜஸ்தானியை இசைக் கருவிகளை வாசித்தபடி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர்.

மாலையில் அறைக்குத் திரும்பியதும், உரிமையாளர் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரிடம் கொஞ்சம் கதை பேசினோம். எப்படி இவர்களுக்கு இந்த இடம் சொந்தமானது என்பதைக் கேட்டபோது, அவர் குடும்ப பின்னணியைச் சொல்லிவிட்டு, அரசர் காலத்தில் எழுதித் தரப்பட்ட சொத்து பத்திரங்களை இன்னும் அப்படியே பாதுக்கப்பதாய் சொன்னர்.
மதியம் சென்ற அதே இடத்திற்கு மீண்டும் இரவு உணவுக்குச் சென்றோம். உடல் நடுங்கும் குளிர். நாங்கள் கொண்டு வந்திருந்த அடர்த்தியான ஹூடிகள் எதுவும் போதவில்லை. போதாக் குறைக்கு வெட்ட வெளியான அதே ரூப் டாப் உணவகத்தை தான் தேர்ந்தெடுத்திருந்தோம். அங்கே சில வெளிநாட்டவர்கள், கம்பளிப் போர்வையைத் தலை வரை முக்காடு போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். நிலவின் ஒளியில் நகரத்தின் அழகு இன்னும் பல மடங்கு கூடியிருந்தது.
பகலில் மக்கள் புழங்கும், வியாபாரம் நடக்கும் பரபரப்பான இடமாகக் கோட்டை இருந்தாலும், இரவில் அதன் அழகு தனி. மாலை ஆறு-ஏழு மணிக்கெல்லாம், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் கிளம்பத் தொடங்கியதும், மெல்ல மெல்ல அப்பிராந்தியமே அமைதியாகத் தொடங்கும்.
கோட்டை கதவுகள் எப்போதும் மூடப்படாது. ஏழு – எட்டு மணிக்குமேல் கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் மட்டுமே இருப்பார்கள். மின்விளக்கு ஒளியில் காலியான தெருக்களில் நாங்கள் நடந்து சென்று, கோட்டைக்குள் இருந்த, புகழ் பெற்ற ஜெயின் கோயில் திண்ணையில் அமர்ந்தோம். அப்போது பத்து டிகிரிக்கும் கீழ் தட்ப நிலையில் இடம் குளிர்ந்திருந்தது.

நூற்றாண்டுகளுக்கு முன்பு இதே இடம் எப்படி இருந்திருக்கும், அப்போதிருந்த அரசரும் மக்களும், இதே திண்ணையில் அமர்ந்தபடி கதை பேசியிருப்பார்கள், வியாபாரம் நடந்திருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் நாங்கள் சென்றது, ஜெய்சல்மேரின் மையத்திலிருந்து சற்றே வெளிப்புறமாக்க இருந்த குல்தரா கிராமம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அங்கே பாலிவால் பிராமணர்களுக்காக நானூற்றுக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டிருந்தது.
அப்போதே மழைநீர் சேகரிப்பு, அகலமான வீதிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களுக்காக அக்கிராம மக்கள் இரவோடு இரவாக அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டனர். இப்போது ஆளில்லாத, சிதிலமடைந்த ஆமனுசியஇடமாக இருக்கும் குல்தரா கிராமத்தைப் பார்க்கப் பயணிகள் ஆவலுடன் வருகின்றனர். அந்த கிரமம் அமைத்திருக்கும் இடத்தைச் சுற்றிலும், எதுவிமில்ல வறண்ட பாலைவனப் பூமி தான்.

நம் ஊரில் கிராமங்களில், ஆட்டுச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான ஆடுகள் அருகருகே மந்தையில் வைக்கப்பட்டிருப்பதைப் போல, ஜெய்சல்மேரில் ஒட்டகங்களைக் காணலாம். ஆனால் அதன் முக பாவனைகளை வைத்து அவை மகிழ்ந்திருக்கின்றனவா அல்லது சோர்ந்திருக்கின்றனவா என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல் திட்டுகள், எதிர்ப்பக்கம் வரிசையாகப் பல கிலோமீட்டர்களுக்கு அடுத்துஅடுத்து தங்கும் விடுதிகள். ஒவ்வொரு சில அடி தூரத்திற்கும் ஒட்டகங்களை வைத்துக் கொண்டு அதன் உரிமையாளர்கள் காத்திருந்தனர். ஒட்டகச் சவாரி என்பது அங்கிருப்பவர்களில் பலருக்கு முக்கிய வருமான வழி.

ஜெய்சல்மேரில் இருந்து நூற்றிருபது கிலோமீட்டர்கள் தொலைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளது. அதை ஜீரோ பாயிண்ட் என்பார்கள். கம்பி வேலி கொண்டு அந்த எல்லைப்பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. வேலிக்கு அந்தப்பக்கம் பாகிஸ்தான்.
அவர்கள் பகுதியில் பெரிதாகக் காவலுக்கு ஆள்கள் இருந்ததாகத் தெரியவில்லை, ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் நம் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்திக் காவல் காத்து வந்தனர். பொது மக்கள், அந்தக் கம்பி வேலியை அருகில் சென்று பார்த்து வரலாம்.
அருகில் என்றால், அதை நெருங்கிச் சென்று தொடும் அளவிற்கு இல்லை. சில அடி தூரம் தள்ளி நின்று பார்க்கலாம். அந்த ஜீரோ பாயின்ட் பகுதிக்குச் செல்ல வேண்டுமானால், அதற்கு 15 கிலோமீட்டர்கள் முன்பு இருக்கும் தானோட் மாதா கோயிலுக்கு அருகில் இருக்கும் ராணுவ அலுவலகத்தில் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும்.
எத்தனை பேர் பயணிக்கிறார்களோ, அவர்களின் அடையாள அட்டை, வாகன ஓட்டுநரின் அடையாள அட்டை, உரிமம் என அனைத்தையும் சமர்ப்பித்தால் தான் அந்த அனுமதிச் சீட்டைத் தருவார்கள்.
எல்லைப்பகுதிக்குச் செல்லும் இடம் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு யாருமே இல்லாத திறந்த வெட்டவெளியாகத் தான் இருந்தது. அங்கங்கே காட்டு ஒட்டகங்களையும் காண முடிந்தது. இந்த ராணுவத்தினர் பயன்படுத்தும், கண்காணிப்பு மேடைகள், பங்கர்களை ஓட்டுநர் எங்களுக்கு அடையாளம் காட்டினார்.

இந்தியா- பாகிஸ்தான் பார்டர் எனப் பதிக்கப்பட்டிருந்த பெரிய நுழைவு தூணைக் கண்டு தான் ஜீரோ பாயிண்ட்டை கண்டுபிடித்தோம். அனுமதிக்கும் முன்பு, அந்த இடத்தைப் பற்றியும், அங்குச் செய்ய வேண்டிய, செய்யக்கூடாதவை பற்றியும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர். புகைப்படம் எடுக்கும் அனுமதியில்லை.
இதற்கு முன்பு லடாக்கின் இந்திய எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளோம். அது வட கிழக்கு எல்லை, இப்போது நாட்டின் வட மேற்கு எல்லை. ஒவ்வொரு முறையும் யாருமில்லாத பகுதிகளில், ஆள்கள் அதிகம் பயணிக்காத சாலைகளில் பல மணி நேரத் தனிமையான பயணத்திற்குப் பிறகு நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்பது வித்தியாசமான அனுபவமாகத் தான் இருக்கும்.
அங்கிருந்து லோங்கேவாலா போர் நினைவகம் சென்றோம். 1971 பாகிஸ்தான் போரின் போது, டிசம்பர் மாதம் நான்காம் தேதி இரவு பாகிஸ்தானின் பெரும் படையொன்று டாங்கர்களுடன் லோங்கேவாலா பகுதியைத் தாக்க வந்தது. அப்போது அங்குச் சொற்ப அளவிலேயே இந்திய வீரர்கள் இருந்தனர்.
போர் விமானம் விடிந்ததும் தான் வரும், அதுவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால், பின்வாங்கிவிடுங்கள் என்று மேலிட உத்தரவு. அங்கிருந்த வீரர்கள், மறுநாள் காலையில் விமானப் படைகள் வரும் வரை, பாகிஸ்தான் படைகளை எதிர்த்து நின்றனர். அப்போரின் வெற்றியை நினைவு படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது தான் லோங்கேவாலா போர் நினைவகம்.

எல்லைப் பகுதிகளைப் பார்த்து விட்டு, ஜெய்சல்மேர் திரும்பும் வழியில் நாங்கள் சென்ற இடம் தான் படே பாக். நகரிலேயே சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கு ஏதுவான இடம் என படே பாகை கை காட்டினார்கள். ரிதம் படத்தில் ‘காற்றே என் வாசல் வந்தாய்’ பாட்டை பார்த்திருப்பீர்கள்.
அது படமாக்கப்பட்டது இந்த படே பாக் பகுதியில் தான். ஜெய்சல்மேரின் காடிசர் ஏரி, குல்தரா கிராமத்திலும் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். படே பாக் என்றால், பெரிய தோட்டம் என்பது பொருள். ஆனால் உண்மையில் இப்போது அது மன்னர்களின் நினைவிடம்.
பாலைவனப் பூமியான அங்கு, சிறிய நீர்நிலை இருந்ததால், அதனருகே மாந்தோட்டத்தை, மற்ற செடி கொடி வகைகளை அமைக்க வேண்டும் என்பது அப்போதைய அரசரும் மக்களும் அங்குத் தோட்டத்தை அமைத்தனர். நாளடைவில் அது அரசர்களின் நினைவிடங்களாக மாறிப்போனது. இந்து மற்றும் இஸ்லாமிய அரசர்களின் நினைவிடங்களும் அங்கே உள்ளன. மக்கள் தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில், தாங்கள் கடவுள்களாக நினைக்கும் அரசர்களை வந்து வணங்கிச் செல்லும் இடமாகவும் இருந்தது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், ஓர் அரசர் இறக்கிறார் என்றால், அவரது மகன் இறுதி காரியங்களைச் செய்து, அங்கே இடம் தேர்ந்தெடுத்து வைப்பார். அரசரது பேரப் பிள்ளைகள் தான் அங்கே மணி மண்டபம் கட்டுவார்கள். அதுவே அங்கு வழக்கம். பிள்ளைகள் இல்லாததால், ஒரு சில அரசர்களின் நினைவிடம், மணி மண்டபம் இல்லாது இருந்ததையும் பார்க்க முடிந்தது.
கோட்டைக்குள் சுற்றிவிட்டு இரவு விடுதிக்குத் திரும்ப ஆட்டோ ஒன்றைப் பிடித்தோம். சுற்றுலாத் தலம், அதுவும் இரவு நேரம். யோசிக்கவே வேண்டாம், அதிகமாகத் தான் பணம் கேட்கப்போகிறார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் நடந்ததே வேறு. சரியான விலையை ஆட்டோ காரர் சொன்னதும், நாங்கள் ஆச்சர்யமாய் பார்க்க, வாங்கப் புறப்படலாம் என்றார். அதன் பிறகு நடந்தவை அனைத்துமே சுவாரசியமான நிகழ்வுகள்.

நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதை விசாரித்தவர், சென்னை என்றதும், மறுநொடி, இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து வந்திருக்கிறீர்களா என்றார். மேலும் அவரிடம் பேச்சு கொடுத்ததில், நாடு முழுவதும் உள்ள இடங்களைப் பற்றிய அறிவு அவருக்கு இருந்தது. பல நாட்டு மக்களின் மன நிலை எப்படி இருக்கும் என்பதைக் குறித்தும் பேசினார்.
பயணம், வாழ்க்கை என அந்த இருபது நிமிட ஆட்டோ பயணத்தில் அவர் பேசிய அனைத்துமே ஆழ்ந்த அர்த்தமுள்ள கருத்துகளைக் கொண்டதாக இருந்தது. மறுநாள் அவகாசம் இருந்தால் சந்திக்கலாம் என்றார், ஆனால் நாங்கள் ஊர் திரும்ப வேண்டும், அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம் எனச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தோம். மறக்க முடியாத சந்திப்பாக அது அமைத்தது.

முதல் நாள் கோட்டைக்குள் தங்கினோம். மறு நாள் பாலைவனத்தின் நடுவே குடிலில். மூன்றாம் நாள் கோட்டைக்கு அருகே வேறொரு விடுதியில். தேசத்தின் வட மேற்கு எல்லை வரை சென்ற போது தான், ராணுவ வீரர்கள் நம்மை காப்பதற்கு எந்த எல்லைவரை செல்கின்றனர் என்பதும் புரிந்தது.
கோட்டைக்குள் இருந்து நகரின் அழகைப் பார்ப்பது ஓர் அனுபவம் என்றால், கோட்டையின் வெளியே இருந்து கோட்டையின் பிரம்மாண்டத்தைப் பார்ப்பது இன்னும் சிறப்பான அனுபவம். வாழ்க்கைக்கும் இந்த இரண்டு கண்ணோட்டங்களும் பொருந்துமோ எனத் தோன்றியது.
– ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.