
உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 8-ம் இடத்திலும் கேது பகவான் 2-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, உங்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாறுபோல செயல்பட வைக்கும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். திக்குமுக்காடிக் கொண்டிந்த நீங்கள் இனி திசையறிந்து பயணிப்பீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும்.
2. தந்தையின் ஆரோக்கியம் கூடும். தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். எனினும் பல காரியங்களில் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சிலர் அவதூறு பரப்புவார்கள். கவனம் தேவை.
3. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். உங்களைச் சிலர் குறைத்து மதிப்பிட்டார்களே! இப்போது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை வந்து நீங்கும்.
4. பிள்ளைகள், உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமையடையச் செய்வார்கள். மகளுக்குத் தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். புது வீடு மாறுவீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
5. வியாபாரிகள், மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களே, உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் வந்து அமர்கிறார். ஆகவே, இனி எதிலும் யோசித்துப் பேசுவது சிறப்பு. கேது குடும்ப, தன, வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால், அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால், பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனும் முடிவுக்கு வருவீர்கள்.
7. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். பணம் நிறைய வரும் என்றாலும், செலவுகள் இருக்கும். மற்றபடி மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு விரும்பிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள்.

8. தூக்கமின்மை, மன உளைச்சல் வந்து போகும். சிலருக்கு அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவார்கள். தொழிலில் எவருக்கும் வாக்குறுதி கொடுக்கவேண்டாம். சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். பொறுமையுடன் பணியாற்றுங்கள்!
9. திருநாகேஸ்வரம் சென்று ஸ்ரீகிரிகுஜாம்பாள், ஸ்ரீபிறைமணி அம்மன் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி யையும் ராகு பகவானையும் வணங்கி வாருங்கள்; வாழ்வில் நிம்மதி பிறக்கும்.