
மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் குரோமா ஷோரூம் உள்ளிட்ட கடைகள் இருக்கும் பாந்த்ரா பஜார் எனும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும், அணைக்க முடியாத அளவுக்கு தீயின் வேகம் அதிகரித்த வண்ணம் இருந்ததால் உடனே தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புப்படையினரைத் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட பகுதி முழுவதும் கறும்புகை சூழ்ந்தது. தீயை ரோபோட் தீயணைப்பு இயந்திரம் ஒன்று சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மொத்தம் 13 தீயணைப்பு வாகனங்கள், 9 தண்ணீர் டேங்கர்கள் உதவியோடு பல மணி நேரம் போராடிய பிறகுதான் தீ கட்டுக்குள் வந்தது.
ஆனாலும், இந்தத் தீ விபத்தில் 198-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. அந்த ஷாப்பிங் காம்ப்ளக்சில் காலையில் தீப்பிடித்தபோது 100-க்கும் அதிகமானோர் அதனுள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்குள்ளான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாபா அத்திக்கிற்குச் சொந்தமானது.

அவரின் மகன் சீஷான் சித்திக் தீ விபத்து குறித்துக் கேள்விப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். ஆனாலும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக வரவில்லை என்று அவர் தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், நல்ல உபகரணங்கள் இருந்தும் சரியான பயிற்சி இல்லாத காரணத்தால் தீயை உடனே அணைக்க முடியவில்லை என்று கூறினார்.