
ராதாகிருஷ்ண விகே பாட்டீல் யார்?
மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் தனது மகனுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து இப்போது அமைச்சராக இருக்கிறார்.
போலியான ஆவணங்களை கொடுத்து மோசடி
2004 மற்றும் 2006-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், வேறு சிலரும் சேர்ந்து போலியான ஆவணங்களை கொடுத்து மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் ரூ.8 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டது. ஆனால் கடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை. அதனை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாகிகளாக இருந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் மற்றவர்களும் எடுத்துக்கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இது தொடர்பாக பாலாசாஹேப் என்பவர் போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அம்மனு தொடர்ந்து கிடப்பில் இருந்து கொண்டிருந்தது.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் உள்ள ரஹதா நீதிமன்றத்தில் இது தொடர்பாக பாலாசாஹேப் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டும் இம்மனுவை விசாரிக்கவில்லை. இதையடுத்து வருடங்கள் உருண்டோடின.
சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிராவில் உள்ள ரஹதா நீதிமன்றத்திற்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. பாலாசாஹேப் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

மோசடி வழக்கு பதிவு
அதன் அடிப்படையில், ரஹதா நீதிமன்றம் பாலாசாஹேப் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
அந்த உத்தரவை தொடர்ந்து மோசடி நடந்து 20 ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போது அமைச்சராக இருக்கும் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், பத்மஸ்ரீ விகே பாட்டீல் உள்பட 54 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்கெனவே அமைச்சர் மாணிக்கராவிற்கு கோர்ட் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை விதித்தது. ஆனால் அவர் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாநில அரசும் அவரது பதவியை பறிக்கவில்லை.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
