
வேலைக்கு செல்வோர் பலருக்கும் முக்கியமான ஒன்று ‘சம்பளம்’.
ஒவ்வொரு ஆண்டும், நம் திறன் மற்றும் வேலையை பொறுத்து சம்பளம் ஏற்றப்படும். ‘அப்ரைசல்’ (Appraisal) என்ற நடைமுறைக்கு பிறகே, இந்த சம்பள ஏற்றம் நடக்கும்.
இந்த அப்ரைசலில் தான், ‘கடந்த ஓராண்டாக நாம் என்ன செய்திருக்கிறோம்?’, ‘இனி என்ன செய்யப்போகிறோம்?’, ‘நம்முடைய வேலை எப்படி இருந்திருக்கிறது?’ என்பதை ஆராய்ந்து நமக்கான சம்பள உயர்வை நிறுவனங்கள் முடிவு செய்யும்.
‘இந்த அப்ரைசலின் போது ஸ்கோர் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?’ என்கிற டிப்ஸை தருகிறார் மனித வள நிபுணர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ்.
“அப்ரைசல் மீட்டிங்கின் போது, ‘நான் இதை செய்தேன்’, ‘நான் அதை செய்தேன்’ என்று செய்த வேலைகளை அடுக்குவதைக் காட்டிலும், அதனால், நிறுவனத்திற்கு என்ன லாபம் என்பதை தெளிவாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
நாம் செய்த வேலைகளை பக்காவாக நாமே முடித்திருக்க வேண்டும்.
நாம் செய்திருந்த வேலை பிறருக்கு அதாவது வாடிக்கையாளர்கள், நிறுவனத்திலேயே பிற பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு பிடித்திருந்து, அதுக்குறித்து நம்மை பாராட்டியிருந்தால், அதை இந்த மீட்டிங்கின் போது எடுத்துகாட்டுவது மிக முக்கியம்.

நாம் எதாவது தனித்துவமாக செய்திருந்தாலோ, எதிலாவது கலந்துகொண்டிருந்தாலோ அப்ரைசல் மீட்டிங்கின் போது அந்தத் தரவுகளை எடுத்து வைத்துகொள்ள வேண்டியது அவசியம்.
அப்ரைசல் மீட்டிங்கில் இரண்டு விதமாக நாம் தரவுகளை வைத்திருக்க வேண்டும். ஒன்று, தரத்தில் அடிப்படையிலானது. இன்னொன்று, எண்ணிக்கை அடிப்படையிலானது.
நிறுவனத்தின் கொள்கைகளின் படி, ‘நமது பணிகளை எப்படி செய்தோம்?’, ‘டீமோடு எப்படி இணைந்து பணிபுரிந்தோம்?’ போன்றவற்றை தெளிவாக அப்ரைசலில் பேசும்போது, இது நிச்சயம் நமது சம்பள உயர்வில் பிரதிபலிக்கும்”.