
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
47 ஆண்டுகால வரலாறு கொண்ட, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களில் மிகப்பெரிய தமிழ்ச் சங்கமான டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், “டெக்சாஸில் தமிழ்நாடு” சித்திரைத் தி(தெ)ருவிழா ஏற்பாடுகளை மிக விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது.
5000க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு குதூகலித்தனர். ஊர்த்திருவிழா கொண்டாட்ட முறையில் வண்ணக் காகிதங்களைக் கொண்டும் தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்தும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வள்ளுவனுக்குத் தேர் செய்தும் கீழடி குறித்த தகவல்களை பிரமாண்ட அலங்காரமாகச் செய்தும், ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புமிகு இடங்களின் ஓளிப்படங்களின் கண்காட்சியாக அமைத்தும் குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் ஏற்பாடுகள் அமைந்திருந்தது.
பருத்திப்பால், கம்பங்கூழ், பானகம், நன்னாரி சர்பத், கோலி சோடா, நீர் மோர், கோயம்புத்தூர் வண்டிக்கடை காளான், சேலம் தட்டுவடை, மதுரை கறி தோசை, செட்டிநாடு கீமா தோசை, டெல்லி அப்பளம், திண்டுக்கல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, சென்னை பிரியாணி, பொங்கலூர் இனிப்பு போளி, காரைக்குடி சிக்கன், இடியாப்பம், கொத்துப் பரோட்டா, கலக்கி, ஆம்ப்ளேட் மற்றும் பல வகையான உணவுகள் விற்பனை செய்யப்பட்டன

குழந்தைகள் குதித்து விளையாட Bounce Houses, குதிரை சவாரி, கொஞ்சி விளையாட விலங்கினங்கள், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், உறியடித்தல், பறையிசை, செண்ட மேளம், கம்பத்தாட்டம், படுகர் ஆட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் பல கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது.
38 மாவட்டங்களைச் சார்ந்த தமிழ் மக்கள் தங்களது மாவட்டத்தின் பெருமைகளை காட்சிப்படுத்தியதுடன், அலங்கரிக்கப்பட்ட உருள் வண்டிகளுடன் ஊர்வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது.

மக்கள் உற்சாகத்துடன் தங்கள் மாவட்டங்களைப் பற்றிய பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகளும் நமது ஊர்ப் பெட்டிக்கடை, பலூன் கடை, பஞ்சுமிட்டாய் கடை, பாப்கார்ன் கடை, மருதானிக் கடை என விழாக்கோலம் தமிழ்நாடு போல டெக்சாஸ் மாகாணத்திலும் அரங்கேறியது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.