
கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள ருதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இத் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் ஹோட்டல் இருந்ததால் தீயை உடனே கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஹோட்டலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் மனோஜ்குமார் தெரிவித்தார்.
7 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இத் தீ விபத்து குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கிறது.
இத் தீ விபத்து குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சுபன்கர் கூறுகையில், ”தீ விபத்தில் இன்னும் கூட சிலர் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. கொல்கத்தா மாநகராட்சி என்ன செய்கிறது என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீயில் இருந்து தப்பிக்க ஹோட்டல் ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த 13 பேரின் உடல்கள் ஹோட்டலின் பல்வேறு அறைகளில் இருந்து மீட்கப்பட்டது. தீவிபத்து காரணமாக கரும்புகை சூழ்ந்து கொண்டதால் அறைகளில் தங்கி இருந்தவர்களால் சுவாசிக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது போன்ற தீ விபத்துகளை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசை மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.