• April 30, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எல்லோருக்கும் இன்று ஸ்ட்ரெஸ் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இந்நிலையில் முடி உதிர்வுக்கு ஸ்ட்ரெஸ்ஸை காரணமாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை… இரண்டுக்கும் தொடர்பு உண்டா? 


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
  

கேச பராமரிப்பு மருத்துவர் தலத் சலீம்

‘ஏன் முடி உதிருது…’ என்ற கேள்விக்கு ‘கவலை… அதான்’ என்றாராம் ஒருவர். ‘அப்படி என்ன கவலை…’ என்று கேட்டதற்கு, ‘முடி உதிருதேன்னுதான்…’ என்றாராம் பதிலுக்கு. முடி உதிர்வு பற்றிய பிரபலமான ஜோக் இது. நகைச்சுவையாகத் தெரிந்தாலும் இது உண்மையும்கூட.

முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முதலிடம் மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு.  மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வுப் பிரச்னையை ‘அலோபேஷியா அரியேட்டா’, ‘டெலோஜன் எஃப்ளுவியம்’ மற்றும் ‘ட்ரைக்கோ டில்லோமேனியா’ என  மூன்றாக வகைப்படுத்தலாம்.

முதல் வகையான ‘அலோபேஷியா அரியேட்டா’வில்,  ரத்த வெள்ளை அணுக்கள் ஃபாலிக்கிள் எனப்படும்  கூந்தலின் வேர்ப்பகுதியைத் தாக்கி, கூந்தல் வளர்ச்சியைத் தடைசெய்வதுடன், முடி உதிர்வுக்கும் காரணமாகும்.

அரியவகை மனநல பாதிப்பான இதில், உடலில் எங்கு முடிகள் இருந்தாலும், அதைப் பிடுங்க நினைப்பார்கள்.

‘டெலோஜன் எஃப்ளுவியம்’ என்கிற நிலையில் அதீத மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, வளரும் நிலையில் உள்ள  முடிக் கற்றைகள், உதிர்வதற்கு முன்பான ஓய்வுநிலைக்குத் தள்ளப்படும். 

அதிக டென்ஷன், கவலையில் இருக்கும் நாள்களைத் தொடர்ந்து முடி உதிர்வும் அதிகமாக இருப்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா… காரணம் இதுதான்.

சாதாரணமாக தலை சீவும்போதும் தலைக்குக் குளிக்கும்போதும் கொத்துக் கொத்தாக முடி உதிர்வதெல்லாம் இந்தப் பிரச்னையால்தான்!  

அடுத்தது ‘ட்ரைக்கோடில்லோமேனியா’. அரியவகை மனநல பாதிப்பான இதில், உடலில் எங்கு முடிகள் இருந்தாலும், அதைப் பிடுங்க நினைப்பார்கள்.  

நெகட்டிவ் எண்ணங்கள், மன உளைச்சல், படபடப்பு, தோல்வி, தனிமை, அதீத களைப்பு, விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுகிறபோது, முடிகளைப் பிடுங்கி எறிய ஓர் உந்துதல் உண்டாகும்.

இந்த பாதிப்பு உள்ளவர்கள், தங்களது மனநலப் பிரச்னைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாதவரை, இவர்களது முடி உதிர்வுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது.

மன அழுத்தம், முடி உதிர்வு

கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. புரதச்சத்தும் இரும்புச்சத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். அந்த வகையில் கறிவேப்பிலை, கீரை, தயிரில் ஊற வைத்த வெந்தயம், முட்டை, பனீர் போன்றவையும், நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் வைக்காவிட்டாலும், வாரத்தில் 2-3 நாள்களுக்காவது தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகிப்பது, கூந்தல் வறட்சியைப் போக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். ஆறுதலான ஒரு விஷயம் என்னவென்றால், ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தால் உண்டாகிற முடி உதிர்வுப் பிரச்னை  நிரந்தரமானதல்ல. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினாலே, கூந்தல்  உதிர்வு சரியாகும்.  

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *