
அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் வாங்குவதுதான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. ஐதிகத்தின்படி அது சரிதான். காரணம் அட்சயம் என்றாலே குறைவின்றி வளர்வது என்றுதான் பொருள். இந்த நாளில்தான் சகல ஐஸ்வர்யங்களும் பாற்கடலில் இருந்து தோன்றியதாகச் சொல்வார்கள். குசேலர் கிருஷ்ணரின் அருளால் செல்வந்தர் ஆனதும் அட்சயதிருதியை நாளில்தான். குபேரன் இந்த நாளில் ஈசனை வழிபட்டு சகல நிதிகளையும் நிரந்தரமாக்கிக்கொண்டான் என்கின்றன புராணங்கள்.
இப்படிப்பட்ட மகிமை பொருந்தி அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 30 – ம் தேதி புதன்கிழமை அட்சய திருதியைக் கொண்டாடப்படுகிறது. நாளை மாலை 6.41 வரை திருதியை திதி உள்ளது. இரவு 8.21 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. இரண்டும் இணைந்திருப்பதுவே மிகவும் சுபமுகூர்த்தமான நாளாகக் கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் எதை வாங்கினாலும் அது பெருகும். எனவே வசதி இருப்பவர்கள் தங்கமும் வாங்கலாம். தங்கம் வாங்க இயலாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? எப்படிப்பட்ட வழிபாடு செய்தால் செல்வ வளம் சேரும் என்பது குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம்.
தவறியும் இதைச் செய்யாதீர்கள்
“அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் வழக்கம் கடந்த முப்பது ஆண்டுகளில் பிரபலமடைந்ததுதான். மீடியாக்களின் பெருக்கத்தினால் பலரும் அந்த நாளின் சிறப்புகளைச் சொல்லச் சொல்ல மக்கள் ஆர்வம் கொண்டு செல்வம் சேர தங்கம் வாங்கத் தொடங்கினர். ஒருவகையில் அது நல்ல விஷயமே. எப்படியோ ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்று நினைப்பது நல்லதுதானே. அதேவேளையில் கடன் வாங்கித் தங்கம் வாங்கவே கூடாது. காரணம் அட்சய திருதியை நாளில் என்னென்ன வாங்குகிறீர்களோ அவை அனைத்தும் பன் மடங்கு வளரும். கடன் வாங்கினால் கடனும் வளரலாம் என்பதால் தேவையில்லாமல் கடன் வாங்கி நகை வாங்காதீர்கள்.

மேலும் இது சந்திரனுக்கு உகந்த நாள் என்பதால் வெண்மை நிறப்பொருள்களை வாங்குவது மிகவும் சிறப்பு. குறிப்பாக பால், பச்சரிசி, வெள்ளி, வெள்ளை வஸ்திரம் ஆகியவற்றை வாங்குவது சிறப்பு. வாங்குவது மட்டுமல்ல அவற்றை தானம் செய்வதும் மிகவும் விசேஷம்.
அட்சய திருதியை நாளில் தானம் கொடுத்தால் பன்மடங்கு புண்ணிய பலம் சேரும். நாளை உணவு வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது என்கின்றன சாஸ்திரங்கள். நீங்கள் என்னென்ன தானம் செய்கிறீர்களோ அவை பன்மடங்காக உங்களை வந்து சேரும்.
வீட்டில் அட்சய திருதியை வழிபாடு செய்வது எப்படி?
பாற்கடலில் பிறந்த அனைத்தும் மகாலட்சுமியின் அம்சம் கொண்டவை. அந்த வகையில் உப்பு செல்வ கடாட்சம் நிறைந்தது என்கிறது சாஸ்திரம். கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்திருந்தால் செல்வம் நிறைந்திருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்வதும் இதனால்தான். அப்படிப்பட்ட கல் உப்பை அட்சய திருதியை நாளில் வாங்குவது விசேஷம். அதேபோன்று பச்சரிசியையும் விலை கொடுத்து வாங்க வேண்டும். இரண்டையும் அளக்கும் படியில் (மரக்கால்) போட்டு கோபுரமாக குவித்துப் பூஜை அறையில் வைக்க வேண்டும். மரக்கால் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் டம்பளர் அல்லது சொம்புகளைப் பயன்படுத்தலாம். அவற்றுக்கு சந்தன குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
விளக்கேற்றி சுவாமி படத்துக்கு மலர் சாத்தி தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். நாள் முழுவதும் அந்த உப்பும் அரிசியும் பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். சுவாமிக்கு இந்த நாளில் பால் பாயசம் செய்து சமர்ப்பணம் செய்வது விசேஷம். அருகில் இருக்கும் வீட்டுக் குழந்தைகளை அழைத்துப் பால்பாயாசம் விநியோகம் செய்ய அன்னை லட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
மறுநாள் பூஜை அறையில் இருந்து உப்பையும் அரிசியையும் எடுத்து நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் அரிசி உப்புடன் சேர்த்துவிடுங்கள். இந்த நாளில் மகாலட்சுமித் தாயார் சந்நிதிக்குச் சென்று வழிபடுவது விசேஷம். இப்படி பக்தியுடன் வழிபாடு செய்தால் வரும் ஆண்டுக்குள் செல்வ கடாட்சம் பெருகும். தங்கம் வாங்கி தானம் செய்யும் அளவுக்கு சௌபாக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.
தங்கம் வாங்க நல்ல நேரம்
குரு ஹோரை: காலை 9-10 மணி அல்லது மாலை 4-5 மணி
சுக்ர ஹோரையில்: இரவு 7-8 மணி