• April 30, 2025
  • NewsEditor
  • 0

கனடா நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று கனட அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு லிபரல் கட்சியின் தலைவராக பதவியேற்றவர். மார் கார்னியின் வெற்றிக்கு முதல் தலைவராக வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.

அவரது வாழ்த்தில், கனடாவும் இந்தியாவும் ஜனநாயக விழுமியங்களைப் பகிர்தல், சட்டத்தின் ஆட்சிக்கு முழுமையாக அர்பணித்தல், மக்களுக்கு இடையிலான வலிமையான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

“நமது கூட்டாண்மையை வலுபடுத்துவதன் மூலம், மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Modi

லிபரல் கட்சியின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான உறவு அத்தனை இலகுவானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி. தற்போது தேர்தலில் வென்று அவரே பிரதமராக தொடர்கிறார்.

இந்த நிலையில், பிரதமராக தொடரும் கார்னியின் பதவியேற்பு இந்தியாவில் எப்படி பிரதிபலிக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மார்க் கார்னி பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு நடுவில் இந்து சமூகத்தினரைச் சந்தித்து ராம நவமி கொண்டாடினார். தேர்தலுக்கு முன்பு ட்ரூடோவின் ஆட்சியில் பிளவுபட்ட இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.

ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் எழுந்த பல சர்ச்சைகளை முடித்து வைக்கும் விதமாக மார்க் கார்னி தலைகீழ் முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Justin Trudeau
Justin Trudeau

‘Canada – India உறவு முக்கியம்’

மார்க் கார்னி தன்னை உறவுப் பாலங்களை உருவாக்குபவராக பிரசாரம் செய்துகொண்டார். இதனால் அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடைபெற்றுவரும் தருவாயில் இந்தியா உடனான உறவை புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார் மார்க் கார்னி.

தேர்தலுக்கு சில நாள்கள் முன்பான செய்தியாளர் சந்திப்பில் கூட, இந்தியா உடனான உறவுகள் மிக முக்கியம் எனப் பேசியிருந்தார் கார்னி.

“தனிப்பட்ட ரீதியிலும், பொருளாதார மற்றும் ராஜ தந்திர ரீதியிலும் இந்தியா உடனான உறவு முக்கியம்” எனக் கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் விழக் காரணமாக இருந்த காலிஸ்தானி ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைப்பற்றி நேரடியாக எதுவும் தெரிவிக்காத மார்க் கார்னி, கடந்த கால சுமைகளை இறக்கி வைக்க தான் தயாராக இருப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

mark carney
mark carney

இருநாட்டு உறவில் உள்ள அழுத்தங்களை குறைக்க பரஸ்பர மரியாதையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கனடா இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க முயல்வதை, கனடாவை 51-வது மாகாணமாக மாற்றும் ட்ரம்ப்பின் அச்சுறுத்தும் பேச்சு மற்றும் வரி விதிப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இணைத்து புரிந்துகொள்ளலாம்.

லிபரல் கட்சி கடந்த 10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, பொருளாதார ரீதியாக கனடாவை சரிவை நோக்கி நகர்த்துவதாக விமர்சிக்கப்பட்டது.

வரிவிதிப்பு நடவடிக்கையால் கனடாவில் பொருளாதார நெருக்கடி வரவிருக்கிறது என்ற அச்சமும் உள்ளது.

ஆனாலும் ட்ரம்ப்பின் பேச்சுக்கு எதிரான கார்னியின் தேசியவாத பேச்சுகளும், வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிரான அரணாக லிபரல் கட்சியை முன்வைத்ததும் அவரது வெற்றிக்கு உதவியிருக்கிறது.

trump
trump

இதனால் லிபரல் கட்சியினர் ட்ரம்ப்புக்கு நன்றி சொல்ல வேண்டும். இது இந்தியாவுக்கு சாதமானதாக அமைந்துள்ளது. ட்ரம்ப் கொடுக்கும் தொல்லைகளை சமாளிக்க அதிக நண்பர்கள் வேண்டும் என்பதை மார்க் கார்னி புரிந்து வைத்துள்ளார்!

கடந்த மார்ச் மாதம், “கனடா ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்தவே விரும்புகிறது, இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன” எனப் பேசியிருந்தார்.

இந்தியாவின் எதிர்பார்ப்பு

கார்னி இந்தியாவுடனான உறவை சரி செய்ய விரும்புவதனால், அவரது வெளியுறவுக்கொள்கையில் காலிஸ்தானி தீவிரவாதிகளின் செல்வாக்கு குறைவாக இருக்கும் என இந்தியா நம்புகிறது.

ட்ரூடோவின் ஆட்சி காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் ஜக்மீத் சிங்கின் தேசிய ஜனநாயகக் கட்சியின் (NDP) ஆதரவைச் சார்ந்திருந்தது. ஆனால் இந்த தேர்தலில் ஜக்மீத் சிங் தோல்வியை சந்தித்திருப்பதுடன், NDP தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

jagmeet singh
jagmeet singh

ஜக்மீத் சிங்கின் முடிவு இந்தியா-கனடா உறவுகள் மேம்படுவதற்கு உதவும். சில அறிக்கைகள் ஏற்கெனவே இந்தியா, கனடாவில் தூதர்களை மீண்டும் அமர்த்த முடிவு செய்துள்ளதாகக் கூறுகின்றன.

கனடாவில் சுமார் 18 லட்சம் இந்தோ-கனடியர்களும் பத்து லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களும் உள்ளனர், இது அதன் மக்கள் தொகையில் 3% க்கும் அதிகமாகும்.

மேலும் கனடா, சுமார் 4,27,000 இந்திய மாணவர்களுக்கு இடமளித்துள்ளது.

இந்தியா மற்றும் கனடா இடையிலான ராஜாந்திர உறவுகளில் பதட்டநிலை ஏற்பட்டதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கனடா உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டால் CEPA தொடரலாம். இது இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பதாக அமையும். இதையே மார்க் கார்னிக்கு பிரதமர் மோடியும் வாழ்த்தும் சுட்டிக்காட்டியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *