• April 30, 2025
  • NewsEditor
  • 0

டெக்னாலஜி வளர்ந்துகொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கையிலும் முழு நேரமும் மொபைல் போன் இருக்கிறது. பெற்றோர்களுடனும், சக குழந்தைகளுடனும் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு முழு நேரமும் டிவி, மொபைல் போன் என்றே அவர்களின் நாள்கள் நகர்கிறது. சாப்பிடும்போதும், தூங்கும் நேரங்களிலும்கூட அவர்கள் இந்த மொபைல் போனை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இதனால் கண் பிரச்னை, தூக்கப் பிரச்னை என பல பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

மொபைல்

குழந்தைகள் மொபைலை அதிகமாகப் பயன்படுத்துவதால் கண் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது. 20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து 20 cm தொலைவில் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது கண் பார்வைத் திறன் குறையும் வாய்ப்பு இருக்கும். இதனால் கண்ணாடி போடும் தேவை வரும். கண் சோர்வும் ஏற்படும். குழந்தைகள் தொடர்ந்து மொபைல் போனை அதிக நேரம் பார்க்கும்போது கண்ணை அதிகம் சிமிட்டிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்க்கலாம். இதற்குக் காரணம், தொடர்ந்து ஒரே பொருளை அதிக நேரம் பார்க்கும்போது கண்ணில் ஏற்படும் வறட்சியே ஆகும்.

இரண்டாவது முக்கியப் பிரச்னையாக கவனச்சிதறல் உள்ளது. அதிகமாக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் பார்க்கும்போது அதிக கவனச்சிதறல் காரணமாக நிறைய குழந்தைகளுக்கு ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) என்ற நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 20 நொடி அல்லது 30 நொடியில் ரீல்ஸ் பார்த்துப் பழகிவிட்டு அதிக கவனச்சிதறலினால் அவதியுறும் குழந்தைகள், வகுப்பறையில் ஆசிரியரின் கண்ணைப் பார்த்துப் பாடத்தை கவனிப்பதில்லை. அவர்களால் பொறுமையாக உட்கார்ந்து ஒரு பாடத்தைப் படிக்க முடியவில்லை. கணிதத்தில் ஒரு கணக்குக்குத் தீர்வு காணலாம் என்றெல்லாம் ஒரு செயலைச் செய்ய நினைப்பதில்லை, அவர்கள்.

குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார்
குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார்

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்குப் பேச்சுக் குறைபாடு வரவும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் பேச ஆரம்பிப்பதும் தாமதமாக வாய்ப்புள்ளது.

இப்படி அவர்கள் மொபைல் அதிகம் பயன்படுத்துவதால் கண் பிரச்னைகள், கவனச்சிதறல் மட்டுமல்லாமல் மனம் சார்ந்த பிரச்னைகள், மனச்சோர்வு, குழப்பம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எதிர்காலத்தில் நிலையாக ஒரு வேலை செய்வது கடினம்; எதையும் யோசித்துச் செய்யும் அளவுக்கு கவனம் இல்லாமல் போகலாம்; ஒரு வேலையைப் பொறுமையாக யோசித்துச் செய்யாமல் அவசர அவசரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கலாம்; பெரிய ஆளுமைகளாக வளர வேண்டும் என்கிற லட்சியங்கள் இல்லாமல் போகலாம்; எளிதில் முடியும் வேலையைத் தேர்ந்தெடுக்க விரும்பலாம்.

மொபைல் டி-அடிக்ஷன் கிளினிக்
மொபைல் டி-அடிக்ஷன் கிளினிக்

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து வெளியே கொண்டு வரும்போது போதைப் பொருள் கொடுக்காததால் அவர்களுக்குக் கோபம் வருவது, யாரையாவது அடிப்பது, துன்புறுத்துவது போன்ற செயல்களுக்கு மனம் செல்லும். அதேபோன்று மொபைல் போன் கொடுக்காமல் இருக்கும்போதும் இந்த மாதிரியான யோசனைகள் வரக்கூடும். சமீபத்தில் மொபைல் போனை வாங்கிக்கொண்ட ஆசிரியரை காலணியால் தாக்க முயன்ற மாணவியை இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன். இதுபோன்ற காரணங்களால்தான், தற்போது மொபைல் டி-அடிக்ஷன் கிளினிக் என்று நிறைய மன நல மருத்துவமனைகளில் ஆரம்பித்துள்ளார்கள்.

மொபைல் போன் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வைப் பெறுங்கள், ஒத்திப்போடாதீர்கள்” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *