• April 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்கவும் கருத்துகள் எழுந்தன.

இதற்கிடையில், பொதுமக்களிடம் கருத்துகளை ரயில்வே நிர்வாகம் கேட்டது. இதுதவிர, கள ஊழியர்களின் நேரடி தொடர்பு மூலம் பயணிகளின் பதில்கள் பெறப்பட்டன. அலுவலகம் செல்பவர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் (49004 ) வருகை நேரத்தை முன்கூட்டியே அதிகரிப்பதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாலையில் அலுவலகம் முடித்து, செல்வோர் வசதிக்காக ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளின் இக்கருத்துகளுக்கு ஏற்ப, ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *