
புதுடெல்லி: பஹல்காமின் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் பல சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், அம்மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ல் அனந்தநாக்கின் பைஸாரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் வந்த சுற்றுலாவாசிகள் 26 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் அங்கு வந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது முதன்முறையாக நடந்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலால், ஜம்மு – காஷ்மீரில் பல்வேறு வகை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக, காஷ்மீரின் 12 முக்கிய சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த சுற்றறிக்கை அல்லது அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணமான இந்த நடவடிக்கையால் அந்த மாநில மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.