• April 29, 2025
  • NewsEditor
  • 0

ஸ்வர்ணலதா… ‘குயில் பாட்டு’, ‘மாலையில் யாரோ’, ‘ஆட்டமா தேரோட்டமா’, ‘முக்காலா’, ‘போறாளே பொன்னுத்தாயி’, ‘மெல்லிசையே’, ‘என்னுள்ளே என்னுள்ளே’ என நம்முள்ளே ஊடுருவிய உன்னதக்குரல்.

எல்லா பாடல்களும் ஃபேவரைட்ஸ் அல்ல. ஆனால், ஸ்வர்ணலதா பாடிய எல்லா பாடல்களுமே ஃபேவரைட்ஸ்தான் என்று அவரது ரசிகர்கள் சிலாகிப்பதுண்டு.

அதனால்தான், ஸ்வர்ணலதா மறைந்து 15 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவரது பிறந்தநாளை மறக்காமல் கொண்டாடித்தீர்த்து வருகிறார்கள்.

நவரசக் குரலால் நம்மை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணலதாவின் 52-வது பிறந்தநாளையொட்டி அவரது அண்ணன் ராஜசேகரிடம் பேசினேன்.

மறக்கமுடியா நினைவுகளிலிருந்து மீளாதவராய் பேசத் தொடங்கினார்.

“தங்கை சொர்ணா பிறந்தநாளுன்னாலே எங்க எல்லாருக்கும் ஸ்பெஷல். எல்லா சொந்தக்காரங்களும் வீட்டுக்கு வந்துடுவாங்க. ஆடல், பாடல்னு வீடே களைகட்டும்.

சொர்ணா மேடைக்கச்சேரிகள், சினிமா பாடல்கள்னு சின்ன வயசுலேர்ந்தே பாடிட்டு வர்றதால எப்பவும் பிஸியா இருப்பா. அந்த பிஸியிலும் பிறந்தநாள் அன்று மட்டும் எங்களோடதான் கொண்டாட்டம் இருக்கும்.

ஸ்வர்ணலதா

உடன்பிறந்தவங்க, சொந்தக்காரங்க புடை சூழ சந்தோஷமா குழந்தைப்பிள்ளை மாதிரி முகமெல்லாம் பூரிப்போட கொண்டாடுவா.

எல்லோரும் ஒன்னா சேர்ந்து இருக்கிறதுதான் சொர்ணாவுக்குப் பிடிச்ச விஷயம். அதனால, பிறந்தநாளை எப்பவும் எங்களுக்கான நாளா மாற்றிடுவா.

கூட இருக்கிறவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுதான் சொர்ணாவுக்கு ஆனந்தமே. பேரன்புக்கார தங்கை.

உடன்பிறந்தவர்களில் சொர்ணா எனக்கு நாலாவது தங்கை. பிறக்கும்போதே தங்கம் மாதிரி ஜொலி ஜொலிப்பா இருந்ததால, ஸ்வர்ணலதான்னு அப்பா பேரு வெச்சாரு.

நாங்க எல்லோருமே அவளை சொர்ணான்னுதான் செல்லமா கூப்பிடுவோம்.

எங்க அப்பா காஃபி ஏஜென்ஸி வெச்சிருந்தார். நல்ல வசதியான குடும்பம். எங்க எல்லோரோட பிறந்தநாளையும் கேக் வெட்டி, ஸ்வீட் எல்லாம் வாங்கி ரொம்ப கிராண்டா செலிபிரேட் பண்ணுவார்.

அதுல, சொர்ணா பிறந்தநாள் அவளுக்கு மட்டுமில்ல; எங்களுக்கும் கொண்டாட்டமான விஷயம். சொர்ணாவுக்குப் பாயாசம் ரொம்பப் பிடிக்கும். கேரளாவுல செய்யப்படுற அட பிரதமன் விரும்பி சாப்பிடுவா.

உணவு வகைகளில் மட்டன் பிடிக்கும். அதனால, அம்மா அவ பிறந்தநாளுக்கு அட பிரதமன், மட்டன் குழம்பு, சுக்கான்னு வகை வகையா செய்து அசத்திடுவாங்க.

எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறது சந்தோஷமா இருக்கும். கேக் எல்லாம் வெட்டி முடிச்சதும் சொர்ணாவுக்கு கிஃப்ட் கொடுப்போம். அதுல, நான் அதிகமா கொடுத்தது சிடிக்கள்தான்.

அண்ணன் ராஜசேகருடன் ஸ்வர்ணலதா
அண்ணன் ராஜசேகருடன் ஸ்வர்ணலதா

கஜல் பாடல்கள் சொர்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, கஜல் பாடல்கள், பழைய பாடல்கள் எல்லாத்தையும் சிடில ரெக்கார்ட் பண்ணி கொடுப்பேன். எக்ஸைட்மெண்டா வாங்குக்குவா.

அவ பாடினதுல அவளோட ஃபேவரைட் ‘மாலையில் யாரோ’ பாட்டுதான். அதுக்கு தேசிய விருதும் கிடைக்கும்னு எதிர்பார்த்தா. ஆனா, ரசிகர்கள் இப்போ வரைக்கும் எல்லா இடத்திலும் அந்தப் பாட்டுக்கு அங்கீகாரத்தைக் கொடுத்துட்டுத்தான் இருக்காங்க.

அதேமாதிரி, நண்பர்கள் உறவினர்கள்னு எல்லோர்கிட்டேயும் ரொம்ப எதிர்பார்ப்பில்லாம பழகுவா. ஆடம்பரமான பொருட்களைவிட சின்ன கிஃப்ட்டா இருந்தாலும் அதை எவ்ளோ அன்போட கொடுக்கிறோங்கிறதைத்தான் பெரிய விஷயமா பார்ப்பா.

அதேநேரம், மத்தவங்க பிறந்தநாளை காஸ்ட்லி பொருட்களா கொடுத்து அசத்திடுவா. என் பிள்ளைங்க பிறந்தநாளை ஒரு அத்தையா தங்கம் வாங்கிக்கொடுத்து கொஞ்சித் தீர்ப்பா. பாசக்காரப் பொண்ணு.

அவளோட பிறந்தநாளா இருந்தாலும் குடும்பத்துல மத்தவங்க பிறந்தநாளா இருந்தாலும் சொர்ணா தவறாம கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குப் போய்ட்டு வந்துடுவா. பாதிநாள் அங்கதான் இருப்பா.

swarnalatha
swarnalatha

இப்போ, அவ இல்லைன்னாலும் அவளோட பிறந்தநாளுக்குக் கோவிலுக்குப் போய்ட்டுத்தான் இருக்கோம். அவ பயன்படுத்தின பொருட்களையெல்லாம் பாதுகாப்பா பத்திரப்படுத்தி வெச்சிருக்கோம்.

ரசிகர்களே அவ மேல உயிரா இருக்கும்போது, என் ரத்தத்துல கலந்த சொர்ணாவோட நினைவுகளையும் பிறந்தநாளையும் எப்படி மறக்கமுடியும்?

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவளுக்குப் பிடிச்ச ‘அட பிரதமன்’ படையலில் இடம்பிடிச்சிடும். முக்கியமா பிறந்தநாள், நினைவுநாளுக்கு ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுப்போம்.

இதையெல்லாம் சொர்ணா எங்க இருந்தாவது பார்த்துட்டுத்தான் இருப்பாங்கிற நம்பிக்கை இருக்கு. நிச்சயம் சந்தோஷப்படுவா. அதுதான், அவளுக்கும் பிடிக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் சொர்ணா!” என்கிறார் உணர்வுப்பூர்வமாக.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *