
சென்னை: “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும், அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகத்தான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டுமல்ல தமிழக மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் பழனிசாமி சொன்ன பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, என அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார்.