• April 29, 2025
  • NewsEditor
  • 0

நாடு முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் கிளம்ப…

2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, தனது கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2015-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றப் போது, இவர் தான் அந்த நாட்டின் இரண்டாவது இளம் பிரதமர்.

அவர் பிரதமராக பதவியேற்ற காலக்கட்டத்தில் கனடாவின் பொருளாதாரம் பெரும் ஆட்டத்தை கண்டிருந்தது. இவை அனைத்தையும் சரி செய்து நாடே செல்லப்பிள்ளையாக கொண்டாடிய இவருக்கு, 2019-ம் ஆண்டு முதல் சறுக்கல்கள் தொடர்ந்தன.

ஊழல், கொரோனா பேரிடர் காலத்தை சரியாக கையாளவில்லை போன்ற குற்றசாட்டுகள் எழ, ஜஸ்டின் ட்ரூடோவின் செல்லப்பிள்ளை பிம்பம் கொஞ்சம் கொஞ்சம் தகரத் தொடங்கியது. இந்தியாவிற்கு எதிரான மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடும் இவரது சரிவிற்கு முக்கிய பங்காற்றி இருக்கிறது.

மார்க் கார்னி | Mark Carney

கார்னி ஆட்சிக்கு வந்த கதை

ஒருக்கட்டத்தில் மக்களிடம் இருந்து மட்டுமல்ல, சொந்தக் கட்சியிலேயே இவர் மீது எதிர்ப்புகள் கிளம்ப, அதை சமாளிக்க முடியாமல் தனது பிரதமர் பதவியையும், லிபரல் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார் ட்ரூடோ.

ராஜினாமா செய்தாலும், கடந்த மார்ச் 14-ம் தேதி, மார்க் கார்னி பிரதமராக தேர்ந்தெடுக்கும் வரை, அவரே அந்தப் பதவியில் நீடித்தார்.

அப்போது, பிரதமராக மட்டுமல்ல, கார்னி லிபரல் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

பிரதமராக பதவியேற்ற கிட்டதட்ட 10 நாள்களில் (மார்ச் 23-ம் தேதி), ஆட்சியை கலைத்து, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஆளுநரிடம் கேட்டுக்கொண்டார், கார்னி.

இந்தக் கோரிக்கையை ஆளுநரும் ஒப்புக்கொள்ள, நேற்று (மார்ச் 28, 2025) கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரேயும் தான் முக்கியமாக மோதினர்.

கனடாவின் மொத்த சீட்டுகளின் எண்ணிக்கை 343. தற்போது வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின் படி, மார்க் கார்னி 167 சீட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பியர் பொய்லிவ்ரே 145 சீட்டுகளை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துள்ளார். பெரும்பான்மை அரசாங்கம் நடத்த கார்னி 172 சீட்டுகளை பெற்றிருக்க வேண்டும். அதனால், தற்போது சிறுபான்மை அரசாங்கமாக தான் கார்னி தனது ஆட்சியை நடத்துவார்.

கனடா நாடாளுமன்றம்
கனடா நாடாளுமன்றம்

யார் இந்த கார்னி?

மார்க் கார்னி கனடாவின் 24-வது பிரதமர் ஆவார். 59 வயதான கார்னி கடந்த மார்ச் 14-ம் தேதிக்கு முன்பு எந்த அரசப் பதவியையும் வகித்ததே இல்லை.

அடிப்படையில் இவர் ஒரு வங்கியாளர். பேங்க் ஆஃப் கனடாவின் ஆளுநராக இருந்த கார்னி 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து கனடா தப்ப பெரும் பங்காற்றியவர். எந்த அரசப்பதவியும் வகிக்காமல், கனடாவில் பிரதமரான முதல் நபர் இவர்தான்.

இது மூன்றாவது தேர்தல்…

2015-ம் ஆண்டு, கனடா பிரதமராக ட்ரூடோ பதவியேற்றப் பின், நேற்று நடந்த தேர்தலோடு இதுவரை மூன்று தேர்தல்களை கனடா சந்தித்துள்ளது.

லிபரல் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்து வந்த வேளையில், 2019-ம் ஆண்டு, தேர்தல் நடந்தது. அதன் பின், ஜஸ்டின் ட்ரூடோ 2021-ம் ஆண்டு, இடைதேர்தல் நடத்தினார். கடந்த மாதம், ஆட்சி கலைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடந்தது.

இந்த மூன்று தேர்தல்களிலுமே லிபரல் கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், மூன்று முறையுமே லிபரல் கட்சிக்கு தான் அவர்கள் வெற்றியைத் தந்துள்ளனர்.

ட்ரூடோ - ட்ரம்ப்
ட்ரூடோ – ட்ரம்ப்

ட்ரூடோவும், ட்ரம்ப்பும்!

இதற்கு இரு முக்கிய காரணங்கள் ட்ரூடோ மற்றும் ட்ரம்ப். லிபரல் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வர முக்கிய காரணம் ட்ரூடோ. அக்கட்சியின் பதவி மற்றும் ஆட்சி பதவியில் இருந்து ட்ரூடோ விலகியது லிபரல் கட்சிக்கு மிகப்பெரிய ப்ளஸாக மாறியுள்ளது. மேலும், கார்னி தேர்தல் பிரசாரத்தின் போது முழுவதும் ட்ரூடோவை தள்ளியே வைத்திருந்தார்.

கூடுதலாக, ட்ரூடோவின் பொருளாதார கொள்கையை விமர்சித்ததோடு, அவர் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய வரி சட்டத்தை ரத்து செய்தார்.

‘நான் நெருக்கடி காலங்களுக்கு தான் சரியானவன். அமைதியான காலக்கட்டத்தில் நான் அவ்வளவாக சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று கார்னி முன்னெடுத்த பிரசாரம், அவருக்கு வெகுவாக கைக்கொடுத்தது. காரணம், இந்தப் பிரசாரம் 2008-ம் ஆண்டின் கனடா நாட்டிற்கான அவரது பணியை மக்களின் கண்முன் நிறுத்தியது.

இதனால், இப்போது இருக்கும் நெருக்கடியில் இருந்து வெளியேற கார்னி நிச்சயம் வழி செய்வார் என்ற மக்களின் நம்பிக்கை கார்னிக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுத் தந்துள்ளது.

‘கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவேன்’, ‘கனடா மீது அதிக வரி விதிப்பு’, ‘கனடா போதைப்பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கனடாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது கனடா மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ட்ரம்ப்பை கடுமையாக எதிர்த்து நிற்கிறார் கார்னி. அதனால், ட்ரம்ப்பிற்கு ஏற்ற ஆள் ‘கார்னி’ தான் என்று கனடா மக்கள் கருதுகின்றனர்.

மார்க் கார்னி | Mark Carney
மார்க் கார்னி | Mark Carney

கார்னி என்னக் கூறுகிறார்?

தேர்தல் வெற்றிப்பிறகு உரையாற்றி உள்ள கார்னி, “கடந்த சில மாதங்களாக நான் எச்சரித்து வருவதுப்போல அமெரிக்காவிற்கு நமது நிலம், தண்ணீர், நாடு மற்றும் வளங்கள் தேவை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்மை பிரிக்க முயல்கிறார். அப்போது தான், அமெரிக்காவால் நம்மை சொந்தம் கொள்ள முடியும். இது நடக்கவே நடக்காது.

ஆனாலும், உலகம் அடிப்படையிலேயே மாறிவிட்டது. அந்த யதார்த்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே பேசும்போது, “கனடாவின் பொது நலனுக்காகவும் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பிற்கு எதிராகவும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமருடன் பணிப்புரியும்” என்று கூறியுள்ளார்.

ஆக, மொத்தம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ட்ரம்ப்பை எதிர்ப்பதில் குறியாக உள்ளார்கள் என்று நன்கு தெரிகிறது.

கார்னிக்கு இருக்கும் சவால்கள்

தற்போது கனடா கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதை நிச்சயம் சீக்கிரம் சரிசெய்ய வேண்டும்.

லிபரல் கட்சி ஆட்சியை பிடித்திருந்தாலும், அது சிறுபான்மை அரசாங்கத்தை தான் நடத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், கார்னி மக்களின் நம்பிக்கை பெற வேண்டியது மிக மிக முக்கியம்.

கனடாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்காவை தான் சென்று சேர்கிறது. புதிதாக எந்த வரியை அமெரிக்கா கனடா மீது விதித்தாலும், அது கார்னிக்கு பெரும் தலைவலியாக மாறும்.

ட்ரம்ப் கனடாவின் மீது தொடர் விமர்சனங்கள் வைத்து வருகிறார் மற்றும் ‘கனடாவை அமெரிக்கா பிடிக்கும்’ என்றெல்லாம் பேசி வருகிறார். அதனால், கனடா குறித்து அமெரிக்காவின் காய் நகர்த்தல்களை கார்னே நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுபான்மை கொண்ட அரசு கனடாவில் இரண்டரை வருடங்களை தாண்டுவதே அரிது. இதை தகர்பாரா கார்னி என்பதை அவரது செயல்பாடுகள் மூலம் சீக்கிரம் தெரிந்துகொள்ளலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *