
கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு பிரியாணியுடன் குவாட்டரை மறைத்துக் கொடுத்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது போலிருக்கிறது. அதனால் தான் திருக்கோவிலூரில் பிரியாணி விருந்துடன் பீர் பாட்டிலையும் பந்தியிலேயே பகிரங்கமாக பரிமாறி பகீர் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப் புரட்சியை செய்திருப்பது, “போதையை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் என்பது இன்னுமோர் ‘சிறப்பு’.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27-ம் தேதி நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஐயனார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.