
நானி நடிப்பில் உருவாகியுள்ள படம், 'ஹிட் -தி தேர்ட் கேஸ்'. சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இதில், கேஜிஎஃப், கோப்ரா படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ராவ் ரமேஷ், பிரம்மாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். சானு ஜானி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மிக்கி ஜே மேயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மே 1-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், படம் பற்றி நானி கூறும்போது, “ஹிட் படத்தின் 2 பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கிறது. அந்தப் படங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. இது ஒரு அரிதான த்ரில்லர் படம். இன்வெஸ்ட்டிகேட் த்ரில்லர் வகையிலான இந்தப் படத்தில் அமைந்திருக்கும் எல்லா விஷயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்தப் படம் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னர். ஆனாலும் வழக்கமான கமர்ஷியல் படமாக இருக்காது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.