• April 29, 2025
  • NewsEditor
  • 0

தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள்… கேப்டன் சஞ்சு சாம்சன் காயம்… வெற்றிபெற்றிருக்க வேண்டிய 2 போட்டிகளைக் கோட்டை விட்டது என சுழலில் சிக்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று தோற்றால் மொத்தமாக பிளே-ஆஃப் கனவை மறந்துவிடலாம் என்ற நிலை. இப்போது ஐந்து போட்டிகளை வென்றாலும் மற்ற முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைய வேண்டியாக இருக்கும். ஆனால், மறுபுறத்தில் தன்னம்பிக்கையில் திளைத்து கொண்டிருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இன்று வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி குவாலிஃபையர் 1 வாய்ப்பை நோக்கி நகரும் முனைப்பில் இருந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கைத் தேர்வுசெய்தது. அப்போதே கேப்டன் ரியான் பராக் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருக்கலாம் என்பதைக் கூறிவிட்டுச் சென்றிருந்தார்.

கன்சிஸ்டென்ட் டாப் 3!

வழக்கம்போல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்க்களைத் தவிர்த்து நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடி, பவர்பிளேவில் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். ஆறு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்களைக் குவித்தது சாய் சுதர்சன் – சுப்மன் கில் கூட்டணி. பவர்பிளேவுக்குப் பிறகு கியரை மாற்றி ரன்களைக் குவிக்கத் தொடங்கினார் கில். அவர் ஆடிய ஷாட்களிலேயே பேட்டிங்குக்கு உகந்த பிட்ச்சாக இருப்பது புரிந்தது. 11வது ஓவரில் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது முன்னாள் அணிக்கு எதிராக களத்துக்கு வந்தார் பட்லர். 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த வனிந்து ஹசரங்காவின் கடைசி ஓவரில் (15வது ஓவர்) பட்லரின் அதிரடியால் 24 ரன்கள் அடிக்கப்பட்டது. 200 நோக்கி வேகமாக நகர்ந்தது. கில் 84 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த பட்லர் 209 என்ற நல்ல ஸ்கோருக்குக் குஜராத் அணியை எடுத்துச் சென்றார். டாப் 3 பேட்டர்கள் குஜராத்தை எப்போதும்போல் கரையேற்றியிருந்தனர். ஆனால், அதன்பிறகு பட்லர் கொடுத்த பேட்டியில் ஒரு செய்தி இருந்தது. ‘இது நல்ல ஸ்கோர்தான். ஆனால், இது மிகவும் நல்ல பிட்ச், பனி வரவும் வாய்ப்பிருக்கிறது. நாங்கள் சிறப்பாகப் பந்துவீச வேண்டும்’ என்று அவர் பேசியிருந்தார்.

அதிரடி சூர்யவன்ஷி

பட்லர் ஏன் அப்படிப் பேசினார் என்பது இரண்டாவது இன்னிங்ஸில் புரிந்தது. ‘சிமெண்ட் தரை பிட்ச்சில் யாருக்கு பாஸ் நீங்கள் அடித்தளம் அமைத்தீர்கள்?’ என்பதுபோல் பந்தை நாலாபக்கமும் சிதறடித்தது ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி கூட்டணி. கில்-சுதர்சன் ஆடியதற்கு நேரெதிர் ஆட்டம் இது. எதிர்பார்த்தபடி எதிரணிக்கு வாய்ப்புகளையும் வழங்கியது இந்தக் கூட்டணி. இஷாந்த் சர்மாவின் பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எளிதான கேட்ச்சைக் கோட்டைவிட்டார் பட்லர். அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே தனது நோக்கம் என்ன என்பதைக் காட்டிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்களை சிங்கிள்போல் அடிக்கத் தொடங்கினார். அதிரடியாக ஆடும் ஜெய்ஸ்வால் மெதுவாக ஆடும் தோற்றத்தை ஏற்படுத்தினார். முதல் போட்டியில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றபோது அவர் கலங்கியது எதற்கு என்பது இப்போது புரிந்தது. தன்னால் இன்னும் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை எதிரணிக்குக் காட்டினார். 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மறுபுறம் ஜெய்ஸ்வாலும் ஒத்துழைக்கப் பவர்பிளேவில் 87 ரன்களை எட்டியது ராஜஸ்தான் அணி. முதுகுப்பிடிப்பு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் களத்தில் கேப்டன் கில் இல்லாததும் அவர்களுக்கு உதவவில்லை.

வைபவ் சூர்யவன்ஷி

‘இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு’ என அப்போதே குஜராத் வீரர்கள் சோர்வடைந்ததைப் பார்க்க முடிந்தது. ரஷீத் கான் மட்டுமே இவர்கள் அதிரடியில் இருந்து தப்பியிருந்தார். 10வது ஓவர் வீச வந்த கரீம் ஜன்னத் ஓவரில் மூன்று ஃபோர், மூன்று சிக்ஸர் அடித்துத் தேவைப்பட்ட ரன்ரேட்டை அப்போதே 6 ரன்களுக்குக் கொண்டுவந்துவிட்டார் வைபவ். இதற்குப் பிறகும் தோற்க வாய்ப்பில்லை என்ற நிலையை எட்டியது ராஜஸ்தான். 35 பந்துகளில் சதத்தை எட்டினார் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான சதம் இது. கெய்ல் 30 பந்துகளில் சதமடித்ததே சாதனை. இவரிடமும் ஒரு கரீபிய வீரருக்கான பாணி இருக்கிறது. அவர் பேட்டை வீசும் விதத்தைப் பார்த்தால் அது புரியும்.

வைபவ் சூர்யவன்ஷி

200+ இலக்கை 16வது ஓவரிலேயே எட்டியது ராஜஸ்தான். குஜராத் மொத்தமாக அடித்த 11 சிக்ஸர்களைத் தனி ஆளாக அடித்திருந்தார் வைபவ் சூர்யவன்ஷி. ‘பாஸ் பேபி’ என இப்போதே இவருக்கு வர்ணனையில் பெயர் வைத்துவிட்டனர். ராஜஸ்தான் அணி என்றில்லாமல் சர்வதேச அரங்கிலும் இந்தச் சிறுவனுக்குப் பெரிய எதிர்காலம் இருப்பதாகவே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். குஜராத் அணி இன்று நாம் என்ன அப்படி தவறாக செய்துவிட்டோம் என யோசித்து கொண்டிருக்கும்.

வைபவ் சூர்யவன்ஷி

பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லையென்று ஆகிவிட்டதால் என்னவோ, இன்னும்கூடப் பயமில்லாமல் ஆடியது ராஜஸ்தான். இதையே சன்ரைசர்ஸ், சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளும் செய்ய நினைத்தால் இந்த சீசனின் கடைசிக் கட்டம் விறுவிறுப்பானதாக அமையும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *