• April 28, 2025
  • NewsEditor
  • 0

‘அசத்தல் வைபவ் சூர்யவன்ஷி!’

‘Everyone is a spectator here!’ இந்த வர்ணனைதான் கமெண்ட்ரியில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. ஆம், வைபவ் சூர்யவன்ஷி ஒற்றைக் காலை க்ரீஸூக்குள் ஊன்றி அடித்த பெரிய சிக்சர்களும் அதன்வழி அவர் எட்டிய சதமும் அப்படியானதாக இருந்தது. 14 வயதில் அவர் ஐ.பி.எல் இல் நிகழ்த்தியிருப்பது மாயாஜாலம். வெறும் 35 பந்துகளில் அவர் சதத்தை எட்டியிருக்கிறார்.

Vaibhav Suryavanshi

‘என்னுடைய கண்களை அவரது ஆட்டத்திலிருந்து அகற்றவே முடியவில்லை…நான் எதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’ என மெய்மறந்து வைபவ்வை பாராட்டியிருக்கிறார் ஹர்ஷா போக்லே.

லக்னோ அணிக்கெதிரான அறிமுக ஆட்டத்தில் ஷர்துல் தாகூருக்கு அவரது ஐ.பி.எல் கரியரின் முதல் பந்தை சிக்சராக்கிய போதே கிரிக்கெட் உலகம் மொத்தமும் அவரை வியந்து பார்த்தது. அடுத்த ஒன்றிரண்டு வாரத்திலேயே இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்கிறார். மொத்தம் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிக்கள். வேகப்பந்து வீச்சாளர்களை பின்னங்காலை க்ரீஸூக்குள் ஊன்றியும் ஸ்பின் பௌலர்களை முட்டி போட்டும் வெளுத்தெடுத்தார்.

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

இத்தனைக்கும் குஜராத் டைட்டன்ஸின் பௌலிங் லைன் அப் அனுபவமும் இளமையும் ஒரு சேர அமையப்பெற்றது. இஷாந்த் சர்மாவின் அனுபவத்தில் முக்கால்வாசிதான் வைபவ்வின் வயது. அவரின் ஒரு ஓவரில் மட்டும் 28 ரன்களை எடுத்திருந்தார். அறிமுக வீரர் கரீம் ஜன்னத்தின் ஒரே ஓவரில் 30 ரன்கள்.

வாஷிங்டன்னில் ஒரே ஓவரில் 16 ரன்கள் என எதிர்கொண்ட ஓவர்களையெல்லாம் பெரிய பெரிய ஓவர்களாக மாற்றினார். அதன் வழி 35 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். ஐ.பி.எல் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது. 101 ரன்களில் பிரஷித் கிருஷ்ணாவின் பந்தில் போல்டை பறிகொடுத்து வெளியேறினார். வைபவ்வின் ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி 16 வது ஓவரிலேயே 210 ரன்களை சேஸ் செய்து முடித்தது.

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

வைபவை யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்லின் ஜூனியர் வெர்ஷன் என குறிப்பிடும் வகையில் ‘Boss Baby’ என கமெண்ட்ரியில் பெயர் வைத்திருக்கிறார்கள். வைவப்பின் ஆட்டத்தை பார்க்கையில் கெய்லின் சாயல் தெரியத்தான் செய்கிறது!

வாழ்த்துகள் வைபவ்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *