
2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து இன்று வரை போராடி வருகிறது.
இடையில் எத்தனையோ சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தும், எதற்கும் பலனில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அப்போது தான், அமெரிக்கா அதிபர் தேர்தல் பிரசார அலை அனலடிக்க தொடங்கியது. அமெரிக்காவின் அதிரடி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப், ‘நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்’ என்று பிரசாரத்தில் பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்தப்போது, அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸை சந்தித்து ஆதரவு கேட்டார்.
அப்போது, ட்ரம்ப், “ரஷ்ய அதிபர் புதின் எனக்கு நல்ல நண்பர். போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளில் நிச்சயம் ஈடுபடுவேன்” என்று ஜெலன்ஸ்கிக்கு உறுதி கொடுத்திருந்தார்.
சொன்னது மாதிரியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், பேச்சுவார்த்தைகளையும், முன்னெடுப்புகளையும் தொடர்ந்து எடுத்துவந்தார் ட்ரம்ப்.
முற்றிய சண்டை
இதன் நிமித்தமாக, கடந்த பிப்ரவரி மாதக் கடைசியில், ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு பயணமானார். பேச்சுவார்த்தையின் ஆரம்பம் நன்றாக தொடங்க, போகப்போக, ‘அமெரிக்காவின் முன்னாள் முட்டாள் அதிபர் ஜோ பைடன் உங்கள் மீது அதிகப் பணத்தை செலவளித்து விட்டார்” என்று ட்ரம்ப்பின் வார்த்தைகள் தடித்தன.
‘நாங்களே பார்த்துகொள்கிறோம்’ என்று கிளம்பிச் சென்ற ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யாவை தவிர ஒட்டுமொத்த ஐரோப்ப நாடுகளும் ஆதரவு தெரிவித்தது.
அடுத்த ஓரிரு நாள்களிலேயே, அமெரிக்காவிடம் வெள்ளைக்கொடி காட்டினார் ஜெலன்ஸ்கி. அதே சமயத்தில், ரஷ்ய அதிபர் புதினும் போர் நிறுத்தத்திற்கு கொஞ்சம் இறங்கிவந்தார்.
இதனை தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா சென்றனர். அதுவும் ஓரளவு வெற்றி தான்.
ஆனால், அதன் பின்னர் என்னவோ, இரு நாடுகளும் நிபந்தனைகளை மாற்றி மாற்றி அடுக்க, மீண்டும் போர் சூடு பிடிக்கத் தொடங்கியது.

பரஸ்பர வரி விதிப்பு
இந்த நிலையில் தான்,’உலக நாடுகள் அமெரிக்காவிடம் அதிக வரிகளை வசூலிக்கிறது… அமெரிக்கப் பொருளாதாரத்தை முன்னேற்றுகிறேன்’ என்று உலக நாடுகளின் மீது பரஸ்பர வரிகளை அறிவித்தார் ட்ரம்ப். உக்ரைன் உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு இந்தப் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மட்டும் இடம்பெறவே இல்லை.
ட்ரம்ப் – புதின் நட்பு
இந்த இடத்தில் நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும். அமெரிக்காவும், ரஷ்யாவும் எதிர் எதிர் துருவங்கள் என்பது உலகம் அறிந்ததே.
ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பொறுத்தவரை, ட்ரம்ப்பிற்கு முன்னாள், ட்ரம்ப்பிற்கு பின்னாள் என பிரிக்கலாம். ஜோ பைடன் ஆட்சியில் முற்றிலும் ரஷ்யாவிற்கு எதிராக இருந்த அமெரிக்கா. ட்ரம்ப் ஆட்சியில் ரஷ்யாவிற்கு ஆதரவாக மாறியது. இதற்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளும், ட்ரம்ப்பின் பேச்சுகளும் நல்ல உதாரணம்.
இந்த அனைத்திற்கும் பின்னால் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் ட்ரம்ப்பின் நட்பு தான் உள்ளது.
கடந்த வாரம், லண்டனில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அமெரிக்கா முன்வைத்த இரண்டு அம்சங்களையும் நிராகரித்தனர் உக்ரைனும், அதன் அதிபர் ஜெலன்ஸ்கியும்.
அவை,
1. கிரிமியா ரஷ்யாவின் பகுதியாகவே தொடரும்.
2. உக்ரைன் நேட்டோ படையில் சேர முடியாது.

இது இரண்டும் ரஷ்யாவிற்கு சாதகமான நிலைப்பாடு என்பதை தாண்டி, இரண்டுமே போர்களுக்கான ஆரம்பப்புள்ளிகள்.
2014-ம் ஆண்டு, ரஷ்யா – உக்ரைன் போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது கிரிமியா தான். உக்ரைன் பிரதேசமான கிரிமியாவை ரஷ்யா பிடிக்கவே, அத்தனையும் தொடங்கியது.
2022-ம் ஆண்டு உக்ரைன் நேட்டோ படையில் சேர முயற்சிகள் செய்ய, ரஷ்யா முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், போர் தொடுத்தது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துகொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்த உக்ரைனுக்கு, அதுவரை ட்ரம்ப்பின் வசனமாக இருந்த ‘பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகும்’ என்பதை அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸ் கூறினார்.
ரஷ்யாவின் தாக்குதல்
அமெரிக்காவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியில் முடிய வேண்டும் என்று மல்லுக்கட்டி கொண்டிருக்க, ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடர்ந்துகொண்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “கீவ் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை. இது தேவையில்லாதது மற்றும் மிக தவறான நேரம் இது. நிறுத்துங்கள்! ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் இறக்கிறார்கள். அமைதி ஒப்பந்தத்தை முடிப்போம்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை, போப் ஆண்டவர் இறுதி ஊர்வலத்தில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர். இதனையடுத்து தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப், “புதினுக்கு போரை நிறுத்த வேண்டாம் போலும். பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்று கடுமையாக சாடியிருந்தார்.
நேற்றும் கூட, உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் ‘உக்ரைன் தொடர் தோல்விகளை சந்திக்கும்’ என்றும் எச்சரித்துள்ளது ரஷ்யா.
இதிலேயே ட்ரம்ப் கூறியது உறுதியாகி விட்டது. அதாவது, போர் நிறுத்தத்தை புதின் விரும்பவில்லை என்பது.
உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா என்னவாகும்?
இந்தப் போர் முடியாதது உக்ரைனுக்கு பெரும் பாதிப்பு. ரஷ்யாவை விட, சிறிய நாடான உக்ரைன் தன் சக்திக்கு மீறி, பிற நாடுகளின் உதவியுடன் போரிட்டு வருகிறது. இதில் முக்கியமானது அமெரிக்காவின் ஆதரவு. ட்ரம்ப் இந்த ஆதரவை தொடர விரும்பவில்லை. அதனால், இந்தப் போர் நீடித்தால் உக்ரைன் கடும் பாதிப்படையும்.
ஏற்கெனவே பல நாடுகளின் கெடுபிடிகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் தள்ளாடி வருகிறது. இன்னும் இதைத் தொடர்ந்தால், ரஷ்யா நிச்சயம் தடுமாறும்.
மேலும், ட்ரம்ப் ரஷ்யாவின் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற ஒரு சின்ன துப்பை கொடுத்துள்ளார். இதுவும் நடந்தால் நிச்சயம் ரஷ்யாவின் நிலைமை மோசம் தான்.
ட்ரம்ப் தான் சொல்லியதை நடத்தி காட்ட வேண்டும் என்கிற அணுகுமுறையை கொண்டவர். இதனால், அவர் போருக்கு உதவி செய்தாலும், புதின் உடனான தனது நட்பை கெடுத்துகொள்வார். போரை விட்டு விலகினாலும், ‘உக்ரைன் அமெரிக்காவால் பாதிக்கப்படுகிறது’ என்ற பெயரை சம்பாதிப்பார். ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் விஷயத்தில் இந்தப் பெயரை அமெரிக்கா சம்பாதித்தது.
இந்த முக்கோண நிலைமை எதில் போய் முடிவடையும் என்பது அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள் கைகளில் தான் உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
