
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.
பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார் உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷண் விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது. பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செஃப் தாமு, “மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்னு சொல்வாங்க. இந்த பத்மஶ்ரீ விருதப் பெற்றதை நான் சாதித்ததாக நினைக்கிறேன்.
நாட்டின் பெருமைமிகுந்த விருது. இது வாழ்நாள் சாதனை விருது. விருது வழங்க என் பெயரை அழைக்கும்போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, உணர்ச்சி வசப்பட்டுப்போனேன் நான்.
அதுவும் எனது சமையல் துறையிலிருந்தே இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்குது. தமிழ்நாட்டிலிருந்து விருது வாங்கியவன் என்கிற முறையில ரொம்பப் பெருமையாக இருக்கு.
எதிர்காலத்தில் என்னைப்போல சமையல் துறையில் நிறையபேர் சாதனை செய்து, இதுபோல விருதுகளைப் பெற நான் ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறேன். இந்தவிருதை சமையல் கலைஞருக்கும், என்னுடைய மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.