• April 28, 2025
  • NewsEditor
  • 0

பிடித்த வேலையை செய்வதற்காக சிலர் அதிக சம்பளத்தில் இருக்கும் வேலையை கூட ராஜினாமா செய்வதுண்டு. அப்படித்தான் ஹரியானாவில் வாலிபர் ஒருவர் தனக்கு பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஹரியானா மாநிலம் மொகதாபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த அமித் பதனா என்பவர் வங்கியில் நிரந்தர சம்பளத்தில் இருந்தார். அவரது குடும்பம் பால் வியாபாரம் செய்யக்கூடியது. எனவே அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் வியாபாரம் செய்து வந்தார். அமித்திற்கு வாகனங்கள் என்றால் மிகவும் விருப்பம். குடும்பத் தொழிலையும் கைவிட விருப்பமில்லை. எனவே அமித் தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர பால் வியாபாரியாக மாறிவிட்டார். வாகனங்கள் மீது தனக்கு இருக்கும் பிரியத்தை பால் வியாபாரத்தில் கலந்துவிட்டார்.

அதாவது பால் வியாபாரத்திற்காக சொந்தமாக கார் ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். அதுவும் சாதாரண கார் கிடையாது. ஆடி கார் வாங்கி அதில் சென்று பால் சப்ளை செய்து வருகிறார். அமித்திற்கு வாகனங்கள் மீது இருந்த பிரியம் காரணமாக முதலில் ஹார்லே டேவிட்சன் பைக் ஒன்றை வாங்கி அதில் பால் வியாபாரம் செய்து வந்தார். டேவிட்சன் பைக்கில் சென்று அமித் பால் சப்ளை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பால் டெலிவரி செய்யும் இடமும் அதிகரித்தது. இதையடுத்தே பால் டெலிவரி செய்ய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை விலைக்கு வாங்கினார்.

இது குறித்து அமித் கூறுகையில்,”கார் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு, எனது ஆர்வத்தை என்னால் விட்டுவிட முடியாது. இப்போது நான் எனது ஆர்வத்தை குடும்பத் தொழிலுடன் இணைத்துவிட்டேன், இதன் காரணமாக நான் சம்பாதிக்கிறேன், எனது பொழுதுபோக்கும் நிறைவேறி வருகிறது. பால் விற்பனை செய்வதற்காக வெட்கப்படவில்லை. எனது குடும்பத்தினரும் எனக்கு உதவியாக இருக்கின்றனர்”என்று அவர் கூறினார். அமித்திடம் கடந்த 13 வருடங்களாக பால் வாங்கும் வாடிக்கையாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், “முதலில் பால் சப்ளை செய்ததற்கும், இப்போது பால் சப்ளை செய்வதற்கும் ஒரு வித்யாசம்தான் இருக்கிறது. முதலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பைக்கில் வந்து பால் சப்ளை செய்தார். இப்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காரில் வந்து பால் சப்ளை செய்கிறார்” என்றார். தினமும் 120 லிட்டர் பால் சப்ளை செய்கிறார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *