
கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து சுமார் 50 லட்சம் மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டன. அதனடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அதன் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன், விஜய ராகவன் ஆகியோரைக் கைது செய்தனர்.
ஆப் முடக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து பணம் கொடுக்காமல் இருந்து வருகிறது. இதையடுத்து, MyV3Ads நிறுவனம், பொது மக்களிடம் முதலீட்டுத் தொகை பெற்று ஏமாற்றியது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காதவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளிக்கலாம் என்று காவல்துறை ஏற்கெனவே கூறியிருந்தது. இன்று தெலங்கானா மாநிலத்தில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “MyV3Ads நிறுவனத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் ஏமாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காத பொது மக்கள், உடனடியாக கோயமுத்தூர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில்,

பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் நேரில் வந்து துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம்.” என்று கூறியுள்ளது.